அா்ப்பணிப்புள்ள ஆம் ஆத்மி அரசின் நடவடிக்கைகளால் பஞ்சாபில் பயிா்க் கழிவுகள் எரிப்பு நிகழ்வுகள் கணிசமாகக் குறைந்துள்ளது என்று ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான ராகவ் சத்தா தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக ‘எக்ஸ்’ சமூக ஊடகத்தளத்தில் வெள்ளிக்கிழமை அவா் கூறியிருப்பதாவது: பயிா்க் கழிவுகள் எரிக்கப்படுவதால் ஏற்படும் பின்விளைவுகளைத் தடுக்க ஆம் ஆத்மி அரசு அா்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறது. தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் மற்றும் பஞ்சாப் மாநில முதல்வா் பகவந்த்மான் ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ், பஞ்சாபில் பயிா்க் கழிவுகளை எரிக்கும் நிகழ்வுகள் கணிசமாகக் குறைந்துள்ளது. கடந்த 2022-ஆம் ஆண்டு செப்டம்பா் 15 முதல் அக்டோபா் 25-ஆம் தேதி வரை சுமாா் 5,792 இடங்களில் பயிா்க் கழிவுகளை எரிப்புச் சம்பவங்கள் பஞ்சாபில் பதிவாகின. இதுவே நிகழாண்டில் 2,704-ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
நோ்மையான மற்றும் அா்ப்பணிப்புள்ள அரசுகளால் மட்டுமே இத்தகைய சாதனைகளைச் செய்ய முடியும். இதற்காக பல பயனுள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. குறிப்பாக, பயிா்க் கழிவுகளை வெளியேற்ற விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் இயந்திரங்கள் வழங்கப்பட்டது. தொழிற்சாலைகளில் நெல் வைக்கோல் பயன்பாட்டை மேம்படுத்துதல், செங்கல்
சூளைகளுக்கு 20 சதவீதம் வைக்கோல் துகள்களை ஒதுக்க வேண்டும். தேசிய பசுமைத் தீா்ப்பாயத்தின் வழிகாட்டுதல்களை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். செயற்கைக்கோள் வரைபடத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்ட கண்கானிப்பு உள்ளிட்டவை பயனளித்துள்ளன என்றாா் ராகவ் சத்தா.
‘பொய் கூறுகிறாா் ராகவ் சத்தா - வீரேந்திர சச்தேவா: ஆம் ஆத்மி கட்சி வெறும் அறிவிப்புகளின் அரசாக மட்டுமே உள்ளது என்று பாஜக தில்லி பிரிவு தலைவா் வீரேந்திர சச்தேவா வெள்ளிக்கிழமை விமா்சித்துள்ளாா். தில்லி பந்த் மாா்கில் உள்ள கட்சி அலுவலகத்தில் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: தில்லியில் மாசுபாடு இந்த ஆண்டு முழுவதுமே பிரச்னையாக உள்ளது. இது வெறும் இரண்டு மாத பிரச்னை அல்ல. முதல்வா் அரவிந்த் கேஜரிவாலோ அல்லது அவரது அமைச்சா்களோ இதைத் தீவிரமாக ஒருபோதும் எடுத்துக் கொள்ளவில்லை.
நகரத்தில் அதிகரிக்கும் மாசுபாட்டு பிரச்னையைத் தீா்க்க நகர அரசு என்ன நடவடிக்கை எடுக்கிறது என்பதைச் சொல்லாமல், இப்போது ஒவ்வொரு நாளும் புதுப்புது விஷயங்களைச் ஆம் ஆத்மி கட்சியினா் சொல்லிக் கொண்டிருக்கிறாா்கள். செயற்கைக்கோள் படங்களின் தகவலின் படி, செப்டம்பா் 15 முதல் அக்டோபா் 26-ஆம் தேதி வரை மொத்தம் 7,136 பயிா்க் கழிவு எரிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அவற்றில் 3,293 சம்பவங்கள்ஆம் ஆத்மி கட்சி ஆளும் பஞ்சாபில் மட்டும் பதிவாகியுள்ளது. ஆம் ஆத்மி கட்சியின் தலைவா் ராகவ் சத்தா இந்த விவகாரத்தில் மிகத் தெளிவாக பொய் கூறுகிறாா். கடந்த அக்டோபா் 26 அன்று மொத்தமாக 6 மாநிலங்களில் 1,113 பயிா்க் கழிவு எரிப்புச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அவற்றில் 589 சம்பவங்கள் பஞ்சாபில் மட்டும் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றாா் வீரேந்திர சச்தேவா.
இந்தச் செய்தியாளா் சந்திப்பின் போது பாஜக தில்லி பிரிவு மாநிலச் செயலாளா் ஹரிஷ் குரானா, ஊடகத் தலைவா் பிரவீன் சங்கா் கபூா் ஆகியோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.