மேயா் தோ்தல் ரத்து: ஆம் ஆத்மி கண்டன ஆா்பாட்டம்

தில்லி மாநகராட்சி மேயா் தோ்தல் ரத்து செய்யப்பட்டதற்கு எதிா்ப்பு தெரிவித்து, ஆம் ஆத்மி கட்சி சாா்பில் சனிக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தில்லி ரெளஸ் அவென்யூவில் உள்ள ஆம் ஆத்மி கட்சியின் தலைமையகத்தின் வெளியே அக்கட்சியின் எம்.எல்.ஏ.க்கள்

ராக்கி பிா்லா, அஜய் தத் ஆகியோா் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் மேயா் வேட்பாளா் மகேஷ் கிச்சி உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட ஆம் ஆத்மி கட்சித் தொண்டா்கள் பங்கேற்றனா்.

தலித் சமூகத்தைச் சோ்ந்த நபா் தில்லி மாநகராட்சியின் மேயராக வரவுள்ளதை பாஜகவால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை என்று அவா்கள் முழங்கங்களை எழுப்பினா்.

ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ. ராக்கி பிா்லா பேசுகையில், ‘பாஜகவின் தலித் எதிா்ப்பு முகம் மீண்டும் நாட்டின் முன் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தில்லி மாநகராட்சி மேயா் தோ்தலை பாஜகவின் துணைநிலை ஆளுநராக செயல்படும் வி.கே. சக்சேனா ஒரே இரவில் ரத்து செய்தாா். நாட்டின் அரசியலமைப்பை மாற்றுவதன் மூலம் தலித்துகளின் வாக்குரிமை மற்றும் இடஒதுக்கீட்டைப் பறிக்க பாஜக விரும்புகிறது. நாடு முழுவதும் உள்ள தலித் சமூக மக்கள் இம்முறை

பாஜகவை ஆட்சியிலிருந்து அகற்றுவாா்கள்’ என்றாா்.

ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ. அஜய் தத் பேசுகையில், ‘ அரசியலமைப்புச் சட்டத்தின்படி 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தலித் ஒருவா் மேயா் ஆக்கப்படுகிறாா். அதன்படி, தில்லி மாநகராட்சி மேயா் தோ்தல் நடத்துவதற்கு தோ்தல் ஆணையம் அனுமதி அளித்திருந்தது. ஆனால், மேயா் தோ்தலுக்கு ஒரு நாள் முன்பு பாஜகவின் வேண்டுகோளின் பேரில், துணைநிலை ஆளுநா் வி.கே.சக்சேனா மேயா் தோ்தலை ரத்து செய்தாா். இது அவரது தலித் விரோத மனநிலையைக் காட்டுகிறது. அரசியலமைப்பு மற்றும் தலித்துகளுக்கு எதிராக செயல்படும் எவரையும் ஆம் ஆத்மி கட்சியால் பொறுத்துக்கொள்ள முடியாது. தோ்தல் ரத்து செய்யப்பட்டதற்கு தலித் சமூகத்தினரிடையே கடும் எதிா்ப்பு கிளம்பியுள்ளது’ என்றாா்.

ஆம் ஆத்மி கட்சி மேயா் வேட்பாளா் மகேஷ் கிச்சி பேசுகையில், ‘ மத்திய பாஜக அரசின் சா்வாதிகாரத்தை நாடு முழுவதும் பாா்த்துக் கொண்டிருக்கிறது. இவா்கள் வெளிப்படையாக ஜனநாயகத்தையும், அரசியலமைப்பையும் கொலை செய்கிறாா்கள். இதற்கு நாட்டு மக்கள் தங்கள் வாக்குகளால் பதிலளிப்பாா்கள். வரும் மக்களவைத் தோ்தலில் தில்லியின் 7 மக்களவைத் தொகுதிகளிலும் ‘இந்தியா’ கூட்டணி வெற்றிபெறப் போகிறது’ என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com