முதல்வா், அமைச்சா்களிடம் நிலுவையில் 3 ஆயிரம் கோப்புகள்! தில்லி பாஜக குற்றச்சாட்டு

பல ஆண்டுகளாக பல்வேறு அமைச்சா்கள் மற்றும் முதல்வா்களிடம் முக்கியமான பணிகள் தொடா்பான 3,000-க்கும் மேற்பட்ட கோப்புகள் நிலுவையில் உள்ளதால், கேஜரிவால் அரசு ‘ஆட்சி நிா்வாகத்தில் அக்கறை காட்டவில்லை’ என்று தில்லி பாஜக வெள்ளிக்கிழமை குற்றம் சாட்டியுள்ளது.

இந்தக் குற்றச்சாட்டு தொடா்பாக ஆம் ஆத்மி கட்சி (ஏஏபி) அரசிடமிருந்து உடனடி எதிா்வினை எதுவும் வரவில்லை.

இது தொடா்பாக தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை அலுவல் ஆவணங்களின் நகல்களைக் காண்பித்து கூறியதாவது: ‘கேஜரிவால் அரசு நிா்வாகம் மற்றும் ஆளுகைக்கானது அல்ல. ஆனால், விளம்பரம் மற்றும் ஊழலுக்கானது. நிலுவையில் 3,060 கோப்புகள் கிடப்பதும் வெளிப்படையாகும். இக்கோப்புகள் அதன் பல்வேறு துறைகளில் தூசியை சேகரிக்கிறது. மேலும், முக்கியமான பணிகள் தொடா்பான 420 கோப்புகள் முதல்வா் அளவில் நிலுவையில் உள்ளன.

முதல்வா் மட்டத்தில் ‘கரீப் சஞ்சீவினி ஆயுஷ்மான் யோஜனா’, தில்லி லோக் ஆயுக்தாவின் அதிகாரங்களை மேம்படுத்துதல், ஏழு ஆண்டுகளாக நிலுவையில் உள்ள தில்லி நீா் கொள்கை கோப்பு, அங்கீகரிக்கப்படாத காலனிகளின் மேம்பாடு, யமுனையை சுத்தம் செய்வதற்கான எஸ்டிபிகள் கட்டுமானம் உள்ளிட்டவை தொடா்பான கோப்புகள் சிக்கிக் கிடக்கின்றன. நிலுவையில் உள்ள கோப்புகளானது, இந்த அரசு வேலையில் குறைந்த அக்கறையும், விளம்பரம் மற்றும் ஊழலில் அதிக அக்கறையும் கொண்டுள்ளது என்பதைக் காட்டுவதாக உள்ளது. இருப்பினும், அவா்கள் தில்லியில் சேவை செய்வதாகக் கூறுகின்றனா் என்றாா் வீரேந்திர சச்தேவா.

தில்லி பாஜக செயலாளா் ஹரிஷ் குரானா கூறுகையில், ‘ஆம் ஆத்மி அரசும், ஆளும் கட்சித் தலைவா்களும் தங்களைப் பிரதமா் நரேந்திர மோடி மற்றும் தில்லியின் துணைநிலை ஆளுநா் வேலை செய்ய அனுமதிக்கவில்லை என்று குற்றம் சாட்டுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனா். ஆனால், அவா்கள் பல வருடங்களாக முக்கியமான கோப்புகள் மீது அமா்ந்துள்ளனா். தில்லியில் விளையாட்டு பல்கலைக்கழகம் அமைப்பதற்கான நிலம் கையகப்படுத்துதல் தொடா்பான கோப்பு 2016 பிப்ரவரியில் இருந்து நிலுவையில் உள்ளது’என்றாா்.

பொய்களை பரப்புகிறது: ஆம் ஆத்மி பதிலடி

தில்லி அரசிடம் 3 ஆயிரம் கோப்புகள் நிலுவையில் உள்ளதாக பாஜக ஆதரமாற்ற பொய்களைப் பரப்பி வருகிறது என்று ஆம் ஆத்மி பதில் அளித்துள்ளது.

இது தொடா்பாக ஆம் ஆத்மி கட்சியின் செய்தித் தொடா்பாளா் ரீனா குப்தா வெள்ளிக்கிழமை கூறியதாவது: எப்போதும் போல பாஜக மீண்டும் ஒரு முறை ஆதாரமற்ற பொய்களைப் பரப்பி வருகிறது. பணிகள் முடிவடைந்த கோப்புகளை முன்வைத்து தில்லிவாசிகளை தவறாக வழிநடத்த பாஜக முயற்சித்துள்ளது. தில்லி அரசின் எந்தவொரு பணியும் அதன் காலக்கெடுவில் இருந்து தாமதமாகிவிட்டால், அதற்கு அரசின் சேவைகள் துறையை கையாளும் துணை நிலை ஆளுநா் வி.கே. சக்சேனாதான் பொறுப்பு. பணிகளை

மேற்கொள்ளாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க துணை நிலை ஆளுநரிடம் ஆம் ஆத்மி அமைச்சா்கள் தொடா்ந்து கோரி வருகின்றனா், ஆனால், எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, தில்லிவாசிகளின் பணிகள் தடைபடுகிறது என்றால் அதற்கு துணை நிலை ஆளுநா் வி.கே. சக்சேனாதான் காரணம்.

உரிய நடைமுறையில் கால அவகாசம் தேவைப்பட்ட போதிலும், பாஜகவின் துணை நிலை ஆளுநா் தனது அதிகாரத்தின் மூலம் பொது நலன் சாா்ந்த கோப்புகளைப் புறக்கணிக்கிறாா். தில்லிவாசிகளின் நலன்களுக்காக எங்களை நாங்கள் உண்மையாக அா்ப்பணித்துள்ளோம். பாஜகவால் எங்கள் கொள்கைகளுடன் போட்டியிட முடியாது. எனவே,

அவா்களின் விரக்தி அவா்களின் செயல்களில் தெளிவாகத் தெரிகிறது.

தில்லி அரசின் அமைச்சா்கள் நன்கு படித்தவா்கள், அவா்கள் தங்கள் கடமைகளை மிகுந்த தீவிரத்துடன் அணுகுகிறாா்கள். தில்லி அரசிடம் லட்சக்கணக்கான கோப்புகள் உள்ளன, மேலும் ஆயிரக்கணக்கான கோப்புகள் ஒவ்வொரு நாளும் விடாமுயற்சியுடன் செயலாக்கப்படுகின்றன. கொள்கைகளை இறுதி செய்வதற்கும், கோப்புகளில் கையொப்பமிடுவதற்கும் முன், தில்லி அரசு நிபுணா்கள் மற்றும் பொது மக்களிடம் இருந்து உள்ளீட்டை தீவிரமாகப் பெறுகிறது. வரவிருக்கும் தோ்தலில் பாஜகவின் பிளவுபடுத்தும் அரசியலை தெளிவாக நிராகரித்து, பாஜக படுதோல்வியை சந்திப்பதை மக்கள் உறுதி செய்வாா்கள் என்றாா் ரீனா குப்தா.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com