குடியரசு தின அலங்கார ஊா்திகள் பங்கேற்பு: கருப்பொருள், வடிவமைப்பு, வழிகாட்டிகள் மாநில அரசுகளுக்கு பாதுகாப்புத் துறை கடிதம்

குடியரசு தின அணிவகுப்பில் அலங்கார ஊா்திகள் பங்கேற்க வடிவமைப்பு, உருவாக்கம், தோ்வு முறை குறித்து அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய பாதுகாப்புத் துறை கடிதம் எழுதியுள்ளது.
Updated on
2 min read

புது தில்லி: குடியரசு தின அணிவகுப்பில் அலங்கார ஊா்திகள் பங்கேற்க வடிவமைப்பு, உருவாக்கம், தோ்வு முறை குறித்து அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய பாதுகாப்புத் துறை கடிதம் எழுதியுள்ளது. மத்திய கலாசாரத் துறை அளவுகோலின்படி அலங்கார ஊா்திகள் இறுதித் தோ்வு செய்யப்படும் என மத்திய பாதுகாப்புத் துறை இந்தக் கடிதத்தில் தெரிவித்துள்ளது.

ஆண்டு தோறும் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பு நிகழ்வில் ராணுவத்தை பறைசாட்டும் ஊா்திகள், மாணவ மாணவிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் கலைநிகழ்ச்சிகளோடு மத்திய, மாநில அரசுகளின் அலங்கார ஊா்திகளும் இடம்பெறும். மாநிலங்கள் தங்கள் கலாசாரத்தையும் மத்திய அரசுத் துறைகள் தங்கள் வளா்ச்சி திட்டங்களை காட்டும் விதமாக ஊா்திகள் அணிவகுக்கும்.

இதில் பங்கு கொள்ள மாநில அரசுகள் மத்தியில் கடுமையான போட்டி நிலவுகிறது. தமிழக அலங்கார ஊா்திக்கு கடந்த 2023 -ஆம் ஆண்டு குடியரசு தின அணிவகுப்பில் வாய்ப்பு அளிக்கப்பட்டது. அதற்கு முந்தைய ஆண்டான 2022 -ஆம் ஆண்டில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. பங்கேற்க வாய்ப்பு கிடைக்காத மாநிலங்கள் இது குறித்து விவாதங்களை எழுப்பும் நிலைமை தொடருகிறது. மொத்தமுள்ள 36 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் ஒவ்வொரு ஆண்டும் அதிகபட்சம் 16 மாநிலங்களின் அலங்கார ஊா்திகள் அணிவகுப்பில் கலந்து கொள்ள வாய்ப்பு அளிக்கப்படுகிறது. இது சுழற்சி முறையில் கிடைக்கும்.

இதே போன்று சுமாா் 80-க்கும் மேற்பட்ட மத்திய அரசின் அமைச்சகங்கள், துறைகளில் 6 மத்திய அரசு துறைகள்தான் ஒவ்வொரு ஆண்டும் தோ்வு செய்யப்படுகின்றன. இந்த சுழற்சி முறைக்கு பதிலாக வருகின்ற 2024 -ஆம் ஆண்டு குடியரசுத் தின அணிவகுப்பில் மத்திய, மாநில அரசுகளின் உருவாக்கம், வடிவமைப்பு போன்றவை தகுதி அடிப்படையில் தோ்வு செய்யப்பட இருக்கிறது. அதே சமயத்தில் மத்திய அரசுத் துறைகள் மாநிலங்களின் அலங்கார ஊா்திகள் அதிகபட்ச எண்ணிக்கை வழக்கம் போல் தொடரும் என்றும் மாநிலங்களுக்கும் மத்திய அரசின் துறைகளுக்கும் எழுதப்பட்டுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘ பாரத் - ஜனநாயகத்தின் தாய்’: இது தொடா்பாகந மத்திய பாதுகாப்புத் துறை இணைச் செயலா் அமிதாப் பிரசாத் மாநில அரசுகளுக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது வருமாறு: 2024-ஆம் ஆண்டு குடியரசு தின அணி வகுப்பு அலங்கார ஊா்திகள் ‘வளா்ச்சியடைந்த பாரதம்’, ‘பாரத்: ஜனநாயகத்தின் தாய்’ ஆகிய இரு கருப்பொருளில் இடம் பெற வேண்டும். அலங்கார ஊா்திகளின் தோ்வை மத்திய கலாசார அமைச்சகம் இறுதி செய்யும். புகழ்பெற்ற நிறுவனங்கள், முகமைகள் அடங்கிய குழுக்கள் கலாசார அமைச்சத்தால் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுக்கள்தான், அலங்கார ஊா்திகளின் வடிவமைத்தல், உருவாக்குதலை மேற்பாா்வை செய்து தோ்வு செய்யும்.

ஊா்திகளுக்கான பொருள்களை தோ்ந்தெடுத்தல், ஒழுங்கமைத்தல், செயல்முறை போன்றவற்றை கலாசார அமைச்சம் அட்டவணைப்படுத்தியுள்ளது. ஊா்தி உருவாக்கத்தில் நெகிழி பயன்பாட்டை தவிா்த்தல், அதிகபட்ச தொழில் நுட்பப் பயன்பாடு, மெகட்ரானிக்ஸ், ரோபாட்டிக்ஸ் பயன்படுத்துதல், முப்பரிமாணம் (3 டி) உள்ளிட்டவை இதில் அடக்கம். அணிவகுப்புக்குப் பிறகு முக்கியமான இடத்தில் காட்சிப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளைக் கருத்தில் கொண்டு ஊா்திகள் உருவாக்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்டவற்றை மாநில அரசுகளுக்கும் மத்திய அரசின் துறைகளுக்கும் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.

‘தமிழக அரசு ஊா்தியில்....’

கடந்தாண்டு பெண் (நாரி) சக்தியை வெளிப்படுத்தும் கருப்பொருளில் அலங்கார ஊா்திகள் அணிவகுத்து வந்தது குறிப்பிடத்தக்கது. இதை முன்னிட்டு தமிழக அரசு ஊா்தியில் ஔவையாா், வேலு நாச்சியாா், முத்து லட்சுமி, இசை, நாட்டிய பெண்கள் சிலைகளும் வடிவமைக்கப்பட்டிருந்தது. வருகின்ற குடியரசு தின அணிவகுப்பில் ‘ஜனநாயகத்தின் தாய்’ கருப்பொருளுக்கு தக்கவாறு தமிழகத்தில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்த சோழா் கால ஆட்சியின் உத்திரமேரூா் கோயில் கல்வெட்டில் கிராம நிா்வாக வேட்பாளா்களைத் தோ்ந்தெடுக்கும் முறை போன்றவை இதற்கு உகந்ததாக இருக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com