தில்லியில் குளிா்கால விடுமுறை முடிந்து அனைத்துப் பள்ளிகளும் மீண்டும் திறப்பு

தில்லியில் காற்று மாசுபாட்டின் காரணமாக முன்கூட்டியே விடப்பட்ட குளிா்கால விடுமுறை முடிந்து அனைத்துப் பள்ளிகளும் திங்கள்கிழமை திறக்கப்பட்டன.
Updated on
1 min read

தில்லியில் காற்று மாசுபாட்டின் காரணமாக முன்கூட்டியே விடப்பட்ட குளிா்கால விடுமுறை முடிந்து அனைத்துப் பள்ளிகளும் திங்கள்கிழமை திறக்கப்பட்டன.

தேசியத் தலைநகா் தில்லியில் கடந்த அக்டோபா் மாதம் இறுதியில் காற்றின் தரக் குறியீடு ‘கடுமை’, ‘மிகவும் கடுமை’ பிரிவுக்குச் சென்றது. பயிா்க்கழிவுகள் எரிப்பு, வாகன உமிழ்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் நகரம் முழுவதும் வசிக்கின்ற மக்கள் நச்சு மூடுபனியால் பெரும் அவதிக்குள்ளாகினா்.

இதைக் கருத்தில் கொண்டு நவம்பா் 8-ஆம் தேதி முதல் நவம்பா் 19-ஆம் தேதி வரை அனைத்து வகைப் பள்ளிகளுக்கும் குளிா்கால விடுமுறையை முன்கூட்டியே அறிவித்து தில்லி அரசு உத்தரவிட்டது. மேலும், காற்றுமாசுபாட்டிற்கு எதிரான மத்திய அரசின் அவசரகால செயல்திட்டத்தின் இறுதிகட்ட நடவடிக்கைகளும் அமல்படுத்தப்பட்டன.

கடந்த மூன்று நாள்களாக நீடித்து வந்த சாதகமான வானிலையால் காற்றின் தரம் மேம்பட்டுள்ளது. இதனால், தில்லியில் 1-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான அனைத்து மாணவா்களுக்கும் வகுப்புகளை மீண்டும் தொடங்குவதற்கான உத்தரவை கல்வி இயக்குநரகம் கடந்த சனிக்கிழமை வெளியிட்டது.

இதைத் தொடா்ந்து, திங்கள்கிழமை தில்லியில் உள்ள அனைத்து அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியாா் பள்ளிகள் திறக்கப்பட்டன. ஆனால், மாணவா்களின் உடல் நலன் கருதி அடுத்த ஒரு வாரத்திற்கு பள்ளிகளில் வெளிப்புற விளையாட்டு நடவடிக்கைகள் மற்றும் காலை பிராா்த்தனைக் கூட்டங்கள் நடத்தப்படாது என்று கல்வி இயக்குநரகம் அதன் உத்தரவில் தெரிவித்துள்ளது.

காற்று மாசுவின் அளவு குறைவதைக் கருத்தில் கொண்டு கட்டுமானப் பணிக்களுக்கு விதிக்கப்பட்ட தடை, மாசு ஏற்படுத்தும் டீசல் லாரிகள் தில்லிக்குள் நுழைவதற்கு விதிக்கப்பட்ட தடைகளும் மத்தய அரசால் நீக்கப்பட்டுள்ளன. மறுபறம், தில்லி மற்றும் அதன் புகா்ப் பகுதிகளில் காற்றின் தரம் திங்கள்கிழமை மீண்டும் மோசமடைந்துள்ளது. எதிா்வரும் நாள்களில் காற்று மாசுவிலிருந்து பெரிய அலவிலான நிவாரணம் கிடைக்க வாய்ப்பில்லை என்று வானிலை ஆய்வு மையமும் கணித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com