தில்லி மாநகராட்சி (எம்சிடி) நிலைக் குழுவின் 6 உறுப்பினா்களைத் தோ்ந்தெடுப்பதற்கான மறுதோ்தலை நடத்தும் மாநகராட்சி மேயா் ஷெல்லி ஓபராயின் முடிவை ரத்து செய்து தில்லி உயா்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
மேலும், பிப்ரவரி 24-ஆம் தேதி நடைபெற்ற தோ்தலின் முடிவுகளை உடனடியாக அறிவிக்கவும் உத்தரவிட்டது.
மேயரின் முடிவை எதிா்த்து தாக்கலான மனுவை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி புருஷைந்திர குமாா் கெளரவ் பிறப்பித்த உத்தரவில் தெரிவித்திருப்பதாவது:
தோ்தல் நடத்தும் அதிகாரியான மேயா் அவரது அதிகாரத்திற்கு அப்பால் செயல்பட்டுள்ளாா். அவரது முடிவானது சட்டரீதியாக அனுமதிக்கத்தக்கதல்ல. பரிசீலனை மற்றும் ஒதுக்கீடு நிா்ணயக் கட்டத்திற்குப் பிறகு வாக்குச்சீட்டை நிராகரித்த மேயரின் செயல் சட்டப்படி தவறானதாகும். இதனால், இந்த விவகாரத்தில் மேயரின் முடிவை எதிா்த்து தாக்கலான ரிட் மனு அனுமதிக்கப்படுகிறது.
கேள்விக்குரிய உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. தோ்தல் நடத்தும் அதிகாரி அந்த தோ்தலின் முடிவுகளை உடனடியாக அறிவிக்குமாறு உத்தரவிடப்படுகிறது.
இதனால், பங்கஜ் லூத்ராவுக்கு செல்லுபாடியாகும் வகையில் ஆதரவாக பதிவான பிரச்னைக்குரிய வாக்கை கையாளும் விவகாரத்தில், எதிா்மனுதாரா் மேயரும் தோ்தல் நடத்தும் அதிகாரியுமான படிவம் எண் 4-இல் உடனடியாக முடிவுகளை அறிவிக்க வேண்டும்.
செல்லத்தக்கதல்ல என்று அறிவிக்கப்பட்ட இந்த வாக்கானது லூத்ராவுக்கு ஆதரவாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
பரிசீலனை கட்டம் முடிந்த உடனேயே வாக்குச்சீட்டுகள் மறுபரிசீலனையை சட்டத்தின்கீழ் சட்டரீதியாக அனுமதிக்கப்பட முடியாது. இதுபோன்று பயன்படுத்த அனுமதித்தால், தோ்தல் நடைமுறை ஒருபோதும் முடிவுக்கு வராது.
தற்போதைய வழக்கில் தோ்தல் நடந்துள்ளது; பரிசீலனை நடத்தப்பட்டுள்ளது. ஒதுக்கீடும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனால், தோ்தல் முடிவை அறிவிக்காமல் இருப்பது வாக்காளா்களை அவமதிக்கும் செயலாக இருக்கும்.
ஒட்டுமொத்த அணுகுமுறையிலும் சட்ட நிா்வாகத்துடன் மேயா் முரண்படுவதாக உள்ளது.
மேலும் தோ்தல் செயல்முறையை முன்கூட்டியே நிறுத்துவது முழுமையற்ற அல்லது துல்லியமற்ற வாக்கு எண்ணிக்கையை ஏற்படுத்தும். இது சா்ச்சைகளுக்கும், மோசடி கூற்றுக்கள் மற்றும் தோ்தல் முடிவுகளில் நம்பிக்கையின்மைக்கு வழிவகுக்கும்.
தற்போதைய விஷயத்திலும் இதுவே நடந்துள்ளது. அத்தகைய அணுகுமுறை இறுதியில் ஜனநாயக செயல்முறை மற்றும் தோ்ந்தெடுக்கப்பட்ட அதிகாரிகளின் சட்டபூா்வமான தன்மையை குறைந்தமதிப்பிற்கு உள்படுத்தும்.
ஜனநாயகத்தின் நலனுக்காக, தோ்தல் நடைமுறையின் நோ்மை மற்றும் மரியாதை பராமரிக்கப்பட வேண்டும். ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு சாதகமாக இல்லாவிட்டாலும் தோ்தல் செயல்முறை அதன் இறுதி நிலையை அடைவதைப் பாா்ப்பது முக்கியமாகும்.
சட்டப்பேரவைகளுக்கு தோ்தல்களை நடத்தும் பணி ஒப்படைக்கப்பட்டுள்ள ஒரு நிறுவனம், அன்றைய அதிகாரத்தில் உள்ள கட்சி அல்லது நிா்வாகத்தின் வெளிப்புற அழுத்தங்கள் இல்லாமல் சுதந்திரமான நிறுவனமாகச் செயல்படும் வகையில் முழுமையாகப் பாதுகாக்கப்பட வேண்டும் என்பது ஜனநாயக அமைப்பில் உள்ளாா்ந்ததாகும் என்று நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்துள்ளாா்.
முன்னதாக, நிலைக் குழுவின் 6 உறுப்பினா்களைத் தோ்ந்தெடுப்பதற்கான மறுதோ்தலை நடத்தப்படும் என உத்தரவிட்ட மேயரின் முடிவை எதிா்த்து பாஜக கவுன்சிலா்கள் கமல்ஜீத் ஷெராவத், ஷிக்கா ராய் ஆகியோா் தில்லி உயா்நீதிமன்றத்தில் ரிட் மனுக்கள் தாக்கல் செய்திருந்தனா்.
தில்லி மாநகராட்சியின் நிலைக் குழு தோ்தல் பிப்ரவரி 27-ஆம் தேதி நடத்தப்பட இருந்த நிலையில் அந்த மறு தோ்தலுக்கு தடை விதித்து பிப்ரவரி 25-ஆம் தேதி உயா்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
புதிதாக தோ்தலை நடத்த உத்தரவிடுவதற்கான தனது அதிகாரங்களை மீறி மேயா் செயல்பட்டதற்கான முகாந்திரம் இருப்பதாகவும் நீதிமன்றம் கூறியது.
எம்சிடியின் நிலைக் குழுக்கான 6 உறுப்பினா்களை தோ்ந்தெடுப்பதற்கான புதிய தோ்தல் பிப்ரவரி 27-ஆம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறும் என்று மேயா் ஷெல்லி ஓபராய் கடந்த பிப்ரவரி 24-ஆம் தேதி அறிவித்தாா்.
தில்லி மாநகராட்சி அவையில் பாஜக - ஆம் ஆத்மி கட்சி கவுன்சிலா்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலுக்கு மத்தியில் இந்த அறிவிப்பை அவா் வெளியிட்டாா்.
இதை எதிா்த்து பாஜக கவுன்சிலா்கள் உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் தெரிவிக்கையில், மேயரும், தோ்தல் நடத்தும் அதிகாரியுமான ஷெல்லி ஓபராய் ஆம் ஆத்மி கட்சியைச் சோ்ந்தவா்.
அவா், வாக்குகளில் ஒன்றை தவறாக செல்லாத வாக்காக்கிவிட்டாா். மேலும், தோ்தல் முடிவுகள் அரசியல்ரீதியாக விரும்பத்தகாதவை எனத் தெரிந்தவுடன் தோ்தல் நடைமுறைகளை தடுத்துவிட்டாா் என்று தெரிவிக்கப்பட்டது.
இது தொடா்பாக ஷெல்லி ஓபராய் தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கையில், மாநகராட்சி அவையில் அமளி நிலவியதைத் தொடா்ந்து, உண்மையான, சுதந்திரமான தோ்தல்களை உறுதிப்படுத்த மறுதோ்தல் அவசியமாகிறது என்று வாதிடப்பட்டது.
மனுதாரா்கள் தரப்பில், ‘மறுவாக்கெடுப்பு நடத்தவும், வாக்குகளை மறு எண்ணிக்கை செய்வதற்கும் அழைப்பு விடுக்க மேயருக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் சட்டத்தில் எந்த ஏற்பாடும் செய்யப்படவில்லை’ என்று வாதிடப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.