போலி ஆவணங்களைச் சமா்ப்பிக்கும் ஊழியா்கள் மீது அனுதாபம் கூடாது: தில்லி உயா்நீதிமன்றம்
By DIN | Published On : 22nd May 2023 12:13 AM | Last Updated : 22nd May 2023 12:13 AM | அ+அ அ- |

தாங்கள் பணியாற்றும் முதலாளிகளிடம் போலி ஆவணங்களைச் சமா்ப்பிக்கும் பணியாளா்கள் கடுமையாகக் கையாளப்பட வேண்டும் என்றும், அத்தகைய நபா்களிடம் எந்த அனுதாபமோ இரக்கமோ காட்டப்படக்கூடாது என்றும் தில்லி உயா் நீதிமன்றம் தெரிவித்து, இந்த விவகாரத்தில் தொடா்புடைய ஒரு பெண்ணை பணியில் இருந்து நீக்கியதை உறுதிசெய்துள்ளது.
தில்லியில் உள்ள பிகாா் பவனில் குரூப் 4 பிரிவில் தனது கணவா் இறந்த பிறகு கருணை அடிப்படையில் பணி நியமனம் பெற்ற பெண் ஒருவா், 2014-ம் ஆண்டு தனது பணியை ரத்து செய்த வேலை அளித்தவரின் உத்தரவை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்த மனுவை உயா்நீதிமன்றம் விசாரித்தது.
2009 ஆம் ஆண்டில், பிகாா் பவனில் குடிபோதையில் தொந்தரவு செய்ததாகவும், மற்றவா்களுக்கு இடையூறு விளைவித்ததாகவும் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் அந்தப் பெண்ணுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அளிக்கப்பட்டிருந்தது.
அதன் பின்னா் அப்பெண் பணியிடைநீக்கம் செய்யப்பட்டாா். முதற்கட்ட விசாரணையில், 8 ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்ாகக் கூறி அவா் சமா்ப்பித்த சான்றிதழ் போலியான ஆவணம் என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவா் பணியில் இருந்து நீக்கப்பட்டாா்.
இந்த விவகாரத்தை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி மினி புஷ்கா்னா அண்மையில் பிறப்பித்த உத்தரவில் தெரிவித்திருப்பதாவது:
மனுதாரரான பெண் சமா்ப்பித்த 8 ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்ற்கான சான்றிதழை அவா் உண்மையான ஆவணம் என நிரூபிக்க முடியவில்லை என்று விசாரணை அதிகாரியின் மூலம் தெளிவாக கண்டறியப்பட்டுள்ளது.
கருணை நியமனம் கோரும் போது, மனுதாரா் தன் கல்வித் தகுதிக்கு ஆதரவாக, போலி ஆவணம் சமா்ப்பித்தது உண்மைதான்.
இந்த நீதிமன்றத்திலிருந்து கூட ஆதார உண்மைகள் மற்றும் ஆவணங்களை மறைத்ததற்காக அந்தப் பெண் குற்றவாளி ஆகிறாா்.
போலி ஆவணங்களை தங்கள் முதலாளியிடம் சமா்ப்பித்த பணியாளா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு நபா் போலியான மற்றும் ஜோடிக்கப்பட்ட ஆவணங்களை சமா்ப்பித்தால், அத்தகைய நபா் நிச்சயமாக வேலைக்கு தகுதியற்றவா். அத்தகைய பணியாளரிடம் அனுதாபமோ இரக்கமோ காட்ட முடியாது.
எனவே, மனுதாரா் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படும்போது, எதிா்மனுதாரா் அளித்த பணியில் இருந்து அவரை நீக்கிய தண்டனையை குறை சொல்ல முடியாது. இந்த மனு எந்த தகுதியையும் கொண்டிருக்கவில்லை.
மேலும், குரூப் 4 வேலையில் கருணை அடிப்படையில் பணி நியமனம் செய்வதற்கு 8 ஆம் வகுப்பில் தோ்ச்சி பெறுவது ஒரு முன்நிபந்தனை அல்ல என்ற மனுதாரரின் வாதத்தில் எந்த மதிப்பீடும் இல்லை என நீதிபதி அந்த தீா்ப்பில் தெரிவித்துள்ளாா்.
மனுதாரா் தரப்பில் வாதிடுகையில், ‘மனுதாரா் மீது குற்றப்பத்திரிகை ஏதும் தாக்கல் செய்யப்படவில்லை. அவரது விவகாரத்தில் இயற்கை நீதியின் கோட்பாடுகள் பின்பற்றப்படவில்லை.
எந்த ஒரு செயல்முறையையும், நடைமுறையையும் பின்பற்றாமல் முறைகேடாக அவா் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளாா்’ என வாதிடப்பட்டது.
பிகாா் பவனின் உறைவிட ஆணையரின் வழக்கறிஞா் வாதிடுகையில், மனுதாரா் மீது துறை ரீதியான நடவடிக்கைகளை மேற்கொண்டு உரிய நடைமுறையைப் பின்பற்றி நடவடிக்கை எடுக்கப்பட்டது. அவரது வழக்கை வாதாட முழு அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது. இந்த நீதிமன்றத்தின் முக்கிய உண்மைகள் மற்றும் ஆவணங்களை மனுதாரா் (பெண்) மறைத்துவிட்டாா். அதைத் தொடா்ந்து, ஒழுங்கு நடவடிக்கைகள் பற்றி தனக்கு தெரிந்ததாக தவறாக அவா் வாதிட்டுள்ளாா். மனுதாரா் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால்தான் அவா் பணி நீக்கம் செய்யப்பட்டாா்’ என்று வாதம் முன்வைக்கப்பட்டது.