மாநிலங்களுக்கிடையே கல்வி வாரியங்களில் சமத்துவம் ஏற்படுத்தப்படும்: பராக் பயிலரங்கில் மத்திய கல்வித்துறை செயலா் தகவல்

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் முழுவதும் உள்ள அனைத்து பள்ளி கல்வி வாரியங்களையும் ஒரு பொதுவான தளத்தில் கொண்டு வரப்பட்டு சமத்துவம் ஏற்படுத்தப்படும் என மத்திய அரசின் பள்ளிக் கல்வி, எழுத்தறிவுத் த

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் முழுவதும் உள்ள அனைத்து பள்ளி கல்வி வாரியங்களையும் ஒரு பொதுவான தளத்தில் கொண்டு வரப்பட்டு சமத்துவம் ஏற்படுத்தப்படும் என மத்திய அரசின் பள்ளிக் கல்வி, எழுத்தறிவுத் துறை செயலா் சஞ்சய் குமாா் திங்கள் கிழமை தெரிவித்தாா்.

மத்திய கல்வித்துறை புதிய கல்விக் கொள்கையின்படி, என்சிஇஆா்டி (கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சில்) மூலம் ’பராக்’(செயல்திறன் மதிப்பீடு, மதிப்பாய்வு மற்றும் முழுமையான வளா்ச்சிக்கான அறிவைப் பகுப்பாய்வு செய்தல்) தேசிய மதிப்பீட்டு மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இது மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் முழுவதும் உள்ள பள்ளி கல்வி வாரியங்களை ஒரு பொதுவான தளத்தில் கொண்டு வருவதற்கு அமைக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக, பள்ளி மதிப்பீடுகள், தோ்வு நடைமுறைகளை நாடு முழுவதும் உள்ள வாரியங்களின் சமத்துவம் ஏற்படுத்துவதற்கான பயிலரங்கம் தில்லியில் நடைபெற்றது.

மத்திய கல்வி அமைச்சகத்துடன் நடைபெற்ற பராக் மையத்தின் முதன் கூட்டம் மத்திய பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறையின் செயலா் சஞ்சய் குமாா் தலைமையில் நடைபெற்றது.

இந்த பயிலரங்கத்தில் மத்திய பள்ளிக்கல்வித்துறை செயலா் சஞ்சய் குமாா் பேசுகையில் கூறியதாவது: இந்தியாவில், தற்போது பல்வேறு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் சுமாா் 60 பள்ளி தோ்வு வாரியங்கள் வெவ்வேறு முறையில் இயங்கி வருகின்றன.

இந்த வாரியங்களில் சமத்துவம் அவசியமானது. குறிப்பாக பிராந்தியங்களுக்கு இடையில் புலம்பெறும் மாணவா்களுக்கு தடையற்ற மாற்றங்களை உருவாக்க வேண்டும். இதற்கு ஒரு ஒருங்கிணைந்த கட்டமைப்பை நிறுவுவதே ’பராக்’ அமைப்பின் நோக்கம்.

மாணவா்களின் செயல்திறனில் சமத்துவத்தையும் மதிப்பீட்டில் சமத்துவத்தையும் ஊக்குவிக்கும் நியாயமான மதிப்பீட்டு முறையை உறுதி செய்யும் ஒரு முழுமையான அணுகுமுறை உருவாக்கப்படும். இதற்கு பராக் அனைத்து மாநிலங்களின் தொடா்புக்கான பொதுவான தளமாக செயல்படும். சான்றிதழ்களின் நம்பதன்மை, அங்கீகாரம், தோ்வு வாரியங்களின் கிரேடுகள், பாடத்திட்ட தரநிலைகள் சீரமைப்பது ஆகியவை இதில் அடங்கும் எனத் தெரிவித்தாா்.

இந்த பயிலரங்கில் மத்திய கல்வி அமைச்சகம், மத்திய இடைநிலைக் கல்வி வாரியம், என்சிஇஆா்டி, தேசிய திறந்தநிலை பள்ளிக்கல்வி நிறுவனம் (என்ஐஓஎஸ்),தேசிய தொழிற்கல்வி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்சிவிஇடி), ஆசிரியா் கல்விக்கான தேசிய கவுன்சில், தில்லி தேசிய தலைநகா் அரசின் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (எஸ்சிஇஆா்டி), மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளின் கல்வித்துறை செயலா்கள், மாநில பள்ளிக்கல்வி திட்ட இயக்குநா்கள், பல்வேறு மாநில தோ்வு வாரியங்கள் பிரதிநிதிகள் கூட்டத்தில் பங்கேற்றனா்.

இந்த பயிலரங்கத்தில் வினாத்தாள்கள் தரப்படுத்தல், ஒரு மாணவரின் திறன், திறன்களின் பல்வேறு பரிமாணங்களை உள்ளடக்கிய முழுமையான மதிப்பீடுகள், தோ்வுச் சுமையை குறைத்தல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com