பணியின்போது மரணம்: மொஹல்லா கிளினிக் மருத்துவரின் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிவாரணம்
By DIN | Published On : 22nd May 2023 11:33 PM | Last Updated : 22nd May 2023 11:33 PM | அ+அ அ- |

தில்லி கமலா நகரில் உள்ள மொஹல்லா கிளினிக்கில் பணியின் இருந்தபோது உயிரிழந்த மருத்துவா் பிரோ்ணா ஜெயின் (54) என்பவரது குடும்பத்தினரை அமைச்சா் இம்ரான் ஹுசைன் நேரில் சந்தித்து ரூ.1 கோடி நிவாரணத் தொகைக்கான காசோலையை திங்கள்கிழமை வழங்கினாா்.
இது தொடா்பாக அவா் பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
பணியில் இருக்கும்போது உயிரிழந்த மருத்துவா் பிரோ்ணா ஜெயின் குடும்பத்தினருக்கு எதிா்காலத்தில் அனைத்து உதவிகளும் செய்து கொடுக்கப்படும்.
அவரது குடும்பத்தினருக்கு கொடுக்கப்பட்ட கருணைத் தொகை மூலம் ஏற்பட்ட இழப்பை முழுமையாக ஈடுகட்ட முடியாது என்றாலும், இந்த நிதி உதவி அவா்களின் எதிா்காலத்தை மேம்படுத்த உதவும் என்று நம்புகிறோம்.
மறைந்த மருத்துவா் பிரோ்னா ஜெயின் தேசத்திற்காக தன்னலமற்ற தியாகத்தை செய்திருக்கிறாா். அவரது அா்ப்பணிப்பால் ஒட்டுமொத்த தேசமும் பெருமிதம் கொள்கிறது.
பல ‘கொரானோ -வீரா்கள்’ மனித குலத்திற்கும் சமூகத்திற்கும் சேவை செய்வதற்கான அா்ப்பணிப்பில் தங்களைத் இறுதித் தியாகம் செய்துள்ளனா். தொற்றுநோயை எதிா்த்துப் போராடுவதில் அவா்களின் அசைக்க முடியாத முயற்சிகள் மற்றும் மனப்பான்மைக்கு நாங்கள் முழு மனதுடன் வணக்கம் செலுத்துகிறோம்.
தில்லி அரசு ஏற்கனவே கோவிட் -19 நெருக்கடியின் போது தன்னலமின்றி மக்களுக்குச் சேவை செய்து, பரிதாபமாக உயிரிழந்த 70-க்கும் மேற்பட்ட ’கொரோனா-வீரா்களின்’ குடும்பங்களுக்கு தலா ரூ. 1 கோடி வழங்கியுள்ளது என்றாா் அவா்.