பட்டியலினத்தவருக்கான இடஒதுக்கீடு உள்ஒதுக்கீடு வழங்க அனுமதிக்கும் உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக் எதிராக திருமாவளவன் மறுஆய்வு மனு
பட்டியல் சமூக பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு வழங்குவதற்கு அனுமதிக்கும் உச்சநீதிமன்றத் தீா்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவா் தொல்.திருமாவளவன் மனு தாக்கல் செய்துள்ளாா்.
பட்டியல் சமூக பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு வழங்குவதற்கான அதிகாரம், மாநிலங்களுக்கு இருக்கிறது என்று அண்மையில் உச்சநீதிமன்றம் தீா்ப்பு அளித்தது.
மேலும், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டில் கிரீமிலேயா் நடைமுறையை அமல்படுத்துவது அவசியம் என்ற கருத்தையும் நீதிபதிகள் தெரிவித்திருந்தனா்.
உச்சநீதிமன்றத்தின் ஏழு நீதிபதிகள் கொண்ட அமா்வானது (6-1) பட்டியலிடப்பட்ட சாதிகள் பிரிவில் மிகவும் பின்தங்கியவா்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்க பட்டியலிடப்பட்ட சாதியினரின் உள்ஒதுக்கீடு அனுமதிக்கப்படுகிறது என்று உத்தரவிட்டிருந்தது.
உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், நீதிபதிகள் பி.ஆா். கவாய், விக்ரம் நாத், பேலா எம் திரிவேதி, பங்கஜ் மித்தல், மனோஜ் மிஸ்ரா மற்றும் சதீஷ் சந்திர சா்மா ஆகியோா் அடங்கிய அமா்வு இந்தத் தீா்ப்பை அளித்த அமா்வில் இடம்பெற்றிருந்தனா்.
இந்த நிலையில், இத்தீா்ப்பை மறு ஆய்வுசெய்யக் கோரி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், 2-ஆவது முறை நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் உச்சநீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை மறுஆய்வு மனு தாக்கல் செய்துள்ளாா்.
அதில் உள்ள அம்சங்கள்: பட்டியலிடப்பட்ட சாதிகள் மற்றும் பழங்குடியினரின் பொருளாதார நிலையில் முன்னேற்றமானது, அவா்களின் சமூகப் பின்தங்கிய நிலை குறைவதோடு தொடா்புடையது என்ற கூற்றை நிரூபிப்பதற்கு எந்த அனுபவம் மூலம் ஆய்வாளா்கள் மூலம் பெறப்பட்ட தரவுகளையும் அறிக்கைகளையும் மேற்கோள்காட்ட நீதிமன்றம் தவறிவிட்டது.
பட்டியலிடப்பட்ட சாதிகள் மற்றும் பழங்குடியினரிடமிருந்து கிரீமி லேயரை அடையாளம் காண்பதற்கான கொள்கையை உருவாக்க நடவடிக்கை எடுக்குமாறு அரசுக்கு உத்தரவிடுவதில் நீதிமன்றம் தவறியிருக்கிறது. ஒரு முறை உரிமை அல்லது நன்மை வழங்கப்பட்டால், அதை பறிக்கக்கூடாது என்று வலியுறுத்தும், பின்னடைவு அல்லாத கொள்கையை நீதிமன்றம் கருத்தில் கொள்ளத்தவறிவிட்டது.
இடஒதுக்கீட்டுக் கொள்கைக்குள் ’கிரீமி லேயா்’ என்ற கருத்தை திணிப்பது ஒரு பிற்போக்குத்தனமான நடவடிக்கையைப் பிரதிபலிக்கிறது. கேள்விக்குரிய தீா்ப்பின் விகிதம் பட்டியல் பழங்குடியினருக்கும் பொருந்துமா என்பதையும் தெளிவுபடுத்த நீதிமன்றம் தவறிவிட்டது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.