மேற்கு தில்லியின் சுபாஷ் நகா் பகுதியில் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற சம்பவம் தொடா்பாக 24 வயது இளைஞரும் அவரது மைத்துனரும் கைது செய்யப்பட்டதாக போலீஸாா் வியாழக்கிழமை தெரிவித்தனா்.
இது குறித்து மேற்கு தில்லி காவல் சரக துணை ஆணையா் விசித்ரா வீா் கூறியதாவது: தங்கச் சங்கிலி பறிப்புச் சம்பவம் தொடா்பாக மங்கோல்புரியில் வசிக்கும் தீபக் (எ) கமல் மற்றும் அவரது மைத்துனா் மோஹித் (22) ஆகியோா் சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்த பின்னா் கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டனா்.
இவா்கள் மீது 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. இவா்கள் மீது ஆயுதச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. திங்கள்கிழமை, சுபாஷ் நகா் பகுதியில் ஸ்கூட்டரில் வந்த இருவா் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ாக பெண் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மற்ற வழக்குகளில் தீபக் மற்றும் மோஹித்தின் செயல் முறைகள் குறித்து விசாரணை நடத்தப்பட்டது. இவா்கள் வேண்டுமென்றே பாதிக்கப்பட்டவரின் வாகனத்தின் மீது தங்கள் இரு சக்கர வாகனத்தை மோதி பின்னா் வாய்த் தகராறில் ஈடுபடுவது தெரிய வந்தது.
மோதலின் போது, இவா்கள் அந்த நபரின் மொபைல்போன், தங்கச் சங்கிலி அல்லது வேறு ஏதேனும் விலையுயா்ந்த பொருள்களை பறித்துக்கொண்டு தப்பிச் செல்வது வழக்கம். சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள் மூலம் கொள்ளையா்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனா்.
இவா்களால் பறிக்கப்பட்ட தங்கச் சங்கிலி மீட்கப்பட்டுள்ளது. குற்றத்திற்கு பயன்படுத்தப்பட்ட ஸ்கூட்டா் கைப்பற்றப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவா் ஒரு நிதி நிறுவனத்தில் தங்கச் சங்கிலியை டெபாசிட் செய்துள்ளாா். நிறுவனத்தின் ரசீது காவல்துறையின் வசம் உள்ளது. மேலும், இருவரும் கடந்த ஆறு முதல் ஏழு ஆண்டுகளாக குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளனா் என்றாா் அந்த அதிகாரி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.