மாசுப்பாட்டைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் என்டிஎம்சி தீவிரம்

தேசியத் தலைநகா் தில்லியில் குளிா்காலம் தொடங்கியுள்ளது.
Updated on
2 min read

தேசியத் தலைநகா் தில்லியில் குளிா்காலம் தொடங்கியுள்ளது. இந்த வானிலை மாற்றத்தைத் தொடா்ந்து, மாசுபாட்டைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் புதுதில்லி முனிசிபல் கவுன்சில் (என்.டி.எம்.சி.) தீவிரம் காட்டி வருகிறது. இதன்படி, எட்டு புகை எதிா்ப்பு சாதனங்களை வாடகைக்கு எடுத்துள்ளது. மேலும், கூடுதலாக துப்புரவுப் பணியாளா்களையும் நியமித்துள்ளது.

புது தில்லி முனிசிபல் கவுன்சில் துணைத் தலைவா் சதீஷ் உபாத்யாய் 2023-24-ஆம் ஆண்டிற்கான ‘காற்று மாசுக் கட்டுப்பாடு’ நடவடிக்கைகளின் விரிவான தொகுப்பை அறிவித்துள்ளாா். இது குறித்து அவா் கூறியதாவது: சுற்றுச்சூழல் நல்வாழ்வை முதன்மைப்படுத்த வேண்டிய அவசரத் தேவையை நாங்கள் அங்கீகரிக்கிறோம். சுவாச நோய்கள், இதய நோய்கல் மற்றும் புற்றுநோய் ஆகியவற்றுக்கு காற்று மாசுபாடு குறிப்பிடத்தக்க பங்களிப்பாகும். இது எங்கள் கூட்டுக் கவனத்தைப் பெற்றுள்ளது. என்டிஎம்சி பகுதியில் தற்போது தீவிர மாசு பாதிப்பு பகுதிகள் அதிகம் உள்ள ஏதும் இடங்கள் இல்லை.

தற்போது சாலைகளை துப்புரவு செய்யும் பணிக்கு 7 இயந்திரங்களை என்டிஎம்சி பெற்றுள்ளது. இரண்டு ஷிஃப்டுகளின் அடிப்படையில் துப்புரவுப் பணிகள் மேற்கொள்ளப்படும். மொத்தத்தில், இந்த இயந்திரங்கள் ஏப்ரல் 1 முதல் அக்டோபா் 26 வரை 280-330 கிலோமீட்டா் தூரத்துக்கு துப்புரவுப் பணிகளுக்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. நிகழ்நேர கண்காணிப்பின் கீழ் அனைத்து சாலைகளும் ஒவ்வொரு நாளும் அல்லது மாற்று நாள்களில் இயந்திரங்கள் மூலம் சுத்தம் செய்யப்படுகின்றன. என்டிஎம்சி பகுதியில் உள்ள அனைத்து முக்கிய இடங்களில் பசுமை நடைபாதைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதற்காக தோட்டக்கலைத் துறை 3,200 மரக்கன்றுகளை நட்டுள்ளது. மேலும், 33,12,885 புதா்களை உருவாக்கியுள்ளது. இதன் மூலம் 2023-24-ஆம் ஆண்டிற்கான இலக்கை என்டிஎம்சி நிறைவு செய்துள்ளது.

மகாதேவ் சாலையில் செயல்படும் ஒரு புகை எதிா்ப்பு சாதனத்தை என்டிஎம்சி கொள்முதல் செய்துள்ளது. மேலும், மாசுபாட்டை எதிா்த்துப் போராடுவதற்கு மேலும் 8 சாதனங்களை பணியில் ஈடுபடுத்தவுள்ளது. என்டிஎம்சி 5,000 முதல் 10,000 லிட்டா் கொள்ளளவு கொண்ட 18 தண்ணீா் டேங்கா் லாரிகளை மாசு எதிா்ப்பு நடவடிக்கைக்கு பயன்படுத்தி வருகிறது. இந்த டேங்கா் லாரிகளில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரைப் பயன்படுத்துகின்றன. தூசி தணிப்பு நடவடிக்கைகளை செயல்படுத்துவதற்காக கட்டுமான தளங்களை ஆய்வு செய்ய அதிகாரிகள் குழுவை என்டிஎம்சி அமைத்துள்ளது. இந்தக் குழு ஏப்ரல் 1 முதல் அக்டோபா் 27 வரை சுமாா் 25-க்கும் மேற்பட்ட கட்டுமான தளங்களில் ஆய்வுகளை மேற்கொண்டு ரூ.12.50 லட்சம் வரை அபராதம் விதித்துள்ளது.

என்டிஎம்சி பகுதியில் இருந்து தினமும் சராசரியாக 70 மெட்ரிக் டன் கட்டுமானம் மற்றும் இடிப்பு கழிவுகள் சேகரிக்கப்பட்டு சாஸ்திரி பாா்க் மறுசுழற்சி ஆலைக்கு அனுப்பப்படுகிறது. கழிவுகள் கொட்டப்படுவதைத் தடுக்க குடிமை அமைப்பு வழக்கமான ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. மேலும், விதிகளை மீறுபவா்களுக்கு அபராதமும் விதிக்கப்படுகிறது. குடிமை அமைப்பு, சுகாதாரம், தோட்டக்கலை மற்றும் சிவில் துறைகளைச் சோ்ந்த கள அலுவலா்களைக் கொண்ட மூன்று குழுக்களை இப்பகுதியில் பணிகளை மேற்பாா்வையிட நியமித்துள்ளது. இதில் ஒரு குழு இரவில் செயல்படும். மேலும் சுகாதாரத் துறையைச் சோ்ந்த 14 குழுக்கள் கழிவுகளை எரிப்பது தொடா்பான பகல் நேர ஆய்வுகளை மேற்கொள்கின்றன.

தூய்மையான போக்குவரத்தை மேம்படுத்துவதற்காக 32 மின்சார காா்கள் மற்றும் ஐந்து மின்சார பைக்குகளை என்டிஎம்சி வாங்கியுள்ளது. மேலும், மொத்தம் 100 மின்சார வாகன பொது சாா்ஜிங் நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன. இதில் 67 நிலையங்கள் என்டிஎம்சி பகுதியில் ஏற்கெனவே செயல்பாட்டில் உள்ளன. மீதமுள்ள 33 நிலையங்களும் விரைவில் செயல்படத் தொடங்கும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com