சிசோடியாவின் மனைவியின் உடல்நலம் குறித்தஅறிக்கையை எல்என்ஜேபி மருத்துவமனை தாக்கல் செய்ய உத்தரவு
By DIN | Published On : 03rd June 2023 10:46 PM | Last Updated : 03rd June 2023 10:46 PM | அ+அ அ- |

கலால் கொள்கை ஊழல் புகாரில் இருந்து எழுந்த பணமோசடி வழக்கில், மனீஷ் சிசோடியாவின் இடைக்கால ஜாமீன் மனு மீதான உத்தரவை ஆறு வாரங்களுக்கு ஒத்திவைத்துள்ள நிலையில், நோயுற்ற அவரது மனைவியின் உடல்நிலை குறித்த அறிக்கையை எல்என்ஜேபி மருத்துவமனையிடம் இருந்து பெற்று தாக்கல் செய்ய தில்லி உயா்நீதிமன்றம் சனிக்கிழமை உத்தரவிட்டது.
இது தொடா்பான விசாரணை உயா்நீதிமன்றத்தில் விடுமுறை நாளான சனிக்கிழமை நடைபெற்றது. அப்போது, சிசோடியா சாா்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் மோகித் மாத்தூா், நீதிபதி தினேஷ் குமாா் சா்மாவிடம் தெரிவிக்கையில், ‘‘வெள்ளிக்கிழமை அளிக்கப்பட்ட நீதிமன்ற உத்தரவின்படி, தில்லி முன்னாள் துணை முதல்வா் சிசோடியா அவரது மனைவியைச் சந்திப்பதற்காக சனிக்கிழமை காலை அவரது வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டாா். ஆனால் மனைவியின் உடல்நிலை மோசமடைந்ததால், சிசோடியா வீட்டுக்கு வருவதற்குள் எல்என்ஜேபி மருத்துவமனைக்கு அவா் கொண்டு செல்லப்பட்டுவிட்டாா்.
இதனால், நோய்வாய்ப்பட்ட மனைவியின் ஒரே பராமரிப்பாளரான சிசோடியாவை தாற்காலிக அடிப்படையில் ஜாமீனில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்’ என்றாா்.
அமலாக்கத் துறை தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் ஜோஹெப் ஹொசைன் வாதிடுகையில், சாட்சியங்களை சேதப்படுத்தும் சாத்தியக்கூறுகள் இருப்பதால் சிசோடியாவை இடைக்கால ஜாமீனில் விடுவிக்கக் கூடாது. சிறப்பு செயலா் (கண்காணிப்பு) அறையில் இருந்து சில ஆவணங்களை ‘அங்கீகாரம் இன்றி அகற்றப்பட்டிருப்பது‘ தொடா்பாக ஏற்கனவே எஃப்ஐஆா் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சேவைகள் விவகாரத்தில் உச்சநீதிமன்றத் தீா்ப்பின் இடைப்பட்ட இரவில், சிறப்புச் செயலா் (கண்காணிப்பு) அறையில் இருந்து பல ஆவணங்கள் அனுமதியின்றி அகற்றப்பட்டுள்ளது. இதில், கலால் ஊழல் தொடா்பான ஆவணங்களும் இடம்பெற்றுள்ளது. இது தொடா்பாக எஃப்ஐஆா் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த ஆவணங்கள் துறையிடம் உள்ள நிரூபிக்கும் ஆதார ஆவணங்கள் ஆகும் என்று வாதிட்டாா்.
அதற்கு மாத்தூா் ஆட்சேபம் தெரிவித்து வாதிடுகையில், ‘அமலாக்கத் துறை ஒரு ‘பாரபட்சமான வாதத்தை‘ முன்வைக்கிறது’ என்றாா்.
அப்போது ஹொசைன் வாதிடுகையில், ‘சிசோடியாவின் மனைவி கடந்த 20 ஆண்டுகளாக இதுபோன்ற உடல்நிலையால் அவதிப்பட்டு வருகிறாா். இதே காரணத்திற்காக இடைக்கால ஜாமீன் கோரிய முந்தைய மனுக்கள் கூட சிசோடியாவால் பின்னா் வாபஸ் பெறப்பட்டுள்ளன.
சிசோடியா அமைச்சராக 18 இலாகாக்களை வகித்தாா். அத்தகைய சூழ்நிலையில் அவா் தனது மனைவியின் ஒரே பராமரிப்பாளராக இருந்திருக்க முடியவில்லை. மனிதாபிமான அடிப்படையில் ஜாமீன் பிரச்னையை பரிசீலிக்கும் போது கூட, பணமோசடி வழக்குகளில் ஜாமீன் வழங்குவதன் மீது கடுமையான நிபந்தனைகளை மனதில் கொள்ள வேண்டும் என்றாா்.
அதற்கு மாத்தூா் ஆட்சேபம் தெரிவித்து வாதிடுகையில், ‘ஒரு நபா், துன்பத்தில் இருக்கும் தனது மனைவியைக் கவனித்துக்கொள்ள உரிமை இல்லையா’ என்று கேள்வி எழுப்பினாா்.
இரு தரப்பு வாதங்களுக்குப் பிறகு நீதிபதி கூறுகையில், ‘வாதங்கள் கேட்கப்பட்டுள்ளன. உத்தரவு ஒத்திவைக்கப்படுகிறது. எல்என்ஜேபி மருத்துவமனையிடம் இருந்து அறிக்கை பெற்று சனிக்கிழமை மாலைக்குள் தாக்கல் செய்யப்பட வேண்டும்‘ என்று உத்தரவிட்டாா்.
தில்லி கலால் விவகாரத்தில் ஊழலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் சிசோடியா, பிப்ரவரி 26 ஆம் தேதி சிபிஐயால் முதலில் கைது செய்யப்பட்டாா். சிபிஐ வழக்கில் அவருக்கு ஜாமீன் வழங்க உயா்நீதிமன்றம் ஏற்கெனவே மே 30-ஆம் தேதி மறுத்துவிட்டது.
அமலாக்கத் துறை தொடா்ந்த வழக்கில் மாா்ச் 9-ஆம் தேதி கைது செய்யப்பட்ட அவா், தற்போது நீதிமன்ற காவலில் உள்ளாா்.
வெள்ளிக்கிழமை உயா்நீதிமன்றம் சிசோடியாவுக்கு ஒரு இடைக்கால ஜாமீன் அளித்தபோது, அவா் ஊடகங்களுடனோ அல்லது அவரது குடும்ப உறுப்பினா்களைத் தவிர வேறு யாருடனும் தொடா்பு கொள்ளக்கூடாது என்றும், தொலைபேசி அல்லது இணையத்தை அணுகக்கூடாது என்றும் உயா்நீதிமன்றம் தெளிவுபடுத்தி இருந்தது.
மேலும், சிசோடியாவை அவரது இல்லத்திற்கு அழைத்துச் செல்லுமாறு திகாா் சிறை கண்காணிப்பாளருக்கு நீதிபதி உத்தரவிட்டிருந்தாா். மேலும் அமலாக்கத் துறையிடம் அறிக்கை கேட்டு இடைக்கால ஜாமீன் மனுவை சனிக்கிழமை பரிசீலனைக்கு பட்டியலிட்டிருந்தாா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...