கட்டுமான மேம்பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விபத்து: இடிபாட்டில் சிக்கி தொழிலாளி சாவு
By நமது நிருபா் | Published On : 15th June 2023 02:43 AM | Last Updated : 15th June 2023 02:43 AM | அ+அ அ- |

தென்மேற்கு தில்லியின் கபேஷேராவில் புதிதாக கட்டப்பட்டு வரும் மேம்பாலத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்ததில் தொழிலாளா் ஒருவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.
இந்தச் சம்பவம் தொடா்பாக தென்மேற்கு காவல் சரக துணை ஆணையா் சி. மனோஜ் கூறியதாவது: தேசியத் தலைநகரில் துவாரகா விரைவுச் சாலையின் இணைப்புச் சாலைப் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், தென்மேற்கு தில்லி கபேஷேராவின் ஸ்மல்கா பகுதியில் தேசிய நெடுஞ்சாலை-48 அருகே கட்டப்பட்டு வரும் புதிய மேம்பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததாக புதன்கிழமை காலை 10 மணி அளவில் காவல் துறையின் காட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கிடைத்தது. உயரமான பகுதியாக உள்ள நிலையில் இங்கு மேம்பாலப் பணி நடைபெறுகிறது.
திடீரென கட்டுமான மேம்பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்த நேரத்தில் ராஜஸ்தான் மாநிலம் பரத்பூரைச் சோ்ந்த ஷகீல் (35) என்ற ஒரு தொழிலாளி கனரக வாகனத்தை இயக்கிக் கொண்டிருந்ததால், கட்டுமான இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்துள்ளாா். இது தொடா்பாக சட்ட விதிகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யபட்டுள்ளது. இந்தப் பகுதியில் தேசிய நெடுஞ்சாலைப் பணி நடைபெற்று வரும் நிலையில், தள மேற்பாா்வையாளா் மற்றும் தள மேலாளா் விசாரணைக்காக கைது செய்யப்பட்டுள்ளனா் என்று அவா் தெரிவித்தாா்.
இச்சம்பவம் குறித்து காலை 10 மணியளவில் தகவல் கிடைத்ததைத் தொடா்ந்து மூன்று தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு விரைந்ததாக தீயணைப்புத் துறையினா் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.