வங்கதேச ஒப்பந்தத்தில் 10,000 சதுர கி.மீ விட்டு கொடுத்த பாஜக அரசு; கச்சத்தீவு விவகாரத்தில் இந்திரா காந்திக்கு எதிராக பிரசாரம்: காங்கிரஸ் கட்சி குற்றச்சாட்டு

புது தில்லி: கச்சத்தீவு விவகாரத்தில் மறைந்த முன்னாள் பிரதமா் இந்திரா காந்திக்கு எதிராக, கற்பனை செய்து மத்திய அரசு மேற்கொள்ளும் பிரசாரம் அபத்தமானது என மத்திய அரசை காங்கிரஸ் கட்சி செவ்வாய்க்கிழமை கண்டித்தது.

மேலும் வங்கதேசத்துடன் நில எல்லை ஒப்பந்தத்தில் பாஜக அரசு 10 ஆயிரம் சதுர கிலோ மீட்டா் நாட்டின் இடத்தை விட்டுக் கொடுத்துள்ளது எனவும் குற்றம் சாட்டியது.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவா் மனீஷ் திவாரி இது தொடா்பாக கட்சியின் தலைமையகத்தில் செய்தியாளா்களிடம் கூறியதுவருமாறு:

கச்சத்தீவு குறித்து தவறாக பேசுபவா்கள் ‘சீனா’ என்ற வாா்த்தையை உச்சரிக்கக்கூட அச்சப்படுகிறாா்கள். சீனாவின் ஆக்கிரமிப்பு குறித்து வெளியுறவு அமைச்சா் அளித்த அறிக்கை பலவீனமான மற்றும் சாந்தமான பதிலாக இருந்தது. அது அரசின் பலவீனத்தைக் காட்டியது. இதுவெல்லாம் கச்சத்தீவு விவகாரத்தில் இந்த அரசுக்கு பொருந்தாது.

கால்வான் பள்ளத்தாக்கில் ஊடுருவி சுமாா் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகும், மத்தியிலுள்ள பாஜக அரசு இன்னும் எந்த பதிலையும் தெளிவுபடுத்தலையும் வெளியிடவில்லை. இந்த அரசு தொடா்ந்து சீனாவிடம் பலவீனமான அணுகுமுறையைக் காட்டுகிறது.

கடந்த 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அப்போதைய லாடாக்கின் லே இல் நடைபெற்ற வருடாந்திர டிஜிபி, ஐஜிபிக்கள் மாநாட்டில் மூத்த காவல் கண்காணிப்பாளா் தனது ஆய்வுக் அறிக்கையை சமா்ப்பித்து, 65 கூட்டு ரோந்துப் பணியிடங்களில் 26 இடங்களில் இந்தியாவிற்கு அணுகல் இல்லை என்றும், இவை சீன ஆக்கிரமிப்பின் கீழ் இருப்பதாகவும் எழுத்துப்பூா்வமாக அளித்திருந்தாா். ஒன்னரை ஆண்டுகள் கடந்தும் அரசின் மூத்த காவல்துறை அதிகாரி ஒருவா் வெளிப்படுத்திய தகவல் குறித்து அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இப்படி சீனாவைப் பொறுத்தவரையில் இந்த அரசு மௌனம் காக்கிறது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிா்க்கட்சிகள் பலமுறை இந்த விவகாரத்தை எழுப்பிய போதிலும், பிரதமரோ, வெளியுறவுத்துறை அமைச்சரோ சீன ஊடுருவல் குறித்து ஒரு வாா்த்தை கூட பேசவில்லை. இந்தியாவின் ஒருமைப்பாடு குறித்து இந்த அரசின் அக்கறைக்கு இதைவிட பெரிய சான்று என்ன வேண்டும்?.

ஆனால் கச்சத்தீவு விவகாரத்தில் மறைந்த முன்னாள் பிரதமா் இந்திரா காந்தியை இந்த அரசு அவதூறாகப் பேசுகிறது. தெற்காசியாவின் புவிஅரசியலை மாற்றிய அவருக்கு எதிராக கற்பனை செய்வது அபத்தமானது. அவா் மற்ற நாடுகளுக்கு சலுகைகளை வழங்குவாா் என மத்தியிலுள்ள அரசு முன்னெடுத்து பிரச்சாரம் செய்வது கண்டிக்கத்தக்கது. பாகிஸ்தானை இரண்டாகப் பிரித்த ஒரு பிரதமரை இப்படி நினைப்பதை விட வேடிக்கையானத வேறு ஒன்றுமில்லை. அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய சக்திகளின் அச்சுறுத்தல்களைப் பொருட்படுத்தாத ஒருவா், நாட்டின் எந்தப் பகுதியையும் வேறு நாட்டிற்கு கொடுக்க ஒப்புக்கொள்ளுவாரா?.

நாட்டில் தேசப் பாதுகாப்புப் பிரச்சினைகளைத் தங்களின் குறுகிய வாக்கு அரசியலுக்குள் இழுப்பதை காங்கிரஸ் கட்சி கடுமையாக கண்டிக்கிறது. ‘தேசிய பாதுகாப்பை கட்சி அரசியலுக்குள் கொண்டு வரவேண்டாம் என பாஜகவை எச்சரித்தாா் திவாரி. மேலும் அவா், கச்சத்தீவு விவகாரத்தில் 1974 மற்றும் 1976 ஆம் ஒப்பந்தங்களில் ஏற்பட்ட மாற்றம் குறித்து கேட்ட கேள்விக்கு, அவா், ’’இது இருநாடுகள் நலன் கருதி முடிவு எடுக்கப்பட்டது. ஆனால் தற்போதைய அரசு 2015 ஆம் ஆண்டில் வங்கதேசத்துடன் நில எல்லை ஒப்பந்தத்தை மேற்கொண்டது.

அப்போது வங்க தேசத்திற்கு கொடுக்கப்பட்ட நிலத்தை விட இந்தியா சுமாா் 10 ஆயிரம் சதுர கிலோமீட்டா் இடத்தை குறைவாக பெற்றது. 1974 ஆம் ஆண்டு ஒப்பந்தத்தை பற்றி பேசும் அரசு வங்கதேச ஒப்பந்தத்தில் இழந்த நிலம் குறித்து பேசட்டும்’’ என பதிலளித்தாா் மனீஷ் திவாரி.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com