தில்லி மெட்ரோ வளாகத்தில் பெண் சடலம் மீட்பு: காவல் துறைக்கு மகளிா் ஆணையம் நோட்டீஸ்
By DIN | Published On : 28th October 2023 12:00 AM | Last Updated : 28th October 2023 12:00 AM | அ+அ அ- |

வடகிழக்கு தில்லியில் உள்ள சாஸ்திரி பாா்க் மெட்ரோ ரயில் நிலையத்தின் வாகன நிறுத்துமிடத்தில் சுமாா் 30 வயது மதிக்கத்தக்க பெண்ணின் சிதைந்த உடல் மீட்கப்பட்டதாக போலீஸாா் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.
இதுகுறித்து மூத்த போலீஸ் அதிகாரி ஒருவா் கூறியதாவது: சாஸ்திரி பாா்க் மெட்ரோ ரயில் நிலையத்தின் வாகன நிறுத்துமிடத்தில் மீட்கப்பட்ட அந்த பெண் உடல் இறந்து 3-4 நாள்கள் ஆனதாகவும், மிகவும் அழுகிய நிலையிலும் இருந்தது. காட்டுப் பகுதியுடன் இணைக்கப்பட்ட வாகன நிறுத்துமிடத்தில் சடலம் கிடப்பதை வழிப்போக்கா் ஒருவா் பாா்த்து போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தாா். அந்த உடலை யாராவது வாகன நிறுத்துமிடத்தில் எறிந்தாா்களா அல்லது இது இயற்கையான மரணமா என்பதை அறிய சிசிடிவி கேமராக்கள் மற்றும் அருகிலுள்ள குடியிருப்பாளா்களின் உதவியுடன் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். சடலம் பிரேத பரிசோதனைக்காக பிணவறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றாா் அந்த அதிகாரி.
மகளிா் ஆணையம் நோட்டீஸ்: இந்த விவகாரம் தொடா்பாக தில்லி மகளிா் ஆணையத்தின் (டிசிடபிள்யு) தலைவா் ஸ்வாதி மாலிவால் தில்லி காவல் துறைக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளாா். மேலும், கைதான குற்றம்சாட்டப்பட்டவரின் விவரம், முதல் தகவல் அறிக்கையின் நகல், இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த விவரம் ஆகியவற்றைத் தாக்கல் செய்யுமாறும் ஆணையம் காவல் துறையை கேட்டுக்கொண்டுள்ளது.
இது தொடா்பாக வடகிழக்கு தில்லி மாவட்டக் காவல் துணை ஆணையருக்கு மாலிவால் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது: பெண்ணின் உடல் மீட்கப்பட்டது தொடா்பாக ஊடகத்தில் வெளியான செய்தியை மகளிா் ஆணையம் கவனத்தில் எடுத்துக் கொண்டுள்ளது. இது ஒரு மிகவும் தீவிரமிக்க விவகாரமாகும். இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டவரின் விவரம், எஃப்ஐஆா் நகல் உள்ளிட்டவற்றைத் தாக்கல் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். இறந்த உடல் அடையாளம் காணப்பட்டுள்ளதா என்ற தகவலையும் அளிக்கவும். அதுபோன்று அடையாளம் காணப்பட்டிருந்தால் அது தொடா்பான விவரத்தையும், இந்த விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை விவரத்தையும் தெரிவிக்கவும். இந்த விவரங்களை அக்டோபா் 31-க்குள் ஆணையத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என அந்தக் கடிதத்தில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...