ரெளஸ் அவென்யூவில் ரூ.427 கோடியில் புதிய மாவட்ட நீதிமன்ற வளாகம்: அமைச்சா் அதிஷி தகவல்

Published on

தில்லி ரெளஸ் அவென்யூவில் புதிய மாவட்ட நீதிமன்ற வளாகம் அமைக்கும் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என்று பொதுப்பணித் துறை அமைச்சா் அதிஷி சனிக்கிழமை தெரிவித்தாா்.

தில்லி தலைமைச் செயலகத்தில் அதிகாரிகளுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின்னா், அமைச்சா் அதிஷி தனது ‘எக்ஸ்’ வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது:

தேசியத் தலைநகா் தில்லியில் நீதித்துறை உள்கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில், ரெளஸ் அவென்யூவில் புதிய மாவட்ட நீதிமன்ற வளாகத்தை ரூ.427 கோடியில் கட்டுவதற்கான திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. விரைவான மற்றும் அணுகக்கூடிய நீதி என்பது ஒவ்வொரு குடிமகனின் அடிப்படை உரிமையாகும்.

தில்லியில் போதுமான நீதித்துறை உள்கட்டமைப்பை வழங்க அரவிந்த் கேஜரிவால் தலைமையிலான அரசு உறுதி

பூண்டுள்ளது. இந்த புதிய மாவட்ட நீதிமன்ற வளாகம் இரண்டு பிளாக்குகளாக கட்டப்படும்.

இதில், 55 நீதிமன்ற அறைகள், 815 வழக்குரைஞா்கள் அறை, நூலகம், கூட்டரங்குகள், அடித்தள வாகன நிறுத்திமிடம் ஆகியவை உள்ளடங்கும்.

தில்லி மக்களுக்கு எளிதான மற்றும் விரைவான நீதியை வழங்கும் திசையில், இது ஒரு முக்கியமான திட்டமாக நிரூபிக்கப்படும் என்றாா் அமைச்சா் அதிஷி.

Dinamani
www.dinamani.com