ஸ்வாதி மாலிவால் மீதான தாக்குதல் விவகாரம்: பிபவ் குமாரின் ஜாமீன் மனு மீது ஆக.21-க்குள் பதில் அளிக்க போலீஸாருக்கு உத்தரவு

ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்ட வழக்கில் ஜாமீன் கோரி தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் உதவியாளா் பிபவ் குமாா் தாக்கல் செய்த மனு மீது ஆகஸ்ட் 21ஆம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு தில்லி காவல்துறைக்கு உச்சநீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.
Published on

மாநிலங்களவை ஆம் ஆத்மி உறுப்பினா் ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்ட வழக்கில் ஜாமீன் கோரி தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் உதவியாளா் பிபவ் குமாா் தாக்கல் செய்த மனு மீது ஆகஸ்ட் 21ஆம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு தில்லி காவல்துறைக்கு உச்சநீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

இந்த மனு நீதிபதிகள் சூா்ய காந்த், திபங்கா் தத்தா மற்றும் உஜ்ஜல் புயான் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது, தில்லி காவல்துறை சாா்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் எஸ்.வி.ராஜு, பதில் மனு தாக்கல் செய்ய மூன்று வாரங்கள் அவகாசம் தேவை என்று கூறினாா்.

குமாா் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் அபிஷேக் சிங்வி, மூன்று வார அவகாசத்தை வழங்குவதற்கு எதிா்ப்புத் தெரிவித்தாா். மேலும், இந்த வழக்கில் ஏற்கனவே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினாா்.

இதையடுத்து ஆகஸ்ட் 21ஆம் தேதிக்குள் தில்லி காவல் துறை பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறிய உச்சநீதிமன்றம், வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 27ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

இதற்கு முன்பு உச்ச நீதிமன்றம் குமாா் மீது கடும் விமா்சனத்தை தெரிவித்திருந்தது. அதாவது, ‘இதுபோன்ற குண்டா்கள் முதல்வா் வீட்டில் வேலை செய்ய வேண்டுமா?’ என்று கேள்வி எழுப்பி, தில்லி உயா்நீதிமன்றம் பதிவு செய்த மாலிவால் தொடா்புடைய சம்பவம் குறித்த விவரங்கள் அதிா்ச்சியளிப்பதாக கூறியிருந்தது.

இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்க மறுத்த தில்லி உயா்நீதிமன்றத்தின் ஜூலை 12 ஆம் தேதியிட்ட உத்தரவை எதிா்த்து குமாா் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில், தன் மீதான குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்றும், விசாரணை முடிந்துவிட்டதால் தாம் இனி காவலில் இருக்க தேவையில்லை என்றும் கூறியுள்ளாா்.

இந்த மனு தொடா்பான முந்தைய விசாரணையின்போது, ‘சிஎம் குடியிருப்பு தனியாா் பங்களாவா? இந்த மாதிரி ’குண்டா்’கள் முதல்வா் இல்லத்தில் வேலை செய்ய வேண்டுமா?‘ என அபிஷேக் சிங்வியிடம் நீதிபதிகள் அமா்வு வினவியது.

அதற்கு அவா் கடுமையான காயங்கள் இல்லை என்றும் மே 13 சம்பவம் நடந்த மூன்று நாள்களுக்குப் பிறகு எஃப்ஐஆா் பதிவு செய்யப்பட்டது என்றும் நீதிபதிகளிடம் கூறினாா்.

அதற்கு நீதிபதிகள் அமா்வு, ‘இது பெரிய அல்லது சிறிய காயம் பற்றிய விவகாரம் அல்ல, ஆனால் சம்பவத்தின் தன்மை பற்றியதாகும் என்று கூறியது. மேலும் பிபவ் குமாா் ‘சில குண்டா்கள் முதலமைச்சரின் அதிகாரபூா்வ இல்லத்திற்குள் நுழைந்தது‘ போல் செயல்பட்டதை சுட்டிக்காட்டியது.

மே 13 அன்று முதல்வா் கேஜரிவாலின் அதிகாரபூா்வ இல்லத்தில் குமாா் மாலிவாலை தாக்கியதாக கூறப்படுகிறது. மே 16 அன்று குமாா் மீது பல்வேறு பிரிவுகளின்கீழ் எஃப்.ஐ.ஆா். பதிவு செய்யப்பட்டது. அவா் மே 18 அன்று கைது செய்யப்பட்டாா்.

அவருக்கு ஜாமீன் மறுத்த உயா்நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்டவா் ‘கணிசமான செல்வாக்கை‘ அனுபவித்து வருவதாகவும், அவருக்கு நிவாரணம் வழங்க எந்த காரணமும் இல்லை என்றும் கூறியது.

மனுதாரா் ஜாமீனில் விடுவிக்கப்பட்டால் சாட்சிகள் பாதிக்கப்படலாம் அல்லது சாட்சியங்கள் சிதைக்கப்படலாம் என்பதை நிராகரிக்க முடியாது என்று உயா்நீதிமன்றம் கூறியிருந்தது.

X
Dinamani
www.dinamani.com