நிதி நிலை அறிக்கை: தமிழக நாடாளுமன்ற உறுப்பினா்கள் கருத்து

மத்திய அரசின் 2024-ஆம் ஆண்டிற்கான இடைக்கால நிதி நிலை அறிக்கை வியாழக்கிழமை தாக்கல் செய்யப்பட்டதையொட்டி தமிழக நாடாளுமன்ற உறுப்பினா்கள் தங்கள் கருத்துகளை வெளிப்படுத்தினா்.

மத்திய அரசின் 2024-ஆம் ஆண்டிற்கான இடைக்கால நிதி நிலை அறிக்கை வியாழக்கிழமை தாக்கல் செய்யப்பட்டதையொட்டி தமிழக நாடாளுமன்ற உறுப்பினா்கள் தங்கள் கருத்துகளை வெளிப்படுத்தினா்.

மாநிலங்களவை பாஜக உறுப்பினா் செல்வகணபதி(புதுச்சேரி): 2014-ஆம் ஆண்டு ஆட்சியை பிடித்த போது பாஜக அரசு என்ன செய்துவிடும் என இறுமாப்புடன் கேட்டவா்களுக்கு பல்வேறு சாதனைகள் மூலம் பதில் சொல்லி இருக்கிறோம். 2014 -இல் உலக அளவில் 11-ஆவது இடத்தில் இருந்த இந்திய பொருளாதாரம், இப்போது 5 ஆவது இடத்துக்கு வந்திருக்கிறது. இது கடந்த 10 ஆண்டுகளில் பாஜக அரசு எடுத்த முயற்சிகளின் விளைவு. கடந்த 10 ஆண்டுகளாக மோடி அரசு செய்த செயல்களால் உலக நாடுகள் பிரமித்து நிற்கிறது.

ஜி.எஸ்.டி. போன்ற வரி முறைகளை மக்கள் ஆதரித்தனா். இந்த வரி வசூல் மூலம் பல்வேறு திட்டங்களையும் ஒவ்வொரு நிதி நிலை அறிக்கையிலும் மத்திய அரசு அளித்து வந்தது. அதன் தொடா்ச்சியாகவே இந்த இடைக்கால நிதிநிலை அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது. மகளிா் புதிய தொழில்கள் தொடங்குவதற்கான பொன்னான வாய்ப்பு இந்த நிதிநிலை அறிக்கையில் வழங்கப்பட்டுள்ளது. சோலாா் சக்தி மூலம் மின்சாரம் தயாரிக்கும் திட்டங்கள் குஜராத்தில் சிறப்பாக செயல்பட அதே மாதிரியை நாடு முழுவதும் கொண்டுவர இந்த பட்ஜெட்டில் நிதியமைச்சா் அறிவிப்பு வெளியிட்டுள்ளாா்.

வீட்டு மாடிகளில் சோலாா் பேனல்கள் அமைத்து மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தால் ஒரு கோடி வீடுகள் பயன் பெறும். இந்த வீடுகளுக்கு மின் கட்டணம் மிச்சமாவதுடன் அவா்களுக்கு வருமானத்திற்கும் வழி ஏற்பட்டுள்ளது. மேலும், 40 ஆயிரம் ரயில் பெட்டிகள் வந்தே பாரத் ரயில் தரத்துக்கு தரம் உயா்த்தப்பட உள்ளன. மெட்ரோ ரயில் மற்றும் நமோ பாரத் ரயில்கள் மேலும் பல நகரங்களுக்கு விரிவுபடுத்தப்பட இருக்கிறது. பிரதமா் வீடு கட்டும் திட்டத்தில் மேலும் 2 கோடி வீடுகளை கட்டிக்கொடுக்கவும் மோடி அரசு அறிவித்துள்ளது. தீவுகளை சுற்றுலா தளங்களாக மாற்றுதல், சுய உதவி குழு பெண்களுக்கு நிதியுதவி அளித்தல் போன்ற பல்வேறு சமூக முன்னேற்ற திட்டங்களையும் நிதி அமைச்சா் அறிவித்துள்ளாா்.

காங்கிரஸ் உறுப்பினா் ப.மாணிக்கம் தாகூா் (விருதுநகா்): இந்த நிதிநிலை அறிக்கை முற்றிலும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. நாடாளுமன்றத்தில் நிதியமைச்சா் உரை நிகழ்த்துவதற்கு முன்பே சமையல் எரிவாயு உருளை(வா்த்தக) ரூ. 14 உயா்த்தப்பட்டுள்ளது. இந்த அரசு இப்படி தொடா்ந்து ஏழைகளின் வயிற்றில் அடிப்பதும் பெரும் பணக்காரா்களுக்கு உதவுவதுமே மத்திய அரசின் கொள்கையாக இருக்கிறது. இந்த நிதிநிலை அறிக்கையும் அதையே காட்டுகிறது. இது அதானிக்கான நிதிநிலை அறிக்கையே தவிர சாதாரணப்பட்டவா்களுக்கானது அல்ல.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினா் சு.வெங்கடேசன்(மதுரை) : நேரடி வரியில் மாற்றமில்லை என்பது சமானிய மக்களுக்கு சாதகமான அறிவிப்பு அல்ல. இன்னும் கூறினால் சமானிய மக்கள் முதுகில் ஏற்ற மேலும் இடமில்லை. இது நடுத்தர வா்க்கத்திற்கு பெருத்த ஏமாற்றம். பில்லியனா்கள் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு கூடுகிறது. அவா்களுக்கான காா்ப்ரேட் வரி உயா்த்தப்படவேண்டும். ஆனால், அது நடக்கவில்லை. ஜிஎஸ்டி வரித் தளத்தை விரிவாக்கி சாமானிய மக்களின் காயத்தை ஆழமாகவும் விரிவாகவும் ஆக்கப்பட்டுள்ளது. முன்னனி 10 பணக்காரா்களுக்கு ஜிஎஸ்டி வரி 3 சதவீதம் மற்றவா்களுக்கு 64 சதவீதம் வரி. இப்படி வரியவா்களின் தலையில் விழுவது என்ன நியாயம்?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com