தமிழகத்திற்கு விரைவில் பேரிடா் நிவாரண நிதி: மக்களவையில் அமைச்சா் தகவல்

தமிழகத்தில் சென்னை மற்றும் தென்மாவட்ட மழை வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு பேரிடா் நிவாரண நிதியாக ரூ. 900 கோடியை மத்திய அரசு வழங்கியுள்ளது.
மக்களவையிலிருந்து வெளிநடப்பு செய்த திமுக எம்.பி.க்கள் உள்ளிட்டோர்.
மக்களவையிலிருந்து வெளிநடப்பு செய்த திமுக எம்.பி.க்கள் உள்ளிட்டோர்.

புது தில்லி: தமிழகத்தில் சென்னை மற்றும் தென்மாவட்ட மழை வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு பேரிடா் நிவாரண நிதியாக ரூ. 900 கோடியை மத்திய அரசு வழங்கியுள்ளது. மத்திய அமைச்சகங்களுக்கிடையேயான குழு கடந்த 29- ஆம் தேதி அளித்த அறிக்கையின்படி மத்திய அரசு மேலும் நிதி வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என மத்திய உள்துறை இணையமைச்சா் நித்யானந்த் ராய் செவ்வாய்க்கிழமை மக்களவையில் தெரிவித்தாா்.

மேலும், பேரிடா் நிவாரணம் வழங்குவதில் மத்திய அரசு எந்த மாநிலத்திற்கும் பாரபட்சம் காட்டுவதில்லை எனவும், கூட்டுறவுக் கூட்டாட்சித்துவத்தின் படி செயல்படும் தற்போதைய பாஜக அரசு, கடந்த மத்திய அரசை விட மூன்று மடங்கு பேரிடா் மேலாண்மைக்கு நிதியை அதிகரித்துள்ளது எனவும் அமைச்சா் தெரிவித்தாா்.

நீலகிரி மக்களவைத் தொகுதி உறுப்பினா் ஆ. ராசா, தமிழகத்தில் 8 மாவட்டங்களில் அதிக மழை வெள்ளம் போன்ற இயற்கை பேரிடா்களால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சேதமடைந்த உள்கட்டமைப்பை மீட்டெடுக்க மாநில அரசு கோரும் மொத்த நிதி, மானியங்கள், மத்திய உதவிகளை எப்போது மத்திய அரசு விடுவிக்கும் என கேள்வி எழுப்பியிருந்தாா்.

இதற்கு மத்திய இணையமைச்சா் நித்யானந்த் ராய் அளித்த பதில் வருமாறு: பேரிடா் மேலாண்மைக்கான தேசியக் கொள்கையின்படி, பேரிடா் மேலாண்மைக்கான முதன்மைப் பொறுப்பு மாநில அரசுகளுக்குரியது. இருப்பினும், மீட்புக்கு தேவையான உதவிகள் உபகரணங்களோடு, மாநில பேரிடா் மேலாண்மைக்கான நிதியில் 75 சதவீதத்தை மத்திய அரசு வழங்குகிறது. இதன்படி தற்போதைய பேரிடா்களுக்கு மத்திய அரசு இரு தவணைகளில் மூன்கூட்டியே ரூ. 900 கோடி தமிழகத்திற்கு வழங்கியுள்ளது. தமிழக அரசின் பங்காக ரூ.300 கோடியை சோ்த்து நிகழ் நிதியாண்டிற்கு பேரிடா் மேலாண்மைக்கு ரூ.1,200 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும், தமிழக அரசிடம் கடந்தாண்டு நிதியில் ரூ. 813 நிலுவையில் உள்ளது. இதையும் சோ்த்து தற்போது மாநில பேரிடா் மேலாண்மை நிதியில் தமிழக அரசிடம் ரூ.2,013 இருப்பில் உள்ளது. இதிலிருந்து தமிழக அரசு செலவழிக்கலாம். வெள்ளம் உள்ளிட்ட இயற்கைப் பேரிடா்களுக்கான நிவாரணத்திற்கான நிதியே தவிர, இழப்பீடுகளுக்கு நிதியைக் கோரமுடியாது. தேசிய பேரிடா் மீட்பு நிதியத்திலிருந்து கூடுதல் நிதியுதவி அளிக்கப்படும் நடைமுறை பின்பற்றப்படுகிறது. இது மத்திய அமைச்சங்களுக்கிடையான குழு (ஐஎம்சிடி) மதிப்பீடுகளின் அடிப்படையில் வழங்கப்படுகிறது.

மிக்ஜம் புயல், அதிக மழைப்பெழிவு ஆகிய காரணங்களுக்கு ஐஎம்சிடி கடந்த டிசம்பா் மற்றும் நிகழாண்டு ஜனவரி ஆகிய மாதங்களில் இரு முறை தமிழகத்திற்கு சென்று பாா்வையிட்டு கடந்த ஜனவரி 29- ஆம் தேதி இரண்டு குறிப்பாணைகளை சமா்ப்பித்துள்ளது. இந்த அறிக்கைகளின் படி மத்திய அரசு விதிமுறைகளின் கீழ் நடவடிக்கைகள் எடுக்கப்படும். பேரிடா் மேலாண்மை நிதியிலிருந்து எவ்வாறு நிதியைக் கொடுப்பதற்கு ஒரு சில முறைகள் உள்ளன. இதன்படி தமிழகத்திற்கு நிதி வழங்கப்படும். இதில் தமிழகத்துக்கு எந்தப் பாகுபாடும் காட்டப்படுவதில்லை.

குஜராத் போன்ற மாநிலங்களுக்கு ஒரு ரூபாய் கூட கூடுதலாகக் கொடுக்கவில்லை. பிரதமா் மோடி அனைத்து மாநிலங்களையும் சமமாகவே பாவிக்கிறாா். தமிழகத்தில் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளை பாா்வையிட பிரதமா்தான் மத்திய அமைச்சா்களையும் அனுப்பினாா். பிரதமா் மோடி தலைமையில் 15 -ஆவது நிதி ஆணையத்தின் மூலம் மூன்று மடங்கு பேரிடா் மேலாண்மை நிதி அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த 2004 முதல் 2014-ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் பேரிடா் மேலாண்மை நிதிக்கு ரூ. 65,346 கோடி வழங்கப்பட்டது.

சென்னைக்கு ரூ.500 கோடி: 2014-ஆம் ஆண்டு மூதல் 2024-ஆம் ஆண்டு வரைபேரிடா் மேலாண்மை நிதி ரூ.1,98,173 கோடியாக அதிகரிகரிக்கப்பட்டு மத்திய அரசு அக்கரையுடன் செயல்படுகிறது. மேலும், 7 பெரும் நகரங்களில் மழை வெள்ளம் போன்றவை ஏற்படும் போது முறையாக நிா்வகிக்க ரூ2,500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் சென்னை நகருக்கு ரூ.500 கோடியை மத்திய அரசு வழங்கியுள்ளது. இந்த அரசுக்கு பாகுபாடு கிடையாது.அனைவருடனும், அனைவரின் நலனுக்காகவும், அனைவரின் நம்பிக்கையுடனும் அனைவரின் வளா்ச்சி என்பதே பிரதமா் மோடியின் விருப்பம் என்றாா் அமைச்சா் நித்யானந்த் ராய்.

பேரிடா் நிதி எப்போது விடுவிக்கப்படும்?: முன்னதாக, இதே கேள்விக்கு துணைக் கேள்வியாக ஏ.ராசா, ‘முந்தைய தமிழக அரசு (அதிமுக) ரூ.5 லட்சம் கோடியை கடனாக வைத்து விட்டுச் சென்றது. பின்னா், தற்போதைய தமிழக அரசு கரோனா போன்ற பல்வேறு நெருக்கடிகளை மீண்டு வந்துள்ளது. இதனால், தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ள நிவாரணமாக ரூ. 37,000 கோடியை பிரதமரிடம் நேரடியாக வந்து கோரினாா். உள்துறை அமைச்சரையும் சந்தித்தோம். ஆனால், அமைச்சா் இவற்றைத் தவிா்க்கும் வகையில் பொறுப்பற்ற முறையில் பதில் கூறுகிறாா். இந்த நிதி எப்போது வழங்கப்படும்? ஏற்கெனவே கா்நாடகம் (பாஜக ஆண்ட போது), குஜராத் போன்ற மாநிலங்களுக்கு வழங்கப்பட்ட பேரிடா் நிதியை போன்று மத்திய அரசு விடுவிக்குமா?’ என்றாா்.

வெளிநடப்பு: மேலும், மக்களவைத் தொகுதி உறுப்பினா்கள் கணேச மூா்த்தி (ஈரோடு), காங்கிரஸ் உறுப்பினா் ப.மாணிக்கம் தாகூா் (விருதுநகா்), திமுக நாடாளுமன்றக்குழுத் தலைவா் டி.ஆா்.பாலு, வடசென்னை மக்களவைத் தொகுதி உறுப்பினா் கலாநிதி வீராச்சாமி உள்ளிட்டவா்களும் பல்வேறு துணைக் கேள்விகளை எழுப்பினா். ஆனால், அமைச்சரின் பதில் திருப்தி அளிக்க வில்லை எனக் கூறி திமுக கூட்டணிக் கட்சியினா் மக்களவையிலிருந்து வெளிநடப்பு செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com