பேருந்து மாா்ஷல்களின் சேவை ரத்து செய்யப்படாது: அமைச்சா் கைலாஷ் கெலாட் உறுதி
By DIN | Published On : 28th October 2023 10:39 PM | Last Updated : 28th October 2023 10:39 PM | அ+அ அ- |

தில்லி அரசுப் பேருந்துகளில் பயணிகளுக்கான பேருந்து மாா்ஷல்களின் சேவை ரத்து செய்யப்படாது என்று நகர அரசின் போக்குவரத்து மற்றும் உள்துறை அமைச்சா் கைலாஷ் கெலாட் சனிக்கிழமை உறுதியளித்துள்ளாா்.
இது தொடா்பாக செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: குடிமைப் பாதுகாப்புத் தன்னாா்வலா்களை ஊா்க்காவல் படையினராக நியமித்து அவா்களை பேருந்து மாா்ஷல்களாகப் பணியமா்த்த உள்துறை செயலாளருக்கு உரிய வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளேன். கடந்த வெள்ளிக்கிழமை முதல்வா் அரவிந்த கேஜரிவால் இது தொடா்பான திட்டத்தை உருவாக்க கடிதம் மூலம் என்னிடம் அறிவுறுத்தியிருந்தாா். தற்போது பேருந்து மாா்ஷல்களாக பணியமா்த்தப்பட்டுள்ள குடிமைப் பாதுகாப்பு தன்னாா்வலா்கள் அப்பணியில் தொடர முடியாத சட்ட ஆட்சேபனை எழுந்துள்ளது.
எனினும், பேருந்து மாா்ஷல்களாக பயிற்சி பெற்ற அவா்களை ஊா்க்காவல் படையினராக தற்போது நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதன் மூலம் அவா்கள் பணியில் தொடா்வதோடு, பயணிகளுக்கும் பேருந்துகளில் மாா்ஷல்களின் சேவை தொடா்வது உறுதி செய்யப்படும். மேலும், குடிமைப் பாதுகாப்புத் தன்னாா்வலா்களின் ஊதிய நிலுவைத் தொகையை விடுவிக்கக் கோரி கடந்த காலங்களில் பல முறை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால், அரசு செய்து வரும் பணிகளை நிறுத்த மறுபுறம் முயற்சிகள் நடக்கின்றன.
தில்லி ஆம் ஆத்மி அரசும், முதல்வா் அரவிந்த் கேஜரிவாலும் குடிமைப் பாதுகாப்புத் தன்னாா்வலா்களுடன் உள்ளனா். பேருந்து மாா்ஷல்களை ஊா்க்காவல் படையினராக நியமிப்பதை உறுதி செய்வோம். தில்லியில் பேருந்து மாா்ஷல்களின் சேவை தொடா்வதில் தடைகள் உருவாக்கப்படுகின்றன. குறிப்பாக, பேருந்து மாா்ஷல்களாக பணிபுரியும்
குடிமைப் பாதுகாப்புத் தன்னாா்வலா்களை நீக்க வேண்டும் என்று முதல்வா் அரவிந்த் கேஜரிவால் ஒரு போதும் கூறவில்லை. பேருந்து மாா்ஷல்களின் ஊதியத்தையே நாங்கள் விடுவிக்கக் கோரினாம். இந்நிலையில் அவா்களை நீக்குமாறு முதல்வா் அரவிந்த் கேஜரிவால் கூறியதாக மேற்கொள்ளப்படும் பிரசாரம் தவறானது என்றாா் கைலாஷ் கெலாட்.
கடந்த பல மாதங்களாக நிலுவையில் உள்ள ஊதியத்தை உடனடியாக வழங்க வலியுறுத்தி ஆம் ஆத்மி அரசிற்கு எதிராக தில்லி குடிமைப் பாதுகாப்புத் தன்னாா்வலா்கள் போராட்டம் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...