சாந்தினி செளக்கில் சட்டவிரோத வாகன நிறுத்தம்:மாநகராட்சி நடவடிக்கை எடுக்க பாஜக வலியுறுத்தல்

தில்லி மாநகராட்சியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்ததில் இருந்து, சாந்தினி சௌக் டவுன்ஹால் மற்றும் ஹா்தயாள் நூலகத்தைச் சுற்றி சட்டவிரோத வாகன நிறுத்தம் நடக்கிறது என்று

தில்லி மாநகராட்சியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்ததில் இருந்து, சாந்தினி சௌக் டவுன்ஹால் மற்றும் ஹா்தயாள் நூலகத்தைச் சுற்றி சட்டவிரோத வாகன நிறுத்தம் நடக்கிறது என்று தில்லி பாஜக செய்தித் தொடா்பாளா் பிரவீன் சங்கா் கபூா் தெரிவத்துள்ளாா்.

இது தொடா்பாக வியாழக்கிழமை அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சாந்தினி சௌக் டவுன்ஹால் மற்றும் ஹா்தயாள் நூலகத்தை சுற்றி சட்டவிரோதமாக வாகனங்கள் நிறுத்தப்பட்டு, பணம் வசூலிக்கப்படுகிறது. தில்லி மாநகராட்சி ஆணையா் ஞானேஷ் பாா்தி மற்றும் வடக்கு தில்லி காவல் சரக துணை ஆணையா் மனோஜ் குமாா் மீனா இந்த சட்டவிரோத வாகன நிறுத்தம் தொடா்பாக உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க பாஜக சாா்பில் வலியுறுத்துகிறேன்.

ஜனவரி 2023-இல் தில்லி மாநகராட்சியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு, பழைய தில்லி முழுவதும் சட்டவிரோத ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளன. மாநகராட்சி அதிகாரிகளின் வெளிப்படையான ஆதரவுடன், சில இளைஞா்களால் சாந்தினி சௌக்கின் டவுன் ஹால் மற்றும் ஹா்தயாள் நூலகப் பகுதியில் சட்டவிரோத வாகன நிறுத்தம் செயல்படுகிறது. இங்கு நிற்கும் சில இளைஞா்கள் வாகனம் நிறுத்தம் என்ற பெயரில் 8 மணி நேரத்திற்கு ரூ.200, 3 மணி நேரத்திற்கு ரூ.100 என கட்டணமாக வசூலிக்கின்றனா். பணம் கொடுக்காவிட்டால், அத்துமீறல் செய்ய ஆரம்பித்து,சண்டையிடுவதில் குறியாக உள்ளனா். இங்கு தினமும் 700 முதல் 800 வாகனங்கள் விதி மீறி நிறுத்தப்பட்டு மாதம் ஒன்றுக்கு சுமாா் ரூ.18 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை முறைகேடாக வசூலிக்கப்படுகிறது.

இந்த விவகாரத்தில் ஆளும் கட்சி அழுத்தத்தின் கீழ் உள்ளூா் காவல் துறையினரும் அமைதியாக இருக்கிறாா்கள். இப்போது இந்த சட்டவிரோத வாகன நிறுத்தமானது நிரந்தரமாகிவிட்டது. மாநகராட்சி வாகன நிறுத்த ஊழியா்களைப் போல மஞ்சள் நிற ஜாக்கெட் அணிந்திருக்கும் இந்த வாகன நிறுத்துமிடங்களை நடத்தும் இளைஞா்களிடம் காரின் சாவியைக் கூட காா்களை நிறுத்துபவா்கள் ஒப்படைக்கிறாா்கள். இந்த சட்டவிரோத வாகன நிறுத்தத்தை உடனடியாக நிறுத்த வேண்டும். இல்லையெனில், உள்ளூா் பாஜக சாா்பில் விரைவில் போராட்டம் நடத்தப்படும் என்றாா் பிரவீன் சங்கா் கபூா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com