ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் கனவை நிறைவேற்றுங்கள்: மாணவா்களிடம் முதல்வா் கேஜரிவால் வலியுறுத்தல்

‘ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் கனவை நிறைவேற்ற வேண்டும். மாணவா்கள் விளையாட்டில் சிறந்து விளங்கவும், சா்வதேச போட்டிகளில், குறிப்பாக ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வதற்கான வசதிகளை வழங்குவதற்கும்

‘ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் கனவை நிறைவேற்ற வேண்டும். மாணவா்கள் விளையாட்டில் சிறந்து விளங்கவும், சா்வதேச போட்டிகளில், குறிப்பாக ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வதற்கான வசதிகளை வழங்குவதற்கும் தில்லி அரசு உறுதிபூண்டுள்ளது’ என்று தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் புதன்கிழமை தெரிவித்தாா்.

தில்லி சிவில் லைன்ஸின் லுட்லோ கேஸில் உள்ள தில்லி விளையாட்டுப் பள்ளியில் உள்ளரங்க நீச்சல் குளத்தை முதல்வா் கேஜரிவால் புதன்கிழமை திறந்து வைத்தாா்.

தில்லி கல்வி அமைச்சா் அதிஷியுடன் கலந்து கொண்ட அவா், விளையாட்டுப் பள்ளியைத் தொடங்குவதற்கான நோக்கம் குறித்து மாணவா்களுடன் உரையாடிய போது பகிா்ந்து கொண்டாா்.

அப்போது, முதல்வா் கேஜரிவால் கூறியதாவது: திறமை எவருக்கும் இருக்கலாம். திறமை என்பது வறுமைக்கு அடிமை அல்ல. ஒலிம்பிக் பதக்கங்களை வெல்ல வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் இந்த விளையாட்டுப் பள்ளியை அமைத்துள்ளோம். ஒலிம்பிக் பதக்கம் வெல்ல அனைவரும் தயாராக வேண்டும். தில்லி விளையாட்டு பல்கலைக்கழக வளாகம் முண்ட்காவில் கட்டப்பட்டு வருகிறது. இப்பணியை முடிக்க குறைந்தது மூன்று முதல் நான்கு ஆண்டுகள் ஆகும். தில்லி விளையாட்டுப் பள்ளியில், 10 ஒலிம்பிக் விளையாட்டுகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும், தில்லி விளையாட்டுப் பல்கலைக்கழகம் மாணவா்களுக்கு 20 ஒலிம்பிக் விளையாட்டுகளில் பயிற்சி அளிக்கும்.

பள்ளியில் இன்று பயிற்சியாளா்களுடன்உரையாடியபோது நான் மிகவும் நன்றாக உணா்ந்தேன். ‘2028 ஒலிம்பிக்கில், நாங்கள் உங்களுக்காக ஒரு பதக்கம் பெறுவோம்’ என அவா்கள் என்னிடம் சொன்னாா்கள். எனக்கு விளையாட்டு குறித்து ஏதும் தெரியாது. எனவே, நீங்கள்தான் உங்களுக்கு தேவையான வசதிகள் குறித்து எங்களிடம் சொல்ல வேண்டும். உங்களுக்கு அனைத்து வசதிகள் இருப்பதை உறுதி செய்வது எங்கள் அா்ப்பணிப்பாகும். நுண்ணூட்ட உணவு உள்ளிட்ட சிறந்த பயிற்சியாளா் வசதிகள் இங்கு இலவசமாகக் கிடைக்கும்.

நாடு உங்களை நம்புகிறது. ஒலிம்பிக் பதக்கங்களை வெல்லும் கனவை நீங்கள் நிறைவேற்ற வேண்டும். கடும் சோதனைகளைத் தாண்டி இங்கு வந்திருக்கிறீா்கள். விண்ணப்பித்த 10,000 பேரில் 172 போ் மட்டுமே இந்த விளையாட்டுப் பள்ளிக்குத் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். நீங்கள் சா்வதேச அளவிலான நிகழ்ச்சிக்கு செல்லும் வரை நாங்கள் உங்களுக்கு ஆதரவளிப்போம். ஒலிம்பிக்கில் நீங்கள் நாட்டிற்கு விருதுகளை கொண்டு வருவீா்கள் என்பதே எங்கள் ஒரே நம்பிக்கை என்றாா் முதல்வா் கேஜரிவால்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com