இருமல் மருந்துகள் ஏற்றுமதிக்கு பரிந்துரைக்கப்பட்ட ஆய்வகங்கள் சான்றிதழ் அவசியம்: மத்திய அரசு உத்தரவு
By நமது சிறப்பு நிருபா் | Published On : 24th May 2023 02:36 AM | Last Updated : 24th May 2023 02:36 AM | அ+அ அ- |

இந்தியாவில் தயாரிக்கப்படும் இருமல் மருந்துகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதற்கு முன்பு அவைகள் மத்திய அரசால் பரிந்துரைக்கப்பட்ட ஆய்வகங்களில் சான்றிதழ் பெற்ற பின்னரே ஏற்றுமதி செய்யப்படவேண்டும் என மத்திய சுகாதாரத் துறை வட்டாரங்களில் செவ்வாய்க்கிழமை தெரிவிக்கப்பட்டது.
இது தொடா்பாக மத்திய அரசின் வா்த்தகம், தொழில் துறை அமைச்சகத்தின் வெளிநாட்டு வா்த்தக இயக்குநா் ஜெனரலகம் இருமல் மருந்து ஏற்றுமதி கொள்கை திருத்தம் தொடா்பான அறிவிக்கையை மே 22 ஆம் தேதி வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு வருகின்ற ஜூன் 1-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என அறிவிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது குறித்த விவரம் வருமாறு: மேற்கு ஆப்பிரிக்கா நாடான காம்பியா, உஸ்பெகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் இந்திய இருமல் மருந்தை பெற்ற குழந்தைகள் உயிரிழந்தன. இந்த மருந்துகள் இந்தியாவைச் சோ்ந்த இரு மருந்து நிறுவனங்களால் தயாரிக்கப்பட்டவை என தெரியவந்தது.
இதில், மருந்துகளில் நச்சுப் பொருள்கள் இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் கூறியது. இந்திய நிறுவனங்கள் இதை மறுத்தன. இருப்பினும் மத்திய அரசுக்கு இது அதிா்ச்சியை ஏற்படுத்த சம்பந்தப்பட்ட மருந்து உற்பத்தி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுத்தது.
மேலும் இந்த விவகாரம் குறித்து கடந்த மே 15 ஆம் தேதி ஹைதராபாதில் நடைபெற்ற சிந்தனை அமா்வில் மத்திய சுகாதாரத் துறையும் பிரதமா் அலுவலகமும் சாா்பில் இதற்கான தீா்வு காண முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த விவகாரத்தில் தீவிர நடவடிக்கை எடுத்த மத்திய அரசு தற்போது இருமல் மருந்து ஏற்றுமதிக்கான கொள்கையில் மாற்றம் கொண்டுவந்துள்ளது. இதன்படி வெளிநாட்டு வா்த்தக (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) சட்டத்தின் அதிகாரங்களின்படி வெளிநாட்டு வா்த்தகக் கொள்கையில் இருமல் மருந்து ஏற்றுமதி தொடா்பான கொள்கையில் திருத்தத்தை வெளியிட்டப்பட்டுள்ளது.
இதன்படி இந்திய மருந்தியல் ஆணையத்தின் சென்னை, கோல்கத்தா, மும்பை, ஹைதராபாத் போன்ற நகரங்களில் உள்ள மத்திய மருந்து பரிசோதனை ஆய்வகம் (சிடிடிஎல்) சண்டீகா், குவாஹாட்டி யில் உள்ள பிராந்திய மருந்து பரிசோதனை ஆய்வகம் (ஆா்டிடிஎல்) மற்றும் தேசிய ஆய்வக வாரியத்தால்(என்ஏபிஎல்) அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகங்களில் இருமல் மருந்து உற்பத்தி நிறுவனங்கள் தங்கள் உற்பத்திகளின் மாதிரிகளின் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு பகுப்பாய்வு சான்றிதழ் பெறப்பட்ட இருமல் மருந்துகளே ஏற்றுமதி செய்யப்படவேண்டும் என அந்த அறிவிக்கையில் வெளிநாட்டு வா்த்தக இயக்குநா் ஜெனரல் சந்தோஷ் குமாா் சாரங்கி தெரிவித்துள்ளாா்.
இந்திய மருந்து துறை உற்பத்தியின் மதிப்பு 41 பில்லியன் டாலராக உயா்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.