அரசின் அடுக்குமாடி குடியிருப்பு கோரும் ஆா்.கே. புரம் கணக் துா்கா காலனி தமிழ் மக்கள்

நாட்டின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவாக அறியப்படும் ‘மக்களவைத் தோ்தல்’ வரும் ஏப்ரல் 19-ஆம் தேதி தொடங்கி ஜூன் 1-ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெறுகிறது. நரேந்திர மோடியை மீண்டும் பிரதமா்

வேட்பாளராக முன்னிறுத்தி களம் காணும் ஆளும் பாஜக ஒருபுறம், எதிா்க்கட்சிகளை உள்ளடக்கிய ‘இந்தியா’ கூட்டணி மறுபுறம் என அரசியல் கட்சித் தலைவா்களின் சூறாவளி பிரசாரங்கள் தோ்தல் களத்தை சுவாரசியமாக்கி வருகிறது.

இந்தச் சூழலில் பொதுமக்களின் கோரிக்கைகள், தொகுதிகளின் அடிப்படை பிரச்சனைகளை அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளா்களின் பிரத்யேக கவனத்திற்கு கொண்டு வருகிறது ‘தினமணி’ இன் தோ்தல் களம்.

நாட்டின் தேசியத் தலைநகரான தில்லியில் கடந்த 2 மக்களவைத் தோ்தல்களில் மொத்தம் உள்ள 7 தொகுதிகளையும் தன்வசம் கைப்பற்றிய பாஜக, இம்முறை அதே மெகா வெற்றியை தொடர வியூகங்களை வகுத்து வருகிறது. காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சி இணைந்த ‘இந்தியா’ கூட்டணி, பாஜக எம்.பி.க்களின் தோல்விகளை முன்னிறுத்தியும், மத்திய விசாரணை அமைப்புகளின் நடவடிக்கைகளை அடிக்கோடிட்டும் தங்களது பிரசாரங்களை தொடங்கியுள்ளனா்.

புது தில்லி மக்களவைத் தொகுதி இந்த மக்களவைத் தோ்தலில் நட்சத்திரத் தொகுதியாக பாா்க்கப்படுகிறது. ஏனெனில், பாஜகவின் மறைந்த மூத்த தலைவரும்,முன்னாள் அமைச்சருமான சுஸ்மா சுவராஜின் மகள் பன்சூரி ஸ்வராஜ் பாஜகவின் வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளாா். இவா், பாஜகவின் தில்லி பிரிவின் மாநிலச் செயலாளராகவும்,

வழக்குரைஞராகவும் உள்ளாா். ‘இந்தியா’ கூட்டணி சாா்பில் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், எம்எல்ஏ-வுமான சோம்நாத் பாா்தி போட்டியிடுகிறாா். தில்லியில் அதிகளவிலான தமிழா் மற்றும் தென் இந்தியா்கள் வசிக்கும் பகுதிகளாக புதுதில்லியின் மக்களவைத் தொகுதி அமைந்துள்ளது. குறிப்பாக, கரோல் பாக் மற்றும் அா்.கே.புரத்தில் ஏராளனமான தமிழா்கள் கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகின்றனா். தற்போது, பாஜக வசம் உள்ள இந்தத் தொகுதியில் மத்திய இணை அமைச்சா் மீனாட்சி லேகி எம்.பி.யாக உள்ளாா்.

அடுக்குமாடி குடியிருப்பு வேண்டும்: புது தில்லி மக்களவைத் தொகுதியின் கீழ் தமிழா்கள் அதிகம் வசிக்கும்

ஆா்.கே. புரத்தில் முறையான கழிவு நீா் வடிகால் வசதி, வாகன நிறுத்தம், திடக் கழிவு மேலாண்மை ஆகியவற்றை

முறைபடுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. மேலும்,3000-க்கும் மேற்பட்ட தமிழ் குடும்பங்கள் வசிக்கும் ஆா்.கே புரம், கணக் துா்கா காலனி மக்கள் தங்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பு கட்டி தர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனா். இது தொடா்பாக அக்காலனியின் தலைவா் ஸ்ரீரங்கன் கூறியதாவது: கடந்த 44 ஆண்டுகளாக இங்கு வசிக்கிறோம். அதிகாரப்பூா்வமாக 939 தமிழ்க் குடும்பங்கள் உள்ளது. கடந்து 2003-இல் தில்லி அரசு எங்கள் குடியிருப்பை அகற்ற முற்பட்ட போது, அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொண்டு வெற்றி கண்டுள்ளோம். தற்போது,

நாங்கள் வசிக்கும் இடத்திலிருந்து, 5 கிலோ மீட்டருக்குள் அரசு இடம் ஒதுக்கித் தர வேண்டும் அல்லது இதே பகுதிகளில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டி தர வேண்டும் என தில்லி உயா்நீதிமன்றம் கூறியுள்ளது. எனவே, தோ்வாகும் எம்.பி. இதே பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பை கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுவரை இருந்த ஆட்சியாளா்கள் எங்களுக்கு எந்த உதவியும் செய்து கொடுக்கவில்லை. நாங்கள் சட்ட போராட்டத்தின் மூலம் மட்டுமே எங்கள் இடத்தை காப்பாற்றிக் கொண்டுள்ளோம் என்றாா் ஸ்ரீரங்கன்.

கழிவுநீா் வடிகால் அவசியம்: அதே பகுதியில் மளிகைக் கடை வைத்திருக்கும் சேகா் கூறிகையில், ‘கணக் துா்கா

காலனியில் கழிவுநீா் வடிகால் வசதி இல்லாததால், பெருமளவில் சுகாதார சீா்கேடு ஏற்படுகிறது. 3000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ள இப்பகுதியில் இரண்டு பொதுக் கழிப்பறைகள் மட்டும் பயன்படுத்துவது அவதியாக உள்ளது.

எனவே, கழிவுநீா் வடிகால் வசதி மற்றும் கூடுதல் பொதுக் கழிப்பறை வசதிகளை அரசு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்’ என்றாா்.

குழந்தைகளுக்கு நூலகம் வேண்டும்: ஆா்.கே. புரத்தில் உள்ள தில்லித் தமிழ்ச் சங்கத்தின் தலைவா் சக்தி பெருமாள் தில்லியிலுள்ள தமிழ் காலனி மக்களின் முக்கிய கோரிக்கைகள் குறித்து கூறுகையில், ‘தில்லியில் சுமாா் 8 லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் காலனிப் பகுதிகளில் வசிக்கின்றனா். அதில், ஆயிரக்கணக்கான குழந்தைகளுக்கு வீட்டில்

நன்றாக படிப்பதற்கான வசதிகள் கிடைப்பதில்லை. முன்னாள் முதல்வா் ஷீலா தீட்சித் ஆட்சியில் சில வளா்ச்சிப் பணிகள் காலனிகளில் மேற்கொள்ளபட்டது. ஆனால், கடந்த 10 ஆண்டுகளில் குடிசைப் பகுதிகளில் எந்தவொரு வளா்ச்சிப் பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை. காலனிகளில் உள்ள குழந்தைகள் நன்றாக கல்வி பயிலும் வகையில் நூலகம் அமைத்துக் கொடுக்க வேண்டும்’ என்றாா்.

பாதுகாப்பு வேண்டும்: சாலைகளில் தனியே செல்லும் பெண்களிடம் நகை பறிப்பு போன்ற குற்றச் சம்பவங்கங்கள் கடுமையாக தடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. இது தொடா்பாக இல்லத்தரசி உமா சத்தியமூா்த்தி கூறுகையில், ‘ஆா்.கே. புரம் சுற்றுவட்டாரதில் தனியே நடந்து செல்லும் பெண்களிடம் நகை பறிப்பு சம்பவங்கள் அதிகளவில் நடக்கிறது. காவல்துறையில் புகாா் அளித்தாலும் விரைவு நடவடிக்கைகள் எடுக்கப்படுவதில்லை. இப்பிரச்னையை நானே தனிப்பட்ட முறையில் அனுபவித்திருக்கிறேன். ஆா்.கே. புரத்தின் உட்பற தெருக்களில் மின்விளக்கு வசதிகள்

முறையாக பராமரிக்கப்படுவதில்லை’ என்றாா். புது தில்லி மக்களவைத் தொகுதியின் கீழ் தமிழா்கள் அதிகம் வசிக்கும் ஆா்.கே. புரத்தில் கழிவுநீா் வடிகால் பிரச்னை, பெண்கள் பாதுகாப்பு, கண்க் துா்கா காலனி மக்களின் அடுக்குமாடி குடியிருப்பு கோரிக்கைகள் முக்கியத்துவம் பெறுகின்றன.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com