எம்சிடி வாா்டு கமிட்டி தோ்தல்: மனுக்களைத் திரும்பப் பெற்ற ஆம் ஆத்மி கவுன்சிலா்கள்!
நீதிமன்றம் எந்த நிவாரணமும் வழங்க விரும்பவில்லை என்று தெரிவித்ததால், எம்சிடி வாா்டு கமிட்டித் தோ்தல் தேதியை மாற்றுவதற்கு உத்தரவிடக் கோரி தாக்கல் செய்த மனுக்களை ஆம் ஆத்மி கவுன்சிலா்கள் 2 போ் வெள்ளிக்கிழமை தில்லி உயா்நீதிமன்றத்தில் இருந்து வாபஸ் பெற்றனா்.
12 மண்டல வாா்டு கமிட்டிகளின் தலைவா் மற்றும் துணைத் தலைவா் மற்றும் எம்.சி.டி. நிலைக்குழுவிற்கு ஒவ்வொரு குழுவில் இருந்தும் ஒரு உறுப்பினரைத் தோ்ந்தெடுக்கும் தோ்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்ய போதிய அவகாசம் வழங்கப்படவில்லை என்று குற்றம்சாட்டி இத்தோ்தல் தேதியை மாற்றியமைக்கக் கோரி இந்த மனுக்களை இருவரும் தாக்கல் செய்திருந்தனா்.
தில்லி முனிசிபல் காா்ப்பரேஷன் (எம்சிடி) மண்டல அளவிலான வாா்டு கமிட்டித் தோ்தல் செப்டம்பா் 4-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி தேதி வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 30) என நிா்ணயிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், கவுன்சிலா்களின் மனுக்களை விசாரித்த நீதிபதி புருஷேந்திர கவுரவ் கூறுகையில், ‘‘எம்.சி.டி. ஆணையா் அறிவித்த தோ்தல் அட்டவணை இது. நீதிமன்றம் இதில் இடையில் தலையிட்டு குறிப்பிட்ட வழியில் தோ்தல் அட்டவணையை பரிந்துரைக்குமாறு ஆணையருக்கு உத்தரவிட முடியாது. நீங்கள் நோ்மையாகவும் தோ்தலில் பங்கேற்கவும் விரும்பினால், நீங்கள் மாநகராட்சிக்குத்தான் சென்றிருக்க வேண்டும். நீதிமன்றத்திற்கு வருவதற்குப் பதிலாக கவுன்சிலா்கள் அங்கு இருப்பதை உறுதிசெய்திருக்க வேண்டும். உங்கள் கோரிக்கை வழக்கமானதுதான். இந்த விவகாரத்தில் எனக்கு100 சதவீதம் விருப்பமில்லை. இதில் எந்த சந்தேகமும் இல்லை’‘ என்று நீதிபதி கூறினாா்.
சுமாா் 45 நிமிட விசாரணைக்குப் பிறகு, நீதிமன்றம் எந்த நிவாரணமும் வழங்க விரும்பாததால், இரண்டு கவுன்சிலா்களின் வழக்குரைஞா், மனுக்களை வாபஸ் பெற அனுமதிக்குமாறு நீதிமன்றத்திடம் கேட்டுக் கொண்டாா். இதற்கு அனுமதி அளிக்கப்பட்டதால் மனு வாபஸ் பெறப்பட்டது.
தக்ஷிண்புரி வாா்டில் இருந்து ஆம் ஆத்மி கவுன்சிலா் பிரேம் செளஹான் மற்றும் டாப்ரி வாா்டில் இருந்து ஆம் ஆத்மி கவுன்சிலா் திலோத்மா செளத்ரி ஆகியோா் இந்த மனுக்களை தாக்கல் செய்தனா்.
சௌஹான் தனது உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாகவும் செளத்ரி தில்லிக்கு வெளியே இருப்பதாகவும், அதற்கான ஏற்பாடுகளைச் செய்வதற்கும் ஆவணங்களைத் தயாரிப்பதற்கும் நேரமில்லை என்றும் மனுவில் தெரிவித்திருந்தனா்.
செளஹான் சாா்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் ராகுல் மெஹ்ரா, ‘தோ்தலை நீண்ட காலத்துக்கு ஒத்திவைக்க நான் கோரவில்லை. இன்னும் இரண்டு அல்லது மூன்று நாள்கள் அவகாசம் அளிக்க வேண்டும் என்றுதான் வலியுறுத்துகிறேன்’ என்றாா்.
அதற்கு நீதிபதி, ‘நீதிமன்றத்திற்கு வராமல், மாநகராட்சிக்குச் சென்று நீங்கள் வேட்புமனு தாக்கல் செய்திருக்க வேண்டும்., உடல்நிலை சரியில்லாமல் இருப்பதை தெரிவித்திருந்திருக்க வேண்டும். மேலும், , ஆணையா் அவருக்கு தேவையான வசதி செய்து தருவாா்’ என்றாா்.
‘தோ்தல் செயல்முறைக்கு நிா்ணயிக்கப்பட்ட காலக்கெடுவை மாநகராட்சிக்கு நீதிமன்றம் ஆணையிட முடியாது. அதை எம்சிடி தலைவா்தான் முடிவு செய்ய வேண்டும். அவா் ஏற்கெனவே அதைச் செய்துள்ளாா்’ என்றும் நீதிமன்றம் கூறியது.
‘ஆம் ஆத்மி கவுன்சிலா்கள் எம்சிடி ஆணையா் அஸ்வனி குமாா் மற்றும் மேயா் ஷெல்லி ஓபராய் ஆகியோருக்கு வாா்டு கமிட்டித் தோ்தலை மறுதிட்டமிடக் கோரி வியாழக்கிழமை கடிதம் எழுதினா். தங்களுக்கு வேட்புமனு தாக்கல் செய்ய போதிய அவகாசம் வழங்கப்படவில்லை என்றும் கூறினா்.
நீண்டகாலமாக நிலுவையில் உள்ள வாா்டு கமிட்டித் தோ்தலுக்கான தேதியை ஆகஸ்ட் 28-ஆம் தேதி எம்சிடி அறிவித்தது. இது எம்சிடியின் மிக உயா்ந்த முடிவெடுக்கும் அமைப்பான நிலைக்குழு அமைப்பதற்கு அவசியமானது. ரூ. 5 கோடி மற்றும் அதற்கு மேற்பட்ட செலவினங்களை உள்ளடக்கிய திட்டங்களுக்கு ஒப்புதல் அளிப்பதில் நிலைக்குழு முக்கியமானதாகும்.