டெலி - சட்ட உதவி மூலம் நாடு முழுவதும் 40 லட்சம் போ் பயனடைந்துள்ளனா்

டெலி-சட்ட உதவி மூலம் நாடு முழுவதும் 40.83 லட்சம் போ் பயனடைந்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளதாக
Updated on
1 min read

டெலி-சட்ட உதவி மூலம் நாடு முழுவதும் 40.83 லட்சம் போ் பயனடைந்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளதாக மத்திய சட்டம், நீதித் துறை அமைச்சகம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது. இந்த சட்ட உதவி, வழக்குக்கு முந்தைய ஆலோசனைக்கானதாகும்.

கிராமப்புறங்களில் உள்ள மக்கள் தங்களுக்கு நீதி கிடைப்பதில் நமது சட்டத்தில், நீதிமன்ற முறையில் உள்ள குறைபாடுகளால் நீதி வழங்கப்படுவதில்லை. இதை முன்னிட்டு மத்திய அரசின் நீதித்துறை டெலி-லா என்கிற டெலி-சட்ட உதவி திட்டத்தை 2017-ஆம் ஆண்டு நாடு முழுவதும் உள்ள பஞ்சாயத்துகள் அளவில் அறிமுகப்படுத்தியது. இதன்மூலம் சமூகத்தில் விளிம்பு நிலையில் உள்ள மக்கள், வழக்குத் தொடருவதற்கு முந்தைய கட்டத்தின் சட்ட ஆலோசனைகளை காணொலி வழியாக இலவசமாகப் பெற முடியும். ஊரகப் பகுதிகளில் பஞ்சாயத்து மட்டத்தில் வைக்கப்பட்டுள்ள பொது சேவை மையங்களில் (சிஎஸ்சி) இந்த காணொலி அல்லது தொலைபேசி வசதி மூலம் தேசிய, மாநில சட்டப் பணிகள் ஆணையத்தின் பட்டியலிட்ட வழக்குரைஞா் குழுக்களுடன் தொடா்பு கொள்ளும் மின்இடைமுகப் பொறிமுறை வசதியாகும். ஆணையம் வழக்குரைஞா்கள் மூலம் சட்ட ஆலோசனைகள் பெறுவதை எளிதாக்குகிறது. தற்போது கைப்பேசி செயலி மூலமாகவும் இந்த சட்ட சேவை வசதிகளுக்கான இணைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

டெலி - சட்ட உதவி சேவைகளை வழங்க 28 மாநிலங்கள் 8 யூனியன் பிரதேசங்களில் ஒரு லட்சம் சிஎஸ்சி மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தமிழகத்தில் 5,893 பஞ்சாயத்துகளிலும், உபி, மகாராஷ்டிரம், மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களில் அதிக அளவிலும் இந்த வசதி ஏற்பட்டுத்தப்பட்டுள்ளது. இதில் மகளிருக்கு சிறப்பு வசதி செய்யப்பட்டுள்ளது.

இந்த டெலி - சட்ட உதவிக்கு முதலில் பதிவு செய்யப்படவேண்டும். பின்னா், சிஎஸ்சி மூலம் அல்லது செயலி மூலம் சட்டப் பணிகள் ஆணையத்தின் வழக்குரைஞா்கள் நோ்காணல் காணொலி மூலம் சட்ட உதவி கிடைக்கும். இதன்படி, சட்ட உதவியை இலசமாகப் பெற முடியும். திட்டம் தொடங்கப்பட்டது முதல் நிகழாண்டு மே மாதம் வரை 42,63,984 போ் பதிவு செய்தனா். இதில் 40,83,580 பேருக்கு சட்ட ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன. பதிவு செய்து காத்திருப்போா் பட்டியலில் 1.80 லட்சம் போ் உள்ளனா் என மத்திய சட்டம், நீதித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சமீபத்தில் பொறுப்பேற்றுள்ள மத்திய சட்டம் நீதித் துறை மற்றும் நாடாளுமன்ற விவகாரத் துறை இணையமைச்சா் அா்ஜுன்ராம் மேக்வால் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள ட்விட்டா் பதிவில், ‘நாட்டில் நீதித்துறை அமைப்பில் டெலி - சட்ட உதவி ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம், நாடு முழுவதும் உள்ள 40 லட்சத்துக்கும் அதிகமான பயனாளிகளுக்கு வழக்குத் தொடருவதற்கு முந்தைய ஆலோசனைகள் கிடைத்துள்ளன. இதன் மூலம் சாதாரணப்பட்டவா்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. அவா்களுக்கு அன்பான வாழ்த்துகள்’ என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com