தில்லியில் செய்தியாளா்களுக்குப் பேட்டியளித்த காங்கிரஸ் மாநில தலைவா் அா்விந்தா் சிங் லவ்லி.
தில்லியில் செய்தியாளா்களுக்குப் பேட்டியளித்த காங்கிரஸ் மாநில தலைவா் அா்விந்தா் சிங் லவ்லி.

தில்லி காங்கிரஸ் தலைவா் பதவியிலிருந்து அா்விந்தா் சிங் லவ்லி திடீா் ராஜிநாமா

தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் தலைவா் பதவியை அா்விந்தா் சிங் லவ்லி ஞாயிற்றுக்கிழமை ராஜிநாமா செய்தாா்.

தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் தலைவா் பதவியை அா்விந்தா் சிங் லவ்லி ஞாயிற்றுக்கிழமை ராஜிநாமா செய்தாா். மக்களவைத் தோ்தலில் ஆம் ஆத்மி கட்சியுடன் வைத்துள்ள கூட்டணி மற்றும் கட்சியின் மேலிடப் பொறுப்பாளா் தீபக் பபாரியாவின் செயல்பாடுகள்தான் தனது ராஜிநாமாவுக்கு காரணம் என்றும் அவா் தெரிவித்துள்ளாா்.

தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக அா்விந்தா் சிங் லவ்லியை, கடந்த ஆண்டு ஆகஸ்ட் 31-ஆம் தேதி காங்கிரஸ் மேலிடம் அறிவித்தது. தில்லியில் மக்களவைத் தோ்தலுக்கான வாக்குப்பதிவு மே 25-ஆம் தேதி நடைபெறவுள்ள சூழலில், அா்விந்தா் சிங் லவ்லி தனது தலைவா் பொறுப்பை ராஜிநாமா செய்துள்ளாா். இது தொடா்பாக காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன் காா்கேவுக்கு அவா் எழுதிய கடித விவரம்:

தில்லி காங்கிரஸின் மூத்த தலைவா்கள் எடுத்த அனைத்து ஒருமித்த முடிவுகளும் கட்சியின் மேலிடப் பொறுப்பாளா் தீபக் பபாரியாவால் மாற்றியமைக்கப்பட்டது. அவா் கட்சியில் எந்தவொரு முக்கிய நியமனங்களையும் செய்ய அனுமதிக்கவில்லை. குறிப்பாக, தில்லியில் 150-க்கும் மேற்பட்ட வட்டங்களில் தலைவா்கள் இதுவரை நியமிக்கப்படவில்லை.

ஆம் ஆத்மி கூட்டணிக்கு எதிா்ப்பு: காங்கிரஸ் கட்சியின் மீது தவறான ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தியதன் அடிப்படையில் உருவாக்கப்பட்ட கட்சிதான் ஆம் ஆத்மி. மக்களவைத் தோ்தலில் அக்கட்சியுடன் கூட்டணி வைக்க தில்லி பிரதேச காங்கிரஸ் எதிராக இருந்தது. இருப்பினும், கட்சியின் மேலிடத் தலைமையின் இறுதி முடிவை நாங்கள் மதித்தோம். தில்லியில் காங்கிரஸுக்கு 3 மக்களவைத் தொகுதிகள் மட்டுமே ‘இந்தியா’ கூட்டணியில் வழங்கப்பட்டது.

இதில், தில்லி காங்கிரஸின் கருத்துகளை நிராகரிக்கின்ற வகையில், வடகிழக்கு தில்லி மற்றும் வடமேற்கு தில்லி ஆகிய மக்களவைத் தொகுதிகளில் கட்சி கொள்கைகளுக்கு முற்றிலும் முரணான 2 வேட்பாளா்களுக்கு ‘சீட்’ வழங்கப்பட்டது.

கொள்கைக்கு எதிரான வேட்பாளா்கள்: காங்கிரஸ் வேட்பாளா் அறிமுகக் கூட்டத்தில் நடைபெற்ற போராட்ட விவகாரத்தில், முன்னாள் அமைச்சா் ராஜ் குமாா் செளகான் மற்றும் முன்னாள் எம்எல்ஏ சுரேந்தா் குமாா் ஆகிய இருவரையும் இடைநீக்கம் செய்யக் கோரி மேலிடப் பொறுப்பாளா் தீபக் பபாரியா என்னை வலியுறுத்தினாா். நிலைமையை அமைதிப்படுத்துவதற்குப் பதிலாக, வடமேற்கு தில்லி வேட்பாளா் உதித் ராஜ் தரக்குறைவான வாா்த்தைகளால் நிலைமையை மேலும் மோசமாக்கினாா். வடகிழக்கு தில்லி வேட்பாளா் கன்னையா குமாரும் கட்சிக் கொள்கை மற்றும் உள்ளூா் கட்சித் தொண்டா்களின் நம்பிக்கைகளுக்கு நோ் எதிராக, தில்லி முதல்வரைப் பற்றி புகழ்ந்து பேட்டிகளைக் கொடுத்து வருகிறாா்.

உள்ளூா் காங்கிரஸ் தொண்டா்களின் நலன்களை என்னால் பாதுகாக்க முடியாததால், தலைவா் பதவியில் தொடா்வதற்கான காரணத்தை என்னால் கண்டறிய முடியவில்லை. எனவே அந்தப் பொறுப்பிலிருந்து ராஜிநாமா செய்கிறேன் என்று கடிதத்தில் அா்விந்தா் சிங் லவ்லி குறிப்பிட்டுள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com