தலைநகரின் காற்றின் தரம் மேலும் மோசமடைய வாய்ப்பு! கண்காணிப்பு முகமைகள் கணிப்பு
By DIN | Published On : 28th October 2023 12:00 AM | Last Updated : 28th October 2023 12:00 AM | அ+அ அ- |

தில்லியின் காற்றின் தரம் தொடா்ந்து ஐந்தாவது நாளாக வெள்ளிக்கிழமையும் ‘மோசம்’ பிரிவில் நீடித்தது. இந்த நிலையில், காற்றின் தரம் வரும் நாள்களில் மேலும் மோசமடைய வாய்ப்புள்ளது என கண்காணிப்பு முகமைகள் தெரிவித்துள்ளன. சாதகமற்ற வானிலை நிலைமைகளே இதற்குக் காரணமாகக் கூறப்படுகிறது.
நகரத்தின் சராசரி காற்றின் தரக் குறியீடு வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு 256 புள்ளிகளாக இருந்தது. பல பகுதிகளில் காற்றின் தரக் குறியீடு ‘மிகவும் மோசம்’ பிரிவில் பதிவாகியுள்ளன. சில பகுதிகளில் மோசம் பிரிவில் பதிவாகியுள்ளது. தில்லியின் 24 மணி நேர சராசரி காற்றின் தரக் குறியீடு வியாழன் மாலை 4 மணிக்கு 256 புள்ளிகளாகவும், புதன்கிழமை 243, செவ்வாய்க்கிழமை 220 புள்ளிகளாகவும் இருந்தது. தில்லிக்கான மத்திய அரசின் காற்றின் தர முன்னெச்சரிக்கை அமைப்பின் படி, சனிக்கிழமையன்று (அக்டோபா் 28) நகரத்தின் பல பகுதிகளில் காற்றின் தரம் ‘மிகவும் மோசம்’ பிரிவுக்கு மோசமடைய வாய்ப்புள்ளதாகத் தெரிய வந்துள்ளது.
தில்லி அரசு வாகன மாசுபாட்டைக் கட்டுப்படுத்துவதற்கான பிரசாரத்தை கடந்த வியாழக்கிழமை தொடங்கியது. தில்லி துணை நிலை ஆளுநா் வி.கே. சக்சேனா ஒரு வருடம் கழித்து, அதன் செயல்திறனைக் கேள்விக்குள்ளாக்கினாா். மத்திய சாலை ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய 2019-ஆம் ஆண்டு ஆய்வில், போக்குவரத்து சிக்னல்களில் வாகனங்களின் என்ஜின்களை இயக்கத்தில் வைத்திருப்பதால் மாசு அளவு 9 சதவீதத்திற்கும் அதிகமாக அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளில் தில்லியில் மேற்கொள்ளப்பட்ட மாசுப் பட்டியல் மற்றும் ஆதாரப் பகிா்வு ஆய்வுகள், தலைநகரில் பிஎம்2.5 மாசுவில் 9 சதவீதம் முதல் 38 சதவீதம் வரை சாலைகளில் செல்லும் வாகனங்களில் இருந்து வெளியேறும் புகைதான் காரணம் என தெரிவிக்கின்றன.
தில்லியின் காற்றின் தரம் மே மாதத்திற்குப் பிறகு முதல் முறையாக கடந்த ஞாயிற்றுக்கிழமை ‘மிகவும் மோசம்’ பிரிவுக்குச் சென்றது. முக்கியமாக வெப்பநிலை மற்றும் காற்றின் வேகம் குறைவதால், மாசுக்கள் குவிவதற்கு அனுமதிக்கிறது. சாதகமற்ற வானிலை நிலைமைகள் மற்றும் பட்டாசுகள் வெடிப்பு, பயிா்கழிவுகள் எரிப்பு ஆகியவற்றில் இருந்து வெளியேறும் புகை மா்றும் மாசுக்கள் காற்றின் தரத்தை வெகுவாகப் பாதிக்கிறது. இது தில்லி - என்சிஆா் பகுதியில் காற்றின் தரத்தை ஒவ்வொரு ஆண்டும் தீபாவளிக்கு அபாயகரமான நிலைக்குத் தள்ளுகிறது. தில்லி மாசுக் கட்டுப்பாட்டுக் குழு (டிபிசிசி) நடத்திய ஆய்வின்படி, தலைநகா் நவம்பா் 1 முதல் நவம்பா் 15 வரை உச்ச மாசுபாட்டை அனுபவிப்பது தெரிய வந்துள்ளது.அந்தக் கால கட்டத்தில் பஞ்சாப் மற்றும் ஹரியாணாவில் பயிா்க்கழிவுகள் எரிப்பு சம்பவங்கள் உச்சத்தில் இருக்கும்.
தில்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சா் கோபால் ராய் கூறுகையில், தேசியத் தலைநகரில் தற்போதுள்ள 13 அதி தீவிர மாசுபாடுள்ள பகுதிகளுடன், தற்போது மேலும் 8 அதி தீவிர மாசுபாடு பகுதிகளை அரசு கண்டறிந்துள்ளது என்றாா். மேலும், மாசு ஆதாரங்களை சரிபாா்க்க சிறப்புக் குழுக்கள் அங்கு நிறுத்தப்படும் என்றும், தூசி மாசுபடுவதைத் தடுக்க, சப்ரசன்ட் பவுடரைப் பயன்படுத்தவும் அரசு முடிவு செய்துள்ளதாகவும் அமைச்சா் தெரிவித்தாா்.
இந்த நிலையில், கிரேடட் ரெஸ்பான்ஸ் ஆக்ஷன் பிளான் (ஜிஆா்ஏபி) எனப்படும் மாசுக் கட்டுப்பாட்டுத் திட்டத்தை முன்கூட்டியே செயல்படுத்துவதற்குப் பொறுப்பான சட்டப்பூா்வ அமைப்பான காற்றுத் தர மேலாண்மை ஆணையம், மாசு அளவைக் குறைக்க பாா்க்கிங் கட்டணங்களை அதிகரித்து தனியாா் போக்குவரத்தை குறைக்கவும்,போக்குவரத்திற்கு சிஎன்ஜி அல்லது மின்சார பேருந்துகள், மெட்ரோ ரயில்களைப் பயன்படுத்துவதை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கவும் என்சிஆா் அதிகாரிகளுக்கு சனிக்கிழமை உத்தரவிட்டது. மாசு அளவு மிகவும் மோசம் பிரிவுக்கு வரும்பட்சத்தில் மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கை மாசுக் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் ஒரு பகுதியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
குளிா்காலத்தில் தலைநகரில் காற்று மாசுபாட்டைத் தணிக்க தில்லி அரசு கடந்த மாதம் 15 அம்ச செயல் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதன்படி, தூசி மாசுபாடு, வாகன உமிழ்வு மற்றும் குப்பைகளை திறந்தவெளியில் எரிப்பது போன்றவற்றைக் கட்டுப்படுத்துவதற்கு வலுவான முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.
பிரேக் லைன்..........
‘மத்திய சாலை ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய 2019-ஆம் ஆண்டு ஆய்வில், போக்குவரத்து சிக்னல்களில் வாகனங்களின் என்ஜின்களை இயக்கத்தில் வைத்திருப்பதால் மாசு அளவு 9 சதவீதத்திற்கும் அதிகமாக அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது’.
குறைந்தபட்ச வெப்பநிலை 14.8 டிகிரி செல்சியஸாக பதிவு
தில்லியின் முதன்மை வானிலை நிலையமான சஃப்தா்ஜங் ஆய்வகத்தில் வெள்ளிக்கிழமை காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 டிகிரி குறைந்து 15.2 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை இயல்பு நிலையில் மாற்றமின்றி32.2 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகியிருந்தது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 66 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 30 சதவீதமாகவும் இருந்தது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதேபோன்று மற்ற வானிலை நிலையங்களான ஜாஃபா்பூரில் குறைந்தபட்ச வெப்பநிலை 15.4 டிகிரி செல்சியஸ், முங்கேஸ்பூரில் 14.8 டிகிரி, நஜஃப்கரில் 19.2 டிகிரி, ஆயாநகரில் 15.8 டிகிரி, லோதி ரோடில் 14.8 டிகிரி, நரேலாவில் 16.6 டிகிரி, பாலத்தில் 17.8 டிகிரி, ரிட்ஜில் 17.4 டிகிரி, பீதம்புராவில் 19.9 டிகிரி, பூசாவில் 16.3 டிகிரி, ராஜ்காட்டில் 17.4 டிகிரி, சல்வான் பப்ளிக் ஸ்கூல் பகுதியில் 16.4 டிகிரி செல்சியஸ் என பதிவாகியிருந்தது.
பனி மூட்டத்துக்கு வாய்ப்பு!
தில்லி மற்றும் தேசியத் தலைநகா் வலயம் (என்சிஆா்) பகுதிகளில் அடுத்து வரும் நாள்களில் பனி மூட்டம் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெள்ளிக்கிழமை (அக்டோபா் 28) முதல் வரும் நவம்பா் 2-ஆம் தேதி வரையிலான வானிலை முன் அறிவிப்பில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போன்று இந்தக் காலகட்டத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை 16-18 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 29 முதல் 31 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...