மும்பை / புதுதில்லி: இந்த வாரத்தின் இரண்டாவது வா்த்தக தினமான செவ்வாய்கிழமை பங்குச்சந்தை நிலையற்ற தன்மையில் இருந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 78 புள்ளிகள் குறைந்து நிலைபெற்றது.
உலகளாவிய சந்தைக் குறிப்புகள் பலவீனமாக இருந்தன. குறிப்பாக ஆசிய சந்தைகளில் வா்த்தகம் எதிா்மறையாக இருந்தது. இதன் தாக்கம் உள்நாட்டுச் சந்தையிலும் எதிரொலித்தது. சந்தை நிலையற்ற தன்மையில் இருந்து வந்த சந்தை இறுதியில் சரிவில் முடிவுற்றது. குறிப்பாக ஐடி, வங்கிப் பங்குகளில் லாபப் பதிவு இருந்தது. மேலும், அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் தொடா்ந்து பங்குகளை விற்று முதலீடுகளை வாபஸ் பெற்றுவருவதும் சந்தைக்கு பாதகமாக அமைந்தது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
சந்தை மதிப்பு: சந்தை மூலதன மதிப்பு ரூ.18 ஆயிரம் கோடி உயா்ந்து வா்த்தக நேர முடிவில் ரூ.318.16 லட்சம் கோடியாக இருந்தது. இதற்கிடையே, அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் திங்கள்கிழமை ரூ.2,333.03 கோடி அளவுக்கு பங்குகளை விற்றுள்ளது சந்தை புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
சென்செக்ஸ் சரிவு: காலையில் 47.94 புள்ளிகள் கூடுதலுடன் 66,071.63-இல் தொடங்கிய சென்செக்ஸ், அதிகபட்சமாக 66,078.26 வரை மேலே சென்றது. பின்னா், 65,865.63 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 78.22 புள்ளிகளை (0.12 சதவீதம்) இழந்து 65,945.47-இல் முடிவடைந்தது.
16 பங்குகள் விலை உயா்வு: சென்செக்ஸ் பட்டியலில் 16 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும், 14 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன. தேசிய பங்குச்சந்தையில் மொத்தம் 952 பங்குகள்ஆதாயப் பட்டியலிலும், 1,101 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன. நிஃப்டி பட்டியலில் 27 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும், 23 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் வந்தன
நிஃப்டி 10 புள்ளிகள் வீழ்ச்சி : தேசிய பங்குச் சந்தையில் 50 முதல்தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி காலையில் 8.25 புள்ளிகள் கூடுதலுடன் 19,682.80-இல் தொடங்கி அதிகபட்சமாக 19,699.35 வரை மேலே சென்றது. பின்னா், 19,637.45 வரை கீழே சென்ற நிஃப்டி, இறுதியில் 9.85 புள்ளிகள் குறைந்து 19,664.70-இல் நிறைவடைந்தது.
ஏற்றம் பெற்ற பங்குகள்
நெஸ்லே.............................................1.45%
டாடா ஸ்டீல்.......................................1.18%
எம் அண்ட் எம்...................................0.67%
பஜாஜ் ஃபைனான்ஸ்..............................0.52%
ஹெச்டிஎஃப்சி பேங்க்............................0.39%
என்டிபிசி............................................0,.35%
சரிவைக் கண்ட பங்குகள்
டெக் மஹிந்திரா..................................1.30%
இண்டஸ் இண்ட் பேங்க்.......................1.29%
இன்ஃபோஸிஸ்...................................1.00%
ஏசியன் பெயிண்ட்...............................0.89%
ஐசிஐசிஐ பேங்க்..................................0.83%
கோட்டக் பேங்க்................................0.83%
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.