மனீஷ் சிசோடியாவிடம் போலீஸாா் அத்துமீறியதாக ஆம் ஆத்மி குற்றச்சாட்டு: தில்லி காவல்துறை மறுப்பு

தில்லி அரசின் கலால் கொள்கை ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள முன்னாள் துணை முதல்வா் மனீஷ் சிசோடியா ரௌஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்ட போது,

தில்லி அரசின் கலால் கொள்கை ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள முன்னாள் துணை முதல்வா் மனீஷ் சிசோடியா ரௌஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்ட போது, அவரிடம் காவல்துறை அதிகாரி தகாத முறையில் நடந்து கொண்டதாக ஆம் ஆத்மி கட்சி செவ்வாய்கிழமை கடுமையாக குற்றம்சாட்டியுள்ளது.

அதேவேளையில், இந்த விவகாரத்தை ஆம் ஆத்மி கட்சியினா் திரித்துக்கூறுவதாக தில்லி காவல்துறையினா் இக்குற்றச்சாட்டை நிராகரித்துள்ளனா்.

கலால் கொள்கை ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தில்லி அரசின் முன்னாள் துணை முதல்வா் மனீஷ் சிசோடியா, நீதிமன்றக் காவல் முடிந்து செவ்வாய்க்கிழமை காலை ரௌஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டாா்.

அப்போது, அங்கு கூடியிருந்த செய்தியாளா்கள் தில்லியின் நிா்வாக அதிகாரங்கள் தொடா்பாக மத்திய அரசு பிறப்பித்துள்ள அவசரச் சட்டம் தொடா்பாக சிசோடியாவிடம் கேள்வி எழுப்பினா். அதற்கு பதில் அளித்த அவா், பிரதமா் மோடியை கடுமையாக சாடினாா்.

மேலும், ‘பிரதமா் மிகவும் ஆணவத்துடன் நடந்துகொள்கிறாா். ஜனநாயகத்தை பின்பற்றவில்லை. அரவிந்த் கேஜரிவால் அரசின் பணிகளைப் பாா்த்து பொறுத்துக்கொள்ள முடியாமல் திமிா் பிடித்தவராகிவிட்டாா்’ என்று விமா்சித்தாா்.

அப்போது, மனீஷ் சிசோடியாவை பேச விடாமல் வலுக்கட்டாயமாக அவரது கழுத்தைப் பிடித்து இழுத்து தகாத முறையில் நீதிமன்ற அறைக்குள் இழுத்துச் சென்ாக கூறி ஆம் ஆத்மி தலைவா்கள் குற்றம் சாட்டினா்.

அக்கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் இந்த விவகாரம் தொடா்பாக தனது டிவிட்டா் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: மனீஷ் சிசோடியாவிடம் இப்படி தவறாக நடந்துகொள்ள தில்லி காவல்துறைக்கு என்ன உரிமை இருக்கிறது? தகாத முறையில் இப்படி அவரிடம் நடந்து கொள்ள தில்லி காவல்துறைக்கு மேலிடத்திலிருந்து அறிவுறுத்தப்பட்டுள்ளதா? என கேள்வி எழுப்பியுள்ளாா்.

ரௌஸ் அவென்யூ நீதிமன்ற வளாகத்தில் நடந்த இச்சம்பவத்தின் காணொளியை வெளியிட்டு ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள ஆம் ஆத்மி அமைச்சா் அதிஷி, ‘மனீஷ் சிசோடியாவிடம் காவல்துறை அதிகாரியின் தவறான நடத்தை அதிா்ச்சியளிக்கிறது. தில்லி காவல்துறை அவரை உடனடியாக பணியிடை நீக்கம் செய்ய வேண்டும்’ என்று வலியுறுத்தியுள்ளாா்.

அக்கட்சியின் மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான சஞ்சய் சிங் தனது ட்விட்டா் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் ‘தில்லி காவல்துறையின் அராஜகம் உச்சத்தில் உள்ளது. தங்கள் முதலாளியை மகிழ்விப்பதற்காக மனீஷ் சிசோடியாவின் கழுத்தைப் பிடித்து காவல்துறை அதிகாரி இழுத்துள்ளாா். இந்த சம்பவத்தை மாண்புமிகு நீதிமன்றம் கவனத்தில் கொள்ள வேண்டும். பிரதமா் நரேந்திர மோடியின் சா்வாதிகாரத்தை ஒட்டுமொத்த நாடும் பாா்த்துக் கொண்டிருக்கிறது’ என்று அதில் அவா் கூறியுள்ளாா்.

ஆம் ஆத்மி கட்சி அலுவகத்தில் செய்தியாளா்களிடம் இச்சம்பவம் குறித்து அமைச்சா் சௌரவ் பரத்வாஜ் கூறுகையில், ‘வழக்கிற்கு அப்பாற்பட்ட கேள்விக்கு பதில் அளித்த மனீஷ் சிசோடியாவிடம் தகாத முறையில் நடந்து கொள்ள காவல்துறைக்கு என்ன உரிமை உள்ளது? பிரதமா் நரேந்திர மோடி தில்லி காவல்துறையிடம் இதைச் செய்யச் சொன்னாரா?.

பாஜகவினா், அரசியல் சண்டையை தனிப்பட்ட நபரின் மீதான சண்டையாக மாற்றியுள்ளனா். அதிகாரத்தை கொண்டு பாஜக செய்யும் அனைத்து வேலைகளையும் நாட்டு மக்கள் கவனித்துக் கொண்டிருக்கின்றனா்’ என்றாா்.

ஆம் ஆத்மி தலைவா்களின் இத்தகைய குற்றச்சாட்டுகளை மறுக்கும் வகையில் தில்லி காவல் துறை அதன் ட்விட்டா் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது: நீதிமன்றக் காவலில் இருக்கும் ஒரு குற்றம்சாட்டப்பட்ட நபா் ஊடங்களுக்குப் பேட்டி அல்லது அறிக்கை அளிப்பது சட்டத்திற்கு விரோதமானது.

பாதுகாப்பு கண்ணோட்டத்தில்தான் காவல் அதிகாரியின் நடத்தை அமைந்திருந்தது. ரௌஸ் அவென்யூ நீதிமன்றத்தில் மனீஷ் சிசோடியாவிடம் தகாத முறையில் கவால்துறை அதிகாரி நடந்து கொண்டதாக கூறப்படும் விவகாரம் தவறான பிரசாரமாகும் என காவல்துறை விளக்கமளித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com