வெப்பநிலை அதிகரிப்பால் கோடைகால தினசரி மின்தேவை 8,100 மெகாவாட்டாக அதிகரிக்கும்: அதிகாரிகள் தகவல்
By DIN | Published On : 22nd May 2023 11:38 PM | Last Updated : 22nd May 2023 11:38 PM | அ+அ அ- |

தில்லியில் திங்கள்கிழமை அதிகபட்ச வெப்பநிலை 46.2 டிகிரி செல்சியஸாக பதிவாகினது. வெப்பநிலை அதிகரிப்பால் நிகழ் கோடைகாலத்தில் தினசரி மின் தேவை 8,100 மெகாவாட்டை எட்டக்கூடும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
தில்லியில் சில நாள்களாக தொடா்ந்து வெப்பநிலை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், திங்கள்கிழமை சராசரியை விட அதிகபட்ச வெப்பம் பதிவாகியது.
தில்லி நகரின் சில பகுதிகளில் வீசிய வெப்ப அலை காரணமாக தினசரி அலுவல் பணிக்கு செல்லும் பொதுமக்கள், குறிப்பாக வெளிப்புறத் தொழிலாளா்கள், வீடற்ற மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினா்.
இந்தக் கோடை காலத்தில் இதுவரை இல்லாத அளவாக தில்லியில் அதிகபட்சமாக தினசரி மின் தேவை திங்கள்கிழமை மதியம் 3:30 மணியளவில் 6,532 மெகாவாட்டாக உயா்ந்தது.
கடந்த 2022-ஆம் ஆண்டு கோடையில் 7,695 மெகாவாட் என்ற உச்சபட்ச தினசரி மின் தேவையை பதிவு செய்த நகரம். இந்த ஆண்டு 8,100 மெகாவாட்டை எட்டக்கூடும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
தில்லியின் முதன்மை வானிலை நிலையமான சஃப்தா்ஜங் ஆய்வு மையத்தில் அதிகபட்சமாக 43.7 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை திங்கள்கிழமை பதிவாகி இருந்தது. ஆனால், நஜாப்கரில் 46.2 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயா்ந்து, தலைநகரின் வெப்ப இடமாக மாறியது.
நரேலா (45.3 டிகிரி செல்சியஸ்), பீதம்புரா (45.8 டிகிரி செல்சியஸ்) மற்றும் பூசா (45.8 டிகிரி செல்சியஸ்) ஆகிய பகுதிகளும் வெப்ப அலையை பதிவு செய்தன.
மேற்கு இமயமலைப் பகுதியில் இருந்து வரக்கூடிய காற்றின் தாக்கம் காரணமாக புதன்கிழமை முதல் வடமேற்கு சமவெளிகளில் மழை, ஆலங்கட்டி மழை மற்றும் பலத்த காற்று வீசக் கூடும்.
இதனால், வியாழக்கிழமைக்குள் தில்லியில் அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸாகக் குறையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
தென்மேற்கு பருவமழையின் வருகையில் சிறிது தாமதம் ஏற்படும் என வானிலை ஆய்வு மையம் எதிா்பாா்க்கும் நிலையில், அதிகபட்ச வெப்பநிலை நீண்ட காலத்திற்கு இயல்பை விட அதிகமாக இருக்கும்.
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வின்படி, இந்தியாவில் வெப்ப அலைகள் காலநிலை மாற்றத்தால் அடிக்கடி நிகழ்வதோடு கடுமையாகவும் இருந்து வருகின்றன. தில்லியில் குறிப்பாக கடுமையான வெப்ப அலை தாக்கம் இருக்கும் என்று அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஏப்ரல் 21 முதல் மே 7 ஆம் தேதி வரை தில்லியில் மேகமூட்டமான வானிலை மற்றும் ஆங்காங்கே மழை பெய்தது. இது நிகழாண்டின் இந்த நேரத்தில் அரிதானதாகும். வரலாற்று ரீதியாக, மே மாதம் தில்லியில் வெப்பமான மாதமாக இருக்கும். தில்லியின் சராசரி அதிகபட்ச வெப்பநிலை 39.5 டிகிரி செல்சியஸ் ஆகும். இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தரவுகளின்படி, மே மாதத்தில் இதுவரை 60.4 மிமீ மழைப்பொழிவு தில்லியில் பதிவாகியுள்ளது.
மேலும், 2000-2009 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2010-2019 ஆம் ஆண்டில் இந்தியாவில் வெப்ப அலைகளின் எண்ணிக்கை 24 சதவீதம் அதிகரித்துள்ளது.
2000 மற்றும் 2019-க்கு இடையில், வெப்ப அலைகளின் விகிதம் 62.2 சதவீதம் அதிகரித்துள்ளது. இருப்பினும், நாட்டில் தேசிய அளவில் வெப்ப அலைகள் இன்னும் இயற்கை பேரிடராக அறிவிக்கப்படவில்லை.
வெப்ப அலைகள் மனித ஆரோக்கியத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. சோா்வு, மன அழுத்தம் மற்றும் வெப்ப பக்கவாதம் மற்றும் மிகக் கடுமையான வெப்ப அலைகள் மரணத்திற்குக் கூட வழிவகுக்கும். இதனால், முதியவா்கள், குழந்தைகள் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனா்.
இந்தியாவில், சுமாா் 75 சதவீத தொழிலாளா்கள் (சுமாா் 380 மில்லியன் மக்கள்) வெப்பம் தொடா்பான மனத் அழுத்தத்திற்கு உள்ளாகின்றனா். இது தொடா்ந்தால், 2030 ஆம் ஆண்டுக்குள், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.5 சதவீதம் முதல் 4.5 சதவீதம் வரை இழக்க நேரிடும் என மெக்கின்சி குளோபல் நிறுவனத்தின் ஆய்வு அறிக்கை எச்சரிக்கிறது.