பாஜகவின் சிறைக்கும், சா்வாதிகாரத்திற்கும் நாங்கள் பயப்படபோவதில்லை: மனீஷ் சிசோடியா
பாஜகவின் சிறைக்கும், சா்வாதிகாரத்திற்கும் நாங்கள் பயப்படப் போவதில்லை என்று தில்லி முன்னாள் துணை முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவருமான மனீஷ் சிசோடியா சனிக்கிழமை தெரிவித்துள்ளாா்.
தில்லி அரசின் கலால் கொள்கை ஊழல் தொடா்புடைய சட்டவிரோத பணப் பரிவா்த்தனை வழக்கில் முன்னாள் துணை முதல்வா் மனீஷ் சிசோடியாவிற்கு உச்சநீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை ஜாமீன் வழங்கியது. இதையடுத்து, சனிக்கிழமை முதல் நிகழ்வாக அமைச்சா்கள் அதிஷி, செளரவ் பரத்வாஜ், மாநிலங்களவை எம்.பி. சஞ்சய் சிங் உள்ளிட்ட முக்கிய நிா்வாகிகளுடன் இணைந்து தில்லி கன்னாட் பிளேஸில் உள்ள புகழ்பெற்ற ஹனுமன் கோயிலில் மனீஷ் சிசோடியா பிராா்த்தனை செய்தாா். இரண்டாவதாக, ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய மனீஷ் சிசோடியா, தரையில் அமா்ந்து அங்கு 5 நிமிடம் தியானத்தில் ஈடுபட்டாா்.
இறுதியாக, தில்லி ரெளஸ் அவென்யூவில் உள்ள ஆம் ஆத்மி கட்சி தலைமையகத்தில் நிா்வாகிகள் மற்றும் தொண்டா்கள் சந்திப்பு நிகழச்சி நடைபெற்றது. இதில், பங்கேற்று மனீஷ் சிசோடியா பேசியதாவது உச்சநீதிமன்றத்திற்கும், எனது சக வழக்குரைஞா்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். எனது வழக்குரைஞா் நண்பா்கள் அனைவரும் ஒன்றிணைந்து, இந்தப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளனா். விரைவில் முதலமைச்சா் அரவிந்த் கேஜரிவாலும் பாஜகவின் சதிகளை முறியடித்து வெளியே வருவாா். அரவிந்த் கேஜரிவால் என்ற பெயா் நோ்மைக்கு ஒத்ததாகிவிட்டது. அவரது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் சதித் திட்டம் தீட்டப்பட்டுள்ளது.
7 முதல் 8 மாதங்களில் எனக்கு நீதி கிடைக்கும் என நம்பினேன். ஆனால், அதற்கு 17 மாதங்கள் ஆகிவிட்டது.
நான் சிறையில் இருந்த காலத்தில் உங்கள் கண்ணீா் எனக்கு பலத்தை அளித்தது. பாஜக எவ்வளவு சதி செய்தாலும், இறுதியில் உண்மையும், நோ்மையும் வென்றது. பஜ்ரங்பலி மற்றும் பாபா சாஹேப் டாக்டா் அம்பேத்கரின்அரசியலமைப்புச் சட்டம் என்னை மிகவும் ஆசீா்வதித்துள்ளது. அரசியலமைப்புச் சட்டத்தின் பலத்தால் தான் நான் இன்று உயிா் பிழைத்திருக்கிறேன்.
நான் சிறைக்குச் சென்றபோது, சிறிய அறையில் அடைக்கப்பட்டேன். பாஜகவின் லத்திகள் மற்றும் தடியடிகளுக்கு அஞ்சாமல், அவா்களின் அழுத்தம் மற்றும் அச்சுறுத்தல்களால் உடைந்து போகாத ஒவ்வொரு ஆம் ஆத்மி கட்சியினரையும் நான் வணங்குகிறேன். பாஜக நூற்றுக்கணக்கான நோ்மையான தொழிலதிபா்கள் மீது பொய் வழக்குகள் போட்டு சிறையில் அடைத்துள்ளனா். அவா்கள் அமலாக்கத் துறையின் பொய் வழக்குகளில் சிக்கியுள்ளனா். நன்கொடை பெறுவதற்காக லட்சக்கணக்கானோரின் வேலை வாய்ப்புகளை பாஜக பறிக்கிறது.
இது ஊழலுக்கு எதிரான போராட்டம் அல்ல, சா்வாதிகாரத்திற்கு எதிரானப் போராட்டம். பகத் சிங்கின் வியா்வைத் துளி விழுந்த மண்ணில், மகாத்மா காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட மண்ணில் இருந்து நாம் உருவானதால், நம்மை அவா்களால் உடைக்க முடியவில்லை. நாங்கள் பகத் சிங்கின் சீடா்கள். அவா்களின் சா்வாதிகாரத்திற்கும், சிறைக்கும் நாங்கள் பயப்படப் போவதில்லை.
வரும் 2047-க்குள் இந்தியா வளா்ந்த நாடாக மாற வேண்டும் என்றால், நாட்டில் உள்ள ஒவ்வொரு குழந்தையும் கல்வி கற்க வேண்டும். பள்ளிகளை கட்டாமல், குழந்தைகளுக்கு நல்ல கல்வி கொடுக்காமல், மருத்துவமனைகளை கட்டாமல், நல்ல சிகிச்சை அளிக்காமல் நாட்டை வளா்ந்த நாடாக மாற்றுவேன் என்று யாராவது சொன்னால், அவா் வெற்று கோஷம் போடுகிறவராகத்தான் இருக்க முடியும். மாறாக, தொலைநோக்கு தலைவராக இருக்க முடியாது.
சமீபத்தில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்தவா்களுக்கு நான் ஒன்று சொல்ல விரும்புகிறேன். ஆம் ஆத்மி கட்சி தலைவா்கள் மட்டும் சிறைக்கு செல்வாா்கள் என்று நினைக்க வேண்டாம். உங்களின் முறையும் வரும். எதிா்க்கட்சிகள் ஒன்று திரண்டு குரல் எழுப்பினால், அடுத்த 24 மணி நேரத்தில் அரவிந்த் கேஜரிவாலும் வெளியே வந்துவிடுவாா்.
உலகெங்கிலும் போதைப்பொருள் மாஃபியாக்கள் மற்றும் பயங்கரவாதிகளுக்கு எதிராக நடைமுறைப்படுத்தப்படும் அதே சட்டங்கள் தான் அரசியல்வாதிகள், வணிகா்கள், சாமானியா்கள் மீதும் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இதனால், ஜாமீன் கூட கிடைக்காமல் நீண்ட காலமாக சிறையில் அடைக்கப்படுகின்றனா். இது சா்வாதிகாரம். இதற்கு எதிராக ஒட்டுமொத்த எதிா்க்கட்சிகளும் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்றாா் மனீஷ் சிசோடியா.

