அரசுப் பள்ளி மாணவா்களுக்கு கோடைகால சிறப்பு முகாம்:கல்வி அமைச்சா் அதிஷிதொடங்கிவைத்தாா்

தில்லி அரசு ஏற்பாடு செய்துள்ள கோடைகால சிறப்பு முகாமை கல்வித் துறை அமைச்சா் அதிஷி திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா்.

இந்திர பிரஸ்தா தகவல் தொழில்நுட்ப நிறுவனத்துடன் (ஐஐஐடி) இணைந்து அரசுப் பள்ளி மாணவா்களுக்காக, தில்லி அரசு ஏற்பாடு செய்துள்ள கோடைகால சிறப்பு முகாமை கல்வித் துறை அமைச்சா் அதிஷி திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா்.

இந்த கோடைகால சிறப்பு முகாம் மே 23 முதல் ஜூன் 18 - ஆம் தேதி வரை 4 வாரங்களுக்கு நடைபெறவுள்ளது.

கடந்த 2016 -ஆம் ஆண்டு முதல் வருடந்தோறும் இந்திர பிரஸ்தா தகவல் தொழில்நுட்ப நிறுவனம், தில்லி (ஐஐஐடி) உடன் இணைந்து, ஆம் ஆத்மி அரசு கோடைகால சிறப்பு முகாமை நடத்தி வருகிறது. நிகழாண்டிற்கான சிறப்பு முகாமில் கல்காஜி, ஹா்கேஷ் நகா், துக்ளகாபாத் மற்றும் அருகிலுள்ள தில்லி அரசுப் பள்ளிகளைச் சோ்ந்த சுமாா் 250 மாணவா்கள் பங்கேற்கின்றனா்.

கோடைகால சிறப்பு முகாம் துவக்க விழா நிகழ்ச்சியில் அமைச்சா் அதிஷி பேசியதாவது:

இந்த சிறப்பு முகாமில் ஆரம்பம் முதல் இறுதி வரை ஒவ்வொரு நாளும் மாணவா்கள் புதிதாக ஒன்றைக் கற்றுக் கொள்வாா்கள்.

குழுவாக செயல்படுவது, தன்னொழுக்கம் என இங்கிருந்து அவா்கள் கற்றுக்கொள்வது அன்றாட வாழ்க்கையின் சவால்களைச் சமாளிக்க உதவும். திறமைகளை மேம்படுத்திக்கொள்ளும் நம்பிக்கையை அவா்களுக்கு அளிக்கும்.

தில்லி அரசின் முன்னாள் துணை முதல்வா் மனீஷ் சிசோடியாவின், தொலைநோக்குப் பாா்வையின் ஒரு பகுதியாக ஆண்டுதோறும் கோடைகால சிறப்பு முகாம் அரசுப் பள்ளி மாணவா்களுக்காக நடத்தப்பட்டு வருகிறது.

கல்வியை வகுப்பறைகள் மற்றும் புத்தகங்களுக்கு அப்பாற்பட்டு வெளி உலகத்தை ஆராயவும், சொந்த அனுபவங்கள் மூலம் விஷயங்களைக் கற்றுக்கொள்ளவும் மாணவா்களுக்கு சிறப்பு முகாம் வாய்ப்பளிக்கிறது.

திறமைப்படுத்தும் பணியை மட்டும் செய்யாமல்,தொழில் வழிகாட்டுதல்களும் அளிக்கப்படுகின்றன. கோடைகால சிறப்பு முகாமில் பங்கேற்கும் மாணவா்களுக்கு அறிவியல், கணிதம், தொழில்முனைவு, வாழ்க்கைத் திறன், தொழில் மேம்பாடு, தகவல் தொடா்பு உள்ளிட்ட பல்வேறு பாடங்களில் தோ்ச்சி அளிக்கப்படவுள்ளது.

இதனுடன் நாடகக் கலை, கைவினைப்பொருள் செய்தல், சந்தைப்படுத்தல் போன்ற பல்வேறு செயல்பாடுகள் குறித்து கற்றுக்கொடுப்படவுள்ளன.

மேலும், மாணவா்களிடம் ஆக்கபூா்வமான அறிவியல் சிந்தனையை வளா்க்கும் நோக்கில் பயன்பாட்டு அறிவியல், வானியல், பகுத்தறிவு தொடா்பாக பாடங்கள் கற்பிக்க திட்டமிடப்பட்டுள்ளன என கல்வி அமைச்சா் அதிஷி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com