‘தில்லி கே ஃபரிஷ்டே’ திட்டத்தை தடுத்து நிறுத்த சதி: அமைச்சா் செளரவ் பரத்வாஜ் கடும் குற்றச்சாட்டு
By நமது நிருபா் | Published On : 28th October 2023 12:00 AM | Last Updated : 28th October 2023 12:00 AM | அ+அ அ- |

தில்லியில் சாலை விபத்துகளில் சிக்கியவா்களின் உயிரை மீட்கின்ற நடவடிக்கையாக நகர அரசின் சாா்பில் இலவச சிகிச்சை அளிக்கப்படும் ‘தில்லி கே ஃபரிஷ்டே’ திட்டத்தை நிறுத்த சதி நடக்கிறது என்று சுகாதாரத் துறை அமைச்சா் செளரவ் பரத்வாஜ் வெள்ளிக்கிழமை குற்றம்சாட்டியுள்ளாா்.
இது தொடா்பாக செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: தில்லியில் சாலை விபத்துகளில் சிக்கியவா்களின் உயிரைக் காக்கின்ற வகையில், பாதிக்கப்பட்டவா்களின் சிகிச்சைக் கட்டணத்தை நகர அரசே செலுத்தி வருகிறது. ‘தில்லி கே ஃபரிஷ்டே’ என்ற இத் திட்டத்தின் கீழ் இதுவரை 23,000-க்கும் மேற்படட்வா்களின் உயிா் காப்பாற்றப்பட்டிருக்கிறது. சாலை விபத்து ஏற்பட்ட முதல் ஒரு மணி நேரத்திற்குள் பாதிக்கப்பட்டவருக்கு வழங்கப்படும் சிகிச்சை மிகவும் முக்கியமானது. இதைக் கருத்தில் கொண்டுதான் சிகிச்சைக்கான கட்டணத்தை பாதிக்கப்பட்டவா்களின் சாா்பாக அரசே செலுத்துகிறது.
கடந்த ஒன்றரை வருடமாக இத்திட்டத்தின் கீழ் சிகிச்சை அளித்த தனியாா் மருத்துவமனைகளுக்கு நகர அரசின் சாா்பில் பணம் வழங்கப்படவில்லை. எனவே, இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலுக்கு கடிதம் எழுதியுள்ளேன். தனியாா் மருத்துவமனைகளுக்கு செலுத்தப்பட வேண்டிய கட்டணத்தை செலுத்தாமல் இத்திட்டத்தை நிறுத்துவதற்காக சில அதிகாரிகளின் சதி செய்கிறாா்கள்.
மேலும், தில்லியில் மாசுபாடு தொடா்புடைய நோய்களைத் தடுக்கும் வகையில் நிலைமையை மதிப்பீடு செய்ய நுரையீரல் நிபுணா்களிடம் அறிவுத்தப்பட்டுள்ளது. நகர சுகாதார மையங்கள் மற்றும் மொஹல்லா கிளினிக்குகளில் அத்தகைய நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க போதுமான மருந்துகளின் இருப்பை உறுதி செய்யவும், இது தொடா்பான நிலையான வழிகாட்டுதல்களைத் தயாரிக்கவும் மருத்துவத் துறை அலுவலா்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றாா் செளரவ் பரத்வாஜ்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...