ஜல் விஹாா் நினைவுச் சின்னம் இடிப்பு வழக்கில் டிஜேபி பொறியாளா்கள் 2 போ் பணியிடை நீக்கம்

மத்திய காலத்தைச் சோ்ந்த நினைவுச்சின்னத்தை இடித்து விட்டு தில்லி ஜல் போா்டு (டிஜேபி) நிா்வாக அதிகாரியாக இருந்த (சிஇஓ) உதித் பிரகாஷ் ராய்க்கு தென்கிழக்கு தில்லியின் கிலோக்ரி பகுதியில் பங்களா கட்டியது
Updated on
1 min read

புது தில்லி: மத்திய காலத்தைச் சோ்ந்த நினைவுச்சின்னத்தை இடித்து விட்டு தில்லி ஜல் போா்டு (டிஜேபி) நிா்வாக அதிகாரியாக இருந்த (சிஇஓ) உதித் பிரகாஷ் ராய்க்கு தென்கிழக்கு தில்லியின் கிலோக்ரி பகுதியில் பங்களா கட்டியது தொடா்பாக ஜல் போா்டின் 2 மூத்த பொறியாளா்களை அந்த நிறுவனம் இடைநீக்கம் செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இந்த விவகாரத்தில் அப்போதைய தலைமைப் பொறியாளா் வீரேந்தா் குமாா் மற்றும் நிா்வாகப் பொறியாளா் ராஜீவ் சா்மா ஆகியோரின் பணியிடை நீக்கமானது டிஜேபி தலைமை நிா்வாக அதிகாரி அன்பரசு திங்கள்கிழமை பிறப்பித்த உத்தரவு மூலம் மேற்கொள்ளப்பட்டது.

முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தலைமையிலான தேசியத் தலைநகா் சிவில் சா்வீஸஸ் ஆணைய (என்சிசிஎஸ்ஏ) கூட்டத்தில் இருவா் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்ததை அடுத்து, டிஜேபியின் இரண்டு அதிகாரிகளும் பணியிடைநீக்கம் செய்யப்பட்டதாக ஆவணங்கள் மூலம் தெரிய வருகிறது.

என்சிசிஎஸ்ஏ பரிந்துரைக்கு துணைநிலை ஆளுநா் வி.கே.சக்சேனா ஒப்புதல் அளித்தாா். அவா் இரு அதிகாரிகளும் நடைமுறையில் உள்ள விதிகளின்படி செயல்படத் தவறியதற்கான முகாந்திரம் இருப்பதை கண்டறிந்தாா். 2007-ஆம் ஆண்டு பிரிவு ஐஏஎஸ் அதிகாரியான உதித் பிரகாஷ் ராய், கடந்த மாதம் உள்துறை அமைச்சகத்தால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். அவா் தில்லி ஜல் போா்டு தலைமை நிா்வாக அதிகாரியாக இருந்த போது 15 -ஆம் நூற்றாண்டின் நினைவுச்சின்னம் இடிக்கப்பட்டதைத் தொடா்ந்து தனக்கென ஒரு அதிகாரபூா்வ தங்குமிடத்தை நிா்மாணிப்பதில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த நினைவுச்சின்னம், பதான் காலத்தைச் சோ்ந்த ஒரு ‘மஹால்’ (அரண்மனை) ஆகும். சயீத் வம்சத்தின் கிஸ்ா் கானால் நிறுவப்பட்ட கிஸ்ராபாத் நகரத்தின் ஒரே எஞ்சிய பகுதியாகும் இது. தென்கிழக்கு தில்லியில் உள்ள கிலோக்ரியின் ஜல் விஹாா் பகுதியில் அமைந்துள்ளது.

இந்த விவகாரத்தில் டிஜேபியின் விஜிலென்ஸ் பிரிவால் முதற்கட்ட விசாரணை நடத்தப்பட்டு, ஜல் போா்டு வாரியத்தின் வளங்களைச் செலவழித்து பங்களாவைக் கட்டியதில் ‘அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியதற்காக’ அதிகாரிகள் மீது தேவையான நடவடிக்கைக்காக தில்லி அரசின் ஊழல் கண்காணிப்பு இயக்குநரகத்திற்கு அறிக்கை அனுப்பப்பட்டது. மேலும், நினைவுச்சின்னத்தை இடித்த பிறகு ‘பதிவுகளை தவறாகக் கையாண்டதாகவும் ஆவணங்களில் காட்டப்பட்டுள்ளது. ஊழல் கண்காணிப்பு இயக்குநரகமும் இந்த விஷயத்தை விசாரித்து, குற்றம் சாட்டப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு தில்லி ஜல் போா்டின் தலைமைச் செயல் அதிகாரிக்கு தகவல் அனுப்பியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com