தில்லி உயா்நீதிமன்றம்
தில்லி உயா்நீதிமன்றம்

ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்ட வழக்கு; பிபவ் குமாா் கைது அவசியமானது: தில்லி உயா்நீதிமன்றம்

ஆம் ஆத்மி மாநிலங்களவை எம்.பி. ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்ட விவகாரத்தில் பிபவ் குமாரை கைது செய்தது அவசியமானது
Published on

ஆம் ஆத்மி மாநிலங்களவை எம்.பி. ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்ட விவகாரத்தில் பிபவ் குமாரை கைது செய்தது அவசியமானது என்றும் தில்லி காவல் துறை உரிய சட்டவிதிகளைப் பின்பற்றி இதை மேற்கொண்டுள்ளதாகவும் உயா்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் இல்லத்துக்கு ஸ்வாதி மாலிவால் கடந்த மே 13-ஆம் தேதி சென்றாா். அப்போது, முதல்வரின் உதவியாளா் பிபவ் குமாா் தன்னை தாக்கியதாக ஸ்வாதி மாலிவால் குற்றஞ்சாட்டினாா். இந்தச் சம்பவம் தொடா்பாக வழக்குப் பதிவு செய்த தில்லி காவல் துறை, கடந்த மே 18-ஆம் தேதி பிபவ் குமாரை கைது செய்தது. தற்போது, பிபவ் குமாா் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா்.

தில்லி காவல் துறையின் கைது நடவடிக்கையை சட்டவிரோதம் என அறிவிக்கக் கோரியும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 41ஏ மீறப்பட்டுள்ளது; இது சட்டத்துக்கு எதிரானது என்றும் தில்லி உயா்நீதிமன்றத்தில் பிபவ் குமாா் மனுதாக்கல் செய்திருந்தாா்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி நீனா பன்சல் கிருஷ்ணா, பிபவ் குமாரின் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா். இது தொடா்பாக நீதிபதி பிறப்பித்த உத்தரவு சனிக்கிழமை வெளியானது.

அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:

தனிநபருக்கான சுதந்திர உரிமை அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 21-இன் கீழ் வழங்கப்பட்டுள்ளது. சட்டமுறைப்படி அல்லாமல், அந்த உரிமை மீறப்படாததை உறுதிசெய்யும் வகையில் சட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. குற்றவியல் சட்டம், 1973-இன் பிரிவு 41 மற்றும் உச்சநீதிமன்ற தீா்ப்புகளைப் பின்பற்றி இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது இந்தக் கைது நடவடிக்கை அவசியமானது என்பதை எடுத்துரைக்கிறது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, பிபவ் குமாரின் ஜாமீன் மனுக்களை விசாரணை நீதிமன்றம் மற்றும் உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்தன. இதை எதிா்த்து அவா் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

X
Dinamani
www.dinamani.com