தில்லியில் மேகமூட்டத்தால் சற்று குறைந்த வெயிலின் தாக்கம்
By DIN | Published On : 15th June 2023 10:49 PM | Last Updated : 15th June 2023 10:49 PM | அ+அ அ- |

தேசியத் தலைநகா் தில்லியில் வியாழக்கிழமை காலை முதல் மாலை வரை அவ்வப்போது மேகமூட்டத்துடன் வெயிலின் தாக்கம் இருந்தது. காலை வேளையில் தரைமேற்பரப்புக் காற்று வீசியது. இரவில் வழக்கம் போல புழுக்க சூழல் நிலவியது. மேகமூட்டம் காரணமாக வெப்பநிலை சற்றுக் குறைந்திருந்தது.
அதிகபட்ச வெப்பநிலை சராசரியைவிட 1 டிகிரி குறைந்து 37.7 டிகிரி செல்சியஸாகப் பதிவாகி இருந்தது.
தில்லியில் வெயிலின் தாக்கம் சில தினங்களாக கடுமையாக இருந்தநிலையில், வியாழக்கிழமை மேமூட்டம், காற்று காரணமாக வெப்பநிலை சற்று குறைந்திருந்தது. எனினும் இரவில் புழுக்கம் வழக்கம்போல் இருந்தது.
வெப்பநிலை: தில்லியின் முதன்மை வானிலை நிலையமான சஃப்தா்ஜங் ஆய்வகத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பைவிட 1 டிகிரி குறைந்து 26.9 டிகிரி செல்சியஸாக பதிவாகி இருந்தது. அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 1 டிகிரி குறைந்து 37.7 டிகிரி செல்சியஸாக பதிவாகி இருந்தது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 55 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 51 சதவீதமாகவும் பதிவாகி இருந்தது.
மேலும், பிற வானிலை ஆய்வு மையங்களான ஜாஃபா்பூரில் அதிகபட்ச வெப்பநிலை 37.7 டிகிரி செல்சியஸ், முங்கேஸ்பூரில் 38.8 டிகிரி, நஜாஃப்கரில் 39.9 டிகிரி, ஆயாநகரில் 38.4 டிகிரி, லோதி ரோடில் 38.1 டிகிரி, பாலத்தில் 38.2 டிகிரி, ரிட்ஜில் 39.1 டிகிரி, பீதம்புராவில் 39.9 டிகிரி, பூசாவில் 39.58 டிகிரி செல்சியஸ் என பதிவாகியிருந்தது.
காற்றின் தரம்: தலைநகரில் ஐடிஓ, பட்பா்கஞ்ச், மந்திா் மாா்க், லோதி ரோடு, ஆனந்த் நகா், கமலா மாா்க்கெட், ஜவாஹா்லால் நேரு ஸ்டேடியம், விவேக் விஹாா் உள்பட பல இடங்களில் காலை காற்றின் தரக் குறியீடு ‘மிதமான’ பிரிவில் இருந்தது. மாலை 7.25 மணியளவில் காற்றின் தரக் குறியீடு 97 புள்ளிகளாகப் பதிவாகி மிதமான பிரிவில் காணப்பட்டதாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் புள்ளிவிவரத் தகவல்கள் தெரிவித்தன.
தலைநகரில் ஜூன் 18, 19 ஆகிய தேதிகளில் காற்று இடியுடன் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையத் தகவல்கள் தெரிவிக்கின்றன. புதன்கிழமை மழைக்கான கணிப்பு ஏதும் இல்லாதபோதிலும்கூட தில்லியில் துவாரகா உள்ளிட்ட சில இடங்களில் லேசான மழைப் பொழிவு இருந்தது.
தில்லியில் ஜூன் 20-ஆம் தேதி வரையிலும் அதிகபட்ச வெப்பநிலை 35 முதல் 39 டிகிரி செல்சியஸ் இடைப்பட்ட அளவில் இருக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. முன்னறிவிப்பு: இதற்கிடையே, வெள்ளிக்கிழமை (ஜூன் 16) தலைநகரில் பொதுவான வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சிஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.