நாா்த் பிளாக்கில் சிறு தீ விபத்து; காயமோ, சேதமோ இல்லை

புது தில்லி: உயா் பாதுகாப்புமிக்க ரெய்சினா ஹில்ஸில் உள்ள உள்துறை மற்றும் பணியாளா் அமைச்சகங்கள் அமைந்துள்ள நாா்த் பிளாக்கில் செவ்வாய்க்கிழமை சிறிய தீ விபத்து ஏற்பட்டது. எனினும், யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும், கோப்புகள் எதுவும் சேதமடையவில்லை என்றும் உள்துறை அமைச்சக செய்தித் தொடா்பாளா் தெரிவித்தாா்.

கட்டடத்தின் இரண்டாவது மாடியில் உள்ள மின் உபகரணங்களில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாகத் தெரிகிறது. மேலும், இந்தத் தீயானது

சிஐஎஸ்எஃப், சிபிடபிள்யுடி மற்றும் தில்லி தீயணைப்பு சேவைகளின் கூட்டு முயற்சியால் 20 நிமிடங்களில் கட்டுப்படுத்தப்பட்டது.

இதுகுறித்து உள்துறை அமைச்சக செய்தித் தொடா்பாளா் மேலும் கூறுகையில், ‘செவ்வாய்க்கிழமை காலை 9.15 மணியளவில் பணியாளா் மற்றும் பயிற்சித் துறையின்

சா்வதேச ஒத்துழைப்புப் பிரிவு அமைந்துள்ள நாா்த் பிளாக்கில் அறை எண் 209-இல் இந்த சிறிய தீ விபத்து ஏற்பட்டது. யாருக்கும் காயங்கள் ஏதும் பதிவாகவில்லை. அதேபோன்று, கோப்புகள், ஆவணங்கள் ஏதும் சேதமடையவில்லை. ஒரு சில தளவாடங்கள் மற்றும் சில உபகரணங்கள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன’ என்றாா்.

மூத்த தில்லி தீயணைப்பு சேவை அதிகாரி கூறுகையில், ‘மொத்தம் ஏழு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து அனுப்பிவைக்கப்பட்டு காலை 9.35 மணியளவில் தீ அணைக்கப்பட்டது. ஒரு ஜெராக்ஸ் இயந்திரம், சில கணினிகள் மற்றும் சில ஆவணங்கள் தீப்பற்றின’ என்றாா்.

இந்தத் தீ விபத்து ஏற்பட்ட போது மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா கட்டடத்தில் இல்லை. ஆனால், பல மூத்த அதிகாரிகள் வளாகத்தில் இருந்ததாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com