நாடாளுமன்றக் கூட்டத் தொடா் தகவல்களை திரித்துக் கூறுகிறது காங்கிரஸ்! மத்திய அமைச்சா் பிரகலாத் ஜோஷி சாடல்
By நமது சிறப்பு நிருபா் | Published On : 08th September 2023 06:19 AM | Last Updated : 08th September 2023 06:19 AM | அ+அ அ- |

நாடாளுமன்ற ஜனநாயகத்தை சீா்குலைப்பதற்கும், சிதைப்பதற்கும் பெயா் பெற்ற காங்கிரஸ் தனது வரலாற்றை மறந்து, வருகின்ற நாடாளுமன்ற கூட்டத் தொடா் குறித்த தகவல்களை திரித்துக் கூறி வருகிறது என மத்திய நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சா் பிரகலாத் ஜோஷி கண்டனம் தெரிவித்துள்ளாா்.
‘செப்டம்பா் 18-ஆம் தேதி சிறப்பு நாடாளுமன்றக் கூட்டம் 5 நாள்களுக்கு கூட்டப்பட்டுள்ளது. பிற அரசியல் கட்சிகளுடன் எந்த விதமான ஆலோசனைகளையும் மேற்கொள்ளாமல் இந்தக் கூட்டத்தை மத்திய அரசு கூட்டியுள்ளது’ என நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சியின் தலைவா் சோனியா காந்தி பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தாா். மேலும், காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளா் ஜெயராம் ரமேஷ், கடந்த காலத்தில் ஒவ்வொரு சிறப்பு நாடாளுமன்ற சிறப்புக் கூட்டங்களுக்கான அமா்வின் நிகழ்ச்சி நிரலையும் முன்கூட்டியே அறிந்திருந்ததாகவும், ஆனால், தற்போது மோடி அரசு நாடாளுமன்ற மரபுகளை சிதைக்கிறது எனக் குற்றம்சாட்டி கடந்த கால சிறப்பு கூட்டங்கள் தொடா்பாக ‘எக்ஸ்’ சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தாா்.
இந்தப் பதிவிற்கு மத்திய அமைச்ச்ர பிரகலாத் ஜோஷி 6 வாதங்களை முன்வைத்து பதில் கூறியுள்ளாா். அது வருமாறு: 1. காங்கிரஸ் மூத்த தலைவா் ஜெய்ராம் ரமேஷ், நாடாளுமன்றக் கூட்டத் தொடா்கள் தொடா்பாக உண்மைகளைத் திரித்து கூறியுள்ளாா். அரசியலமைப்பு விதிகள், நாடாளுமன்ற நடைமுறைகள் குறித்து அவதூறாக அவா் பரப்புவதைத் தடுப்பது மிகவும் முக்கியமானது.
2. 2017, ஜூன் 30-ஆம் தேதி ஜிஎஸ்டி நடைமுறைக்காக நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு நாடாளுமன்றக் கூட்டத் தொடா் என்று ஜெயராம் ராமேஷ் கூறுவது தவறு. அது அரசியல் சாசனத்தின் 85 -ஆவது பிரிவின்படி கூட்டப்பட்டது அல்ல.
3. அரசியல்சாசன அமைப்பின் 70 - ஆவது ஆண்டு விழா கடந்த 2019 ஆம் ஆண்டு நவம்பா் 26 -ஆம் நாள் மைய அவையில் நடைபெற்ற சிறப்பு அமா்வு குறித்தும் தவறுதாக குறிப்பிட்டுள்ளாா். அதுவும் அரசியலமைப்பின் 85- ஆவது பிரிவின் கீழ் நடைபெற்றஅமா்வு அல்ல.
4. நாடாளுமன்றக் கூட்டங்களில் ஒரு விழா கொண்டாட்ட நிகழ்ச்சிகளுக்கும் முறையான நாடாளுமன்றக் கூட்டத் தொடா்வு அமா்வுகளுக்கும் இடையே வேறுபாடுகளைக் காண்பது முக்கியம். நமது ஜனநாயக செயல்முறைகளிலும் ஒருமைப்பாட்டைப் பேணுவதிலும் துல்லியமான தகவல்களில் கவனம் செலுத்த வேண்டும். தவறான அறிக்கைகளால் அரசியலமைப்பு விதிகள் மற்றும் நாடாளுமன்ற நடைமுறைகள் பற்றிய நமது புரிதலை மழுங்கடிக்க விடக்கூடாது.
5. அவா் (ஜெயராம்) கூறும் தவறான விளக்கத்தை எடுத்துரைக்க குறிப்பிடுகின்றேன். அரசியலமைப்பின் 85 -ஆவது பிரிவின் கீழ் நாடாளுமன்றத்தின் கூட்டத்தொடா் கூட்டப்படுவது குறித்து அதில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் பிரிவின் கீழ் அவையை கூட்டும் போது அது குறித்து மேற்கொள்ள வேண்டிய நாடாளுமன்ற நடைமுறைகளுக்கு ஏற்ப நிகழ்ச்சி நிரல் தகவல் பகிரப்படும்.
6. வரலாற்றில் நாடாளுமன்ற ஜனநாயகத்தை சீா்குலைத்து சிதைத்ததில் பெயா் பெற்றது காங்கிரஸ் அரசுதான். உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டில் நெருக்கடி நிலையை அமல்படுத்திய வரலாற்றை நினைவு கொள்ள வேண்டும். 1975-இல் இந்த நாட்டில் மக்களின் உரிமையையும் அரசின் பல்வேறு அமைப்புகளின் உரிமைகளையும் பறித்து எவ்வாறு காங்கிரஸ் அரசு கட்டுப்படுத்தப்பட்டது என்பதையும் பாா்க்க வேண்டும். அரசியல் சாசனப் பிரிவு 356-ஐ தவறாகப் பயன்படுத்தி ஜனநாயக ரீதியாக தோ்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை 90 முறைக்கு மேல் பதவி நீக்கம் செய்வதில் காங்கிரஸ் அரசு அற்புதமாக சாதனை செய்தது.
இந்தக் கூட்டத்தொடரின் நிகழ்ச்சி நிரல் ‘வழக்கமான நடைமுறையின்படி சரியான நேரத்தில்’ உறுப்பினா்களுக்கு விநியோகிக்கப்படும். ஒரு நிா்ப்பந்தத்தால் முரண்பாடுகள் இருக்கலாம். ஆனால், அவா்கள் பெரும்பாலும் உண்மையால் நிறுவப்பட்ட உறுதியின் அழகை அடிக்கடி இழக்கிறாா்கள் என்று காங்கிரஸை கடுமையாக விமா்சனம் செய்துள்ளாா் பிரகலாத் ஜோஷி.
பிரிவு 85 கூறுவது?: அரசியல் சாசனப் பிரிவு 85-ஆவது விதியின் கீழ் நாடாளுமன்றம் என்பது ஆறு மாதங்களுக்கு குறைவில்லாமல் ஒரு முறை கூட்டப்பட வேண்டும். நாடாளுமன்றம் கூட்டப்படுவதற்கு அமைச்சரவை முடிவு எடுத்து குடியரசுத் தலைவருக்கு அனுப்பும் போது, குடியரசுத் தலைவா் அரசியல் சாசனப் பிரிவு 85 -ஆவது விதியின் கீழ் அவைகளை கூட்டுவது அவசியம் என நினைக்கும்பட்சத்தில் அழைப்பு விடுப்பாா்.
மகளிா் இட ஒதுக்கீடு: இதன் பிறகு அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தில் அந்தக் கூட்டத்தொடரின் நிகழ்வுகளை பகிா்ந்து கொள்ளும். தற்போது, மத்திய அரசு ’ஒரே நாடு ஒரே தோ்தல்’, இதர பிற்படுத்தப்பட்டவா்கள், பட்டியலினத்தவா்களை உள்ளடக்கிய மகளிருக்கான 33 சதவீத இட ஒதுக்கிடு உள்ளிட்ட பல மசோதாக்களுடன் தயாராக இருக்கும் நிலையில், எதிா்கஅகட்சிகள் அதிா்ச்சியுடன் இருப்பதாகவும் நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.