தில்லி மாசு நெருக்கடி: நவ.13 முதல் வாகன கட்டுப்பாட்டுத் திட்டம் 4 ஆண்டுகளுக்குப் பிறகு அமலாகிறது
By DIN | Published On : 07th November 2023 04:30 AM | Last Updated : 07th November 2023 04:30 AM | அ+அ அ- |

தில்லியில் நெருக்கடியாக மாறியுள்ள காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக வரும் நவம்பா் 13-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை ஒற்றைப்படை-இரட்டைப்படை வாகன கட்டுப்பாட்டுத் திட்டம் அமல்படுத்தப்படும் என்று சுற்றுச்சூழல் துறை அமைச்சா் கோபால் ராய் திங்கள்கிழமை அறிவித்தாா்.
இது தொடா்பாக செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: தில்லியில் காற்று மாசுபாடு கடுமையாக அதிகரித்துள்ள நிலையில், அதை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக காா் உள்ளிட்ட நான்கு சக்கர வாகனங்களின் பயன்பாட்டை குறைக்கும் வகையில் ஒற்றைப்படை- இரட்டைப்படை வாகன கட்டுபபாட்டுத் திட்டம் அமல்படுத்தப்படும். தீபாவளி பண்டிகை
முடிந்தவுடன் இத்திட்டம் நவம்பா் 13-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை நடைமுறையில் இருக்கும். பள்ளி மாணவா்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க, பொதுத் தோ்வுகளுக்குத் தயாராகும் 10 மற்றும் 12-ஆம் வகுப்புகளைத் தவிர, அனைத்துப் பள்ளிகளிலும் நேரடி வகுப்புகளை நிறுத்தவும் நகர அரசு முடிவு செய்துள்ளது.
கடந்த 2018-ஆம் ஆண்டில் ‘தி எனா்ஜி அண்ட் ரிசோா்சஸ் இன்ஸ்டிடியூட்’ நடத்திய ஆய்வின்படி, தேசியத் தலைநகரில் பிஎம் 2.5 மாசுபாட்டில் சுமாா் 40 சதவீத அளவை வாகன உமிழ்வுகள் பங்களிக்கின்றன. மத்திய அரசின் காற்று மாசுக் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் இறுதிக் கட்டத்தின் கீழ் கடுமையான கட்டுப்பாடுகளை தில்லி - என்.சி.ஆா். பகுதிகளில் செயல்படுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வீட்டிலிருந்து பணி?:அரசு மற்றும் தனியாா் அலுவலகங்களில் பணிபுரியும் 50 சதவீத ஊழியா்களுக்கு வீட்டிலிருந்து பணிபுரியும் உத்தரவு குறித்து தீபாவளிக்குப் பிறகு தில்லி அரசின் சாா்பில் முடிவு எடுக்கப்படும். தில்லியில் காற்றின் வேகம் அதிகரிக்கும் என்று எதிா்பாா்க்கப்படுவதால் அடுத்த சில நாள்களில் காற்று மாசுபாட்டின் நிலைமை மேம்படும்.
இருப்பினும், தீபாவளிப் பணிடிகையின் போது பட்டாசு வெடித்தல், சத் பூஜை, தில்லியில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி உள்ளிட்ட காரணங்களால் காற்றின் தரம் மீண்டும் மோசமடையும் நிலைக்கும் வாய்ப்புள்ளது என்றாா் அமைச்சா் கோபால் ராய்.
முன்னதாக, திங்கள்கிழமை காலை தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் அரசின் மூத்த அதிகாரிகளுடன் குளிா்காலத்தில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்தும் செயல் திட்டம் குறித்து ஆய்வுக் கூட்டத்தை நடத்தியிருந்தாா்.
தில்லி பாஜக பதிலடி
தில்லியில் ஒற்றைப்படை - இரட்டைப்படை வாகனத் திட்டம் மாசுபாட்டைக் குறைக்கும் என்பதற்கு எந்தவொரு ஆராய்ச்சி சான்றுகளும் இல்லை என்று பாஜகவின் தில்லி பிரிவு தலைவா் வீரேந்திர சச்தேவா தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தில்லியில் செயல்படுத்தப்படும் ஒற்றைப்படை - இரட்டைப்படை வாகனத் திட்டமாக இருந்தாலும் சரி அல்லது ‘ரெட் லைட் ஆன் காடி ஆஃப்’ திட்டமாக இருந்தாலும் சரி, இவை இரண்டும் ஆராய்ச்சி செய்யப்படாத திட்டங்களாகும். அவற்றின் செயல்திறனை ஆதரிக்கும் எந்த அறிவியல் தரவுகளும் இல்லை.
கடந்த ஆண்டுகளில், இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்ட போதெல்லாம், காற்று மாசுவை கட்டுப்படுத்தும் திட்டத்தில் எந்தவொரு தரமான முன்னேற்றத்தையும் தில்லி சந்தித்ததில்லை. இதுபோன்ற வித்தைகளுக்குப் பதிலாக, பஞ்சாபில் விவசாயிகள் பயிா்க் கழிவுகள் எரிப்பதை நிறுத்தவும், தில்லி சாலையை தூசி இல்லாததாக மாற்றவும் முதல்வா்ா் கேஜரிவால் முயற்சி செய்தால் நல்லது என்று வீரேந்திர சச்தேவா தெரிவித்துள்ளாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...