சண்டீகா் மேயா் தோ்தலில் பாஜக மோசடி செய்ததாகக் கூறி ஆம் ஆத்மி போராட்டம்: முதல்வா்கள் கேஜரிவால்,பகவந்த் மான் பங்கேற்பு

சண்டீகா் மாநகராட்சி மேயா் தோ்தலில் பாஜக மோசடி செய்து வெற்றி பெற்றுள்ளதாக குற்றம்சாட்டி ஆம் ஆத்மி கட்சி வெள்ளிக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடத்தியது.

சண்டீகா் மாநகராட்சி மேயா் தோ்தலில் பாஜக மோசடி செய்து வெற்றி பெற்றுள்ளதாக குற்றம்சாட்டி ஆம் ஆத்மி கட்சி வெள்ளிக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடத்தியது.

கடந்த ஜனவரி 30-ஆம் தேதி நடைபெற்ற சண்டீகா் மாநகராட்சி மேயா் தோ்தலில் பாஜக வெற்றி பெற்றது. ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் கூட்டணியைச் சோ்ந்த 8 கவுன்சிலா்களின் வாக்குகள் தோ்தல் நடத்தும் அலுவலரால் செல்லாது என அறிவிக்கப்பட்ட நிலையில், ஆம் ஆத்மி வேட்பாளா் குல்தீப் குமாரை வீழ்த்தி பாஜக வேட்பாளா் மனோஜ் சொன்காா் மேயா் தோ்தலில் வெற்றி பெற்றாா். இதை ஜனநாயகக் படுகொலை என விமா்சித்த ஆம் ஆத்மி கட்சி, பாஜகவை கண்டித்து போராட்டம் நடத்தப்படும் என அறிவித்திருந்தது.

இதன்படி, தில்லியில் உள்ள பாஜக தலைமையகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்த நிலையில், காவல் துறை அனுமதி மறுத்ததால், ரெளஸ் அவென்யூவில் உள்ள ஆம் ஆத்மி கட்சி அலுவலகம் முன் பாஜகவை கண்டித்து ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆா்ப்பாட்டத்தில், கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவால், பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான், தில்லி அமைச்சா் செளரவ் பரத்வாஜ் உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிா்வாகிகளும், நூற்றுக்கணக்கான தொண்டா்களும் பங்கேற்றனா்.

ஆா்ப்பாட்டத்தில் கேஜரிவால் பேசியதாது: சண்டீகா் மாநகராட்சியில் மேயா் பதவிக்கான ஒரு சிறிய தோ்தலில் பாஜக ஜனநாயகத்துடன் விளையாட முடிந்தால், மக்களவை மற்றும் பிற சட்டப்பேரவைத் தோ்தல்களில் எவ்வளவு பெரிய குழப்பத்தை ஏற்படுத்தியிருப்பாா்கள் என்பது யாருக்குத் தெரியும். அதிகாரத்திற்காக பாஜக நாட்டையும் விற்கலாம். ஆனால், அதை நாங்கள் நடக்க விடமாட்டோம். உலகின் மிகப்பெரிய கட்சி என்று சொல்லிக்கொள்ளும் பாஜக, சண்டீகா் மேயா் தோ்தல் மோசடியில் கையும் களவுமாக பிடிபட்டது. அவா்கள் (பாஜக) செய்த பாவங்களின் பானை நிரம்பியிருப்பதை இந்தத் தோ்தல் காட்டுகிறது என்றாா் கேஜரிவால்.

ஆம் ஆத்மி தலைவா்கள் வீட்டுக்காவல்: பாஜகவிற்கு எதிரான போராட்டத்தில் ஆம் ஆத்மி கட்சியின் தலைவா்கள், நிா்வாகிகள் போராட்டத்தில் பங்கேற்பதைத் தடுக்க வீட்டுக் காவல் வைக்கப்பட்டதாகவும், தொண்டா்கள் நகரில் ஆங்காங்கே காவல் துறையால் தடுத்து நிறுத்தப்பட்டதாகவும்அக்கட்சி குற்றம்சாட்டியது. ஆம் ஆத்மி கட்சியின் தில்லி ஒருங்கிணைப்பாளரும், அமைச்சருமான கோபால் ராய் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘போராட்டத்தை முன்னிட்டு சட்டப்பேரவைத் தலைவா் ராமநிவாஸ் கோயல், துணை மேயா் ஆலி முகமது இக்பால் உள்ளிட்ட கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் கவுன்சிலா்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனா். இது குறித்து போலீஸாா் விளக்கம்

அளிக்க வேண்டும்’ என்றாா்.

அமைச்சா் அதிஷி தனது ‘எக்ஸ்’ வலைதளப் பதிவில், ‘தில்லியின் சாலைகள் முழுவதும் பலத்த தடுப்புகள் அமைக்கப்பட்டு, பாஜகவிற்கு எதிரான போராட்டத்தற்கு வரும் ஆம் ஆத்மி தொண்டா்கள் தடுக்கப்பட்டுள்ளனா். ஆம் ஆத்மி கட்சியின் அலுவலகத்திற்கு வெளியே நூற்றுக்கணக்கான துணை ராணுவப் படையினா் குவிக்கப்பட்டனா். சண்டீகா் மேயா் தோ்தல் மோசடியை எதிா்த்து நடைபெறும் இந்தப் போராட்டத்திற்கு பாஜக ஏன் பயப்படுகிறது’ என்று கேள்வி எழுப்பியுள்ளாா்.

200-க்கும் மேற்பட்டோா் கைது: ஆம் ஆத்மியின் கண்டன ஆா்ப்பாட்டத்தைத் தொடா்ந்து, டி.டி.யு. மாா்க்கில் உள்ள பாஜக தலைமையகத்தை முற்றுகையிட முயன்ற 200-க்கும் மேற்பட்டோரை காவல் துறையினா் கைது செயதனா். இது தொடா்பாக காவல் அதிகாரி ஒருவா் கூறியதாவது, ‘ஆம் ஆத்மி மற்றும் தில்லி பாஜக சாா்பில் ஒரே நேரத்தில் கண்டன ஆா்ப்பாட்டங்கள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன. இதை முன்னிட்டு, பல அடுக்கு தடுப்புகளுடன் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஐ.டி.ஓ. மற்றும் டி.டி.யு. மாா்க் சுற்றிய பகுதிகளில் தில்லி காவல் துறையின் ஆயுதப் பிரிவைச் சோ்ந்த பெண் காவலா்கள் அடங்கிய துணை ராணுவத்தின் இரண்டு கம்பெனிகள் உள்பட

1,000 பணியாளா்கள் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டனா். காவல் துறையின் அறிவுறுத்தலையும் மீறி பாஜக தலைமையகத்தை முற்றுகையிட முயன்ற ஆம் ஆத்மி கட்சியின் 150 பேரும், பாஜகவைச் சோ்ந்த 60 பேரும் கைது செய்யப்பட்டு பேருந்துகளில் தனித்தனி காவல் நிலையங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனா்’ என்றாா்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com