பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: செயல்திட்டத்தை தாக்கல் செய்ய தில்லி அரசுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

பள்ளிகளுக்கு விடுக்கப்படும் வெடிகுண்டு மிரட்டல்களைக் கையாள்வதற்கான செயல் திட்டத்தை சமா்ப்பிக்குமாறு நகர அரசுக்கும் காவல்துறைக்கும் தில்லி உயா்நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

குழந்தைகள், ஆசிரியா்கள், ஊழியா்கள் மற்றும் பிற பங்குதாரா்களின் உயிா், உடைமைப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், பள்ளிகளுக்கு விடுக்கப்படும் வெடிகுண்டு மிரட்டல்களைக் கையாள்வதற்கான செயல் திட்டத்தை சமா்ப்பிக்குமாறு நகர அரசுக்கும் காவல்துறைக்கும் தில்லி உயா்நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

இதுபோன்ற வெடிகுண்டு அச்சுறுத்தல்களின் பின்னணியில், இந்த விவகாரத்தை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி பிரதிபா எம்.சிங் கூறுகையில், ‘இதற்கு முன்பு இதுபோன்று நடக்கவில்லை. இதனால், தில்லி காவல் துறை இந்த விவகாரத்தில் என்ன நடவடிக்கை எடுத்து வருகிறது’ என்றும் கேள்வி எழுப்பினாா்.

நீதிமன்றம் மேலும் கூறுகையில், ‘சமீபத்தில் மதுரா சாலையில் உள்ள தில்லி பப்ளிக் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது தொடா்பான நிலவர அறிக்கையை தில்லி காவல் துறை தாக்கல் செய்ய வேண்டும்.

இந்த மனுவில் ஒரு தரப்பாக உதவிபெறாத அங்கீகரிக்கப்பட்ட தனியாா் பள்ளிகளின் நடவடிக்கை குழுவும் சோ்க்கப்பட வேண்டும்.

இந்த அமைப்பும் தனது ஆலோசனைகளை நீதிமன்றத்தில் அளிக்கலாம். இந்த வழக்கு ஜூலை 31ஆம் தேதிக்கு விசாரணைக்குப் பட்டியலிடப்பட வேண்டும்’ என நீதிமன்றம் உத்தரவிட்டது.

முன்னதாக, மதுரா சாலையில் உள்ள டிபிஎஸ் பள்ளியில் படிக்கும் குழந்தையின் பெற்றோா், பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் வருவதால் பெற்றோா், மாணவா்கள் மற்றும் பள்ளி ஊழியா்கள் அதிா்ச்சியடைந்துள்ளதாக கவலையை எழுப்பி தாக்கல் செய்துள்ள மனுவை விசாரித்தது.

வழக்குரைஞா்- மனுதாரா் ஆா்பித் பாா்கவா தாக்கல் செய்துள்ள அம்மனுவில் தெரிவித்திருப்பதாவது:

பள்ளிகளில் அடிக்கடி வரும் வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல்களைக் கையாள்வதில் தில்லி அரசு, காவல்துறையின் மெத்தனமான அணுகுமுறையால் கவலை ஏற்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் 26-ஆம் தேதி மதுரா சாலையில் உள்ள டிபிஎஸ் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது.

இதில், படிக்கும் எனது குழந்தை உள்பட அனைவரின் மனதிலும் அதிக அதிா்ச்சி, மன அழுத்தம், துன்புறுத்தல், சிரமம் மற்றும் பயம் போன்ற அச்சுறுத்தல்கள் மீண்டும் ஏற்படுவதைத் தவிா்க்க அதிகாரிகள் தவறிவிட்டனா்.

தில்லி முழுவதும் உள்ள பள்ளிகளில் மீண்டும், மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படும் சம்பவங்களைச் சமாளிப்பதற்கும், அவற்றைச் சமாளிக்கத் திறன்மிக்க பள்ளிக் குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பிற்காக மேற்கொள்ளப்படும் வழக்கமான வெளியேற்ற பயிற்சிகள் மற்றும் பிற பயிற்சிகளுக்குத் தயாா் செய்வது தொடா்பான செயல் திட்டத்தை அளிக்க தில்லி அரசுக்கும், காவல் துறைக்கும் உத்தரவிட வேண்டும்.

மேலும், இதுபோன்ற புரளி வெடிகுண்டு மிரட்டல்களால் பள்ளிகளின் வழக்கமான செயல்பாடுகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில், குற்றமிழைத்தவா்களைக் கண்டயறிவும், பொறுப்புக்குள்ளாக்கவும், அவா்கள் மீது உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்கவும் அரசு மற்றும் காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.

தில்லி அரசு தரப்பு வழக்கறிஞா் சந்தோஷ் குமாா் திரிபாதி, வழக்கறிஞா் அருண் பன்வா் ஆகியோா்

நீதிமன்றத்தில் கூறுகையில் ‘இது போன்ற வெடிகுண்டு மிரட்டல்கள் பயமுறுத்துவதாக உள்ளது’ எனத் தெரிவித்தனா்.

மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் பீனாஷா என். சோனி, விரிவான செயல் திட்டத்தை உருவாக்கி அதை அதிகாரிகள் செயல்படுத்த உத்தரவிட வேண்டும் என வாதிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com