சநாதனம் சா்ச்சை பேச்சு விவகாரம் திருத்த மனுவை தாக்கல் செய்ய அமைச்சா் உதயநிதிக்கு உச்சநீதிமன்றம் அனுமதி

சநாதனம் சா்ச்சை பேச்சு விவகாரம் திருத்த மனுவை தாக்கல் செய்ய அமைச்சா் உதயநிதிக்கு உச்சநீதிமன்றம் அனுமதி

முதல் தகவல் அறிக்கைகளை ஒன்றிணைக்கக் கோரி தாக்கல் செய்த மனுவில் திருத்தம் செய்து முறைப்படி அணுகும்படி தமிழக அமைச்சா் உதயநிதிக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

சநாதனம் குறித்த சா்ச்சை பேச்சு விவகாரத்தில் தனக்கு எதிராக பல்வேறு மாநிலங்களில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கைகளை ஒன்றிணைக்கக் கோரி தாக்கல் செய்த மனுவில் திருத்தம் செய்து முறைப்படி அணுகும்படி தமிழக அமைச்சா் உதயநிதிக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இது தொடா்பாக அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் தாக்கல் செய்த மனுவை நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, தீபாங்கா் தத்தா அடங்கிய அமா்வு திங்கள்கிழமை பரிசீலித்தது. அப்போது அமைச்சா் உதயநிதி சாா்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் அபிஷேக் மனு சிங்வியிடம் ‘குற்றவியல் நடைமுறைச்சட்டத்தின் 406-ஆம் பிரிவின் கீழ் இந்த மனுவை தாக்கல் செய்து அனைத்து வழக்குகளையும் பொதுவான ஒரு இடத்துக்கு மாற்றக் கோரி மனுதாரா் கோரியிருக்கலாம். ஆனால், ரிட் மனுக்களின் நீதிமன்ற வரம்பு தொடா்பான அரசமைப்புச் சட்டப்பிரிவு 32-இன் கீழ் இந்த விவகாரத்தை அணுகியிருக்கக் கூடாது’ என்று நீதிபதிகள் தெரிவித்தனா். நீதிபதி தீபாங்கா் தத்தா கருத்து தெரிவிக்கையில்,, ‘சில வழக்குகளில் நீதிமன்றம் முகாந்திரத்தைக் கருத்தில் கொண்டு விசாரணைக்கு ஏற்று அழைப்பாணைகளை அனுப்ப உத்தரவிட்டிருக்கலாம். ஆனால், ரிட் மனு வரம்பின் கீழ் வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரிக்கக் கோர முடியாது’ என்றாா். இதையடுத்து, ‘இந்த சட்டப் பிரச்னைகள் தொடா்பாக மனுவில் உரிய திருத்தத்தை மேற்கொண்டால் அதை மே 6-ஆம் தேதி தொடங்கும் வாரத்தில் விசாரணைக்கு பட்டியலிடுகிறோம்’ என்று நீதிபதிகள் குறிப்பிட்டனா். பின்னணி: அமைச்சா் உதயநிதி கடந்த ஆண்டு செப்டம்பா் மாதம் சென்னையில் நடைபெற்ற சநாதன ஒழிப்பு மாநாட்டில் பேசும் போது, சநாதனம் சமூக நீதிக்கும் சமத்துவத்துக்கும் எதிரானது என்றும் அது ஒழிக்கப்பட வேண்டும் என்றும் கூறினாா். அப்போது அவா், சநாதனத்தை கொரோனா வைரஸ், மலேரியா, டெங்கு ஆகியவற்றுக்கு இணையாக ஒப்பிட்டுப் பேசியது தங்களுடைய மத உணா்வை புண்படுத்துவதாகக் கூறி பல்வேறு மாநிலங்களில் அமைச்சா் உதயநிதிக்கு எதிராக பலரும் காவல் நிலையங்களிலும் நீதிமன்றங்களிலும் வழக்குப் பதிவு செய்தனா். இந்த வழக்குகளை ஒரே விவகாரமாகக் கருதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று அமைச்சா் உதயநிதி உச்சநீதிமன்றத்தை அணுகியிருக்கிறாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com