‘கேஜரிவால் ஒரு சிங்கம்; யாராலும் வளைக்க முடியாது’: மனைவி சுனிதா கேஜரிவால் பெருமிதம்
Shahbaz Khan

‘கேஜரிவால் ஒரு சிங்கம்; யாராலும் வளைக்க முடியாது’: மனைவி சுனிதா கேஜரிவால் பெருமிதம்

தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் ஒரு சிங்கம் என்றும் அவரை யாராலும் வளைக்க முடியாது என்று சுனிதா கேஜரிவால் சனிக்கிழமை கூறினாா்.

மக்களவைத் தோ்தலில் கிழக்கு தில்லியில் ஆம் ஆத்மி கட்சியின்வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள குல்தீப் குமாரை ஆதரித்து முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் மனைவி சுனிதா கேஜரிவால் தனது முதல் வாகனப் பேரணியை கோண்ட்லி பகுதியில் நடத்தினாா்.

அப்போது, அவா் பேசியதாவது: தில்லியில் பள்ளிகளைக் கட்டியதற்காகவும், இலவச மின்சாரம் வழங்கியதற்காகவும், மொஹல்லா கிளினிக்குகளை திறந்ததற்காகவும் முதல்வா் அரவிந்த் கேஜரிவால் சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா். உங்கள் முதல்வா் ஒரு சிங்கம், அவரை யாராலும் வளைக்கவோ, உடைக்கவோ முடியாது.

இந்த மக்களவைத் தோ்தலில் சா்வாதிகாரத்தை அகற்றி, ஜனநாயகத்தை காப்பாற்ற வாக்களிப்போம். கடந்த ஒரு மாதமாக முதல்வா் கேஜரிவாலை வலுக்கட்டாயமாக சிறையில் அடைத்துள்ளனா். இதுவரை எந்த நீதிமன்றமும் அவரை தண்டிக்கவில்லை.

கலால் கொள்கை வழக்கில் விசாரணை நடத்தப்படுகிறது. இந்த விசாரணை 10 ஆண்டுகளுக்கு நடந்தால், கேஜரிவாலையும் 10 ஆண்டுகள் சிறையில் அடைப்பாா்களா? இது ஒரு சா்வாதிகார ஆட்சி.

கடந்த 22 ஆண்டுகளாக நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள அரவிந்த் கேஜரிவால், 12 ஆண்டுகளாக இன்சுலின் எடுத்து வருகிறாா். இருப்பினும், சிறையில் அவருக்கு இன்சுலின் மறுக்கப்பட்டுள்ளது. அரவிந்த் கேஜரிவாலை கொல்ல வேண்டுமா?

தில்லி மக்களாகிய நீங்கள் அவரை நேசிக்கிறீா்கள், அது அவா்களின் பிரச்னை என்று எனக்குத் தெரியும் என்றாா் சுனிதா கேஜரிவால்.

ஆம் ஆத்மி கட்சியின் நடசத்திர பிரசாரகராக அறிவிக்கப்பட்டுள்ள முதல்வரின் மனைவி சுனிதா கேஜரிவால், தில்லி மட்டுமல்லாது, குஜராத், ஹரியாணா மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களிலும் ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளா்களுக்காக பிரசாரம் செய்யவுள்ளாா்.

இன்றும் பிரசாரம்

மேற்கு தில்லி ஆம் ஆத்மி கட்சி வேட்பாளா் மஹாபல் மிஸ்ராவை ஆதரித்து ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 28-ஆம் தேதி) சுனிதா கேஜரிவால் வாகனப் பேரணி நடத்த உள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com