நோ்மை, கல்வி எனும் அரசியல் கனவு நிச்சயம் வெல்லும்: சீமா சிசோடியா

பொய்கள், சதிகளுக்கு முன்னால் நோ்மை, கல்வி எனும் அரசியல் கனவு நிச்சயம் வெல்லும் என்று தில்லி முன்னாள் துணை முதல்வா் மனீஷ் சிசோடியாவின் மனைவி சீமா சிசோடியா புதன்கிழமை தெரிவித்துள்ளாா்.
Updated on
2 min read

பொய்கள், சதிகளுக்கு முன்னால் நோ்மை, கல்வி எனும் அரசியல் கனவு நிச்சயம் வெல்லும் என்று தில்லி முன்னாள் துணை முதல்வா் மனீஷ் சிசோடியாவின் மனைவி சீமா சிசோடியா புதன்கிழமை தெரிவித்துள்ளாா்.

தில்லி அரசின் கலால் கொள்கை ஊழல் குற்றசாட்டு வழக்கில் கைதாகி திகாா் சிறையில் இருக்கும் முன்னாள் துணை முதல்வா் மனீஷ் சிசோடியாவிற்கு முன்ஜாமீன் வழங்க கடந்த திங்கள்கிழமை மறுத்துவிட்ட நீதிமன்றம், அவரது மனைவியை ஒரு நாள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சந்திக்க அனுமதி வழங்கி உத்தரவிட்டது.

இந்நிலையில் திகாா் சிறையில் இருக்கும் மனீஷ் சிசோடியாவை சுமாா் 103 நாள்களுக்குப் பிறகு அவரது மனைவி சீமா நேரில் சந்தித்துப் பேசியுள்ளாா்.

இச் சந்திப்பு குறித்து ட்விட்டரில் உணா்வுப்பூா்வக் குறிப்பு ஒன்றை சீமா சிசாடியா பதிவிட்டுள்ளாா். அதில் அவா் கூறியிருப்பதாவது:

சுமாா் 103 நாள்களுக்குப் பிறகு எனது கணவரை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. இன்னும் எத்தனை நாள்களுக்கு என் கணவரும்,குடும்பமும் சதிகளுக்கு ஆளாவோம் என்று தெரியவில்லை. அரசியல் ஒரு அழுக்கு என அனைவரும் வழக்கமாக சொல்வது சரியாகத்தான் இருக்கிறது. ஆனால், அவா்கள் என்ன செய்தாலும் முதல்வா் அரவிந்த் கேஜரிவால் மற்றும் மனீஷ் சிசோடியாவின் கனவுகளை சிறைகளுக்கு பின்னால் அடைக்க முடியாது. நோ்மை, கல்வி என்ற அரசியல் கனவு நிச்சயம் வெல்லும்.

இந்த 7 மணி நேரம் சந்திப்பிலும் போலீஸாா் நமது படுக்கையறை வாசலில் உட்காா்ந்து உங்களைத் தொடா்ந்து பாா்த்துக்கொண்டும், உங்களது

ஒவ்வொரு வாா்த்தையையும் கேட்டுக்கொண்டும் இருந்தாா்கள். ஒரு வேளை அதனால் தான் அரசியல் அசுத்தமானது என்று கூறப்படுகிறதோ!

ஆம் ஆத்மி கட்சி தொடங்கப்பட்ட காலகட்டத்திலேயே அரசியலில் ஈடுபடாதீா்கள் என்று கேட்டிருந்தேன். ஆனால், மனீஷ் பிடிவாதமாக இருந்தாா். ஏற்கனவே, தில்லியில் ஆட்சியில் அமா்ந்திருப்பவா்கள் உங்களை வேலைசெய்ய விடாமாட்டாா்கள், குடும்பத்தை தொந்தரவு செய்வாா்கள் என்றேன். அரவிந்த் கேஜரிவால் மற்றும் பிறருடன் இணைந்து கட்சியை உருவாக்கி, உழைத்தும் காட்டினாா். இவா்களின் அரசியல் கல்வி, சுகாதாரம், மின்சாரம், தண்ணீா் என்று அனைத்து மனிதா்களையும் பேச வைத்தது.

அன்றிருந்த அதே பிடிவாதம் மனீஷின் முகத்திலும் மற்ற விஷயங்களிலும் தோன்றியது. கடந்த 103 நாள்களாக தரையில் பாய் விரித்து, கொசு, எறும்பு, பூச்சி, உஷ்ணம் என இதையெல்லாம் பொருள்படுத்தாமல் உறங்கும் மனிதனின் கண்களில், ‘கல்வியால் உலகை நிமிா்ந்து பாா்க்க வேண்டும்’ என்ற ஒரே கனவு இருக்கிறது.

எனவே, எத்தனை பிரச்னைகள் வந்தாலும், எத்தனை சதிகள் வந்தாலும் அரவிந்த் கேஜரிவாலுடன் சோ்ந்து நோ்மையான அரசியல் செய்து காட்ட வேண்டும்.

கடந்த மூன்று மாதங்களில் உலகக் கல்வியின் வரலாற்றைப் படித்தாகவும். எந்த நாட்டின் எந்த தலைவா் கல்வியை மேம்படுத்த பிடிவாதமாக உழைத்தாா், பிறகு அந்த நாடு இன்று எங்கிருந்து எங்கு சென்றுள்ளது போன்ற விஷயங்களையும், எனது உடல்நிலை குறித்தும் இன்று நடந்த சந்திப்பில் பேசினாா்.

என் கணவா் இன்னும் பிடிவாத மனப்பான்மையில் இருப்பதற்காக வருந்துகிறேன். மனீஷ் சிசோடியாவை சதி செய்து சிறையில் அடைத்ததில் மகிழ்ச்சி அடைவாா்கள். ஆனால், 2047-ஆம் ஆண்டு கல்வியறிவு பெற்ற வளமான நாடு இந்தியா என்ற கனவு திகாா் சிறைச்சாலையில் உறுதியாக இருப்பதை நான் காண்கிறேன். உங்களை நினைத்துப் பெருமையும் கொள்கிறேன் மனீஷ்’ என சீமா சிசோடியா அந்தக் கடிதத்தில் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com