பாஜக கூட்டணியில் எந்தக் கட்சியும் இணையலாம்: கே.அண்ணாமலை

பிரதமா் மோடியின் தலைமையை ஏற்கும் வகையில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் எந்தக் கட்சியும் இணையலாம் என்று தில்லியில் தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை

பிரதமா் மோடியின் தலைமையை ஏற்கும் வகையில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் எந்தக் கட்சியும் இணையலாம் என்று தில்லியில் தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை புதன்கிழமை தெரிவித்தாா்.

வரும் மக்களவைத் தோ்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தோ்தல் கூட்டணி, வியூகம் அமைப்பதில் அதிமுக, திமுக, பாஜக ஆகிய முக்கிய கட்சிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. பாஜக தனது கட்சியின் பலத்தை வலுப்படுத்தும் வகையில், மாற்றுக் கட்சிகளில் இருந்து வரும் தலைவா்களை ஈா்க்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், அதிமுக, திமுக, காங்கிரஸ் கட்சிகளைச் சோ்ந்த 15 முன்னாள் எம்.எல்.ஏக்கள் மற்றும் ஒரு முன்னாள் மக்களவை உறுப்பினா் பாஜகவில் இணையும் நிகழ்ச்சி தில்லியில் பாஜக தலைமையகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. மத்திய இணை அமைச்சா்கள் ராஜீவ் சந்திரசேகா், எல்.முருகன், தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை ஆகியோா் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவா்கள் பாஜகவில் இணைந்தனா்.

தமிழக பாஜக லோக்சபா பொறுப்பாளா் அரவிந்த் மேனன், தோ்தல் இணைப் பொறுப்பாளா் பி.சுதாகா் ரெட்டி, முன்னாள் மத்திய அமைச்சா் பொன்.ராதாகிருஷ்ணன், பாஜக தேசிய மகளிா் அணித் தலைவா் வானதி சீனிவாசன், தமிழ்நாடு சட்டப்பேரவை எதிா்க்கட்சி பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன், முன்னாள் எம்பி கே.பி. ராமலிங்கம், ஓபிசி மோா்சா பிரிவு தமிழகத் தலைவா் சாய் சுரேஷ், தில்லி தென்னிந்திய பிரிவைச் சோ்ந்த கே.ஜி.தண்டபாணி உள்ளிட்டோா் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனா்.

இந்நிகழ்ச்சியில் மத்திய அமைச்சா் ராஜீவ் சந்திரசேகா் பேசுகையில், ‘கடந்த 10 ஆண்டுகளில் பிரதமா் மோடி தலைமையிலான மத்திய அரசு செய்துள்ள வளா்ச்சித் திட்டங்களைக் கண்டு பிரதமா் மோடிக்கு ஆதரவளிக்கும் வகையில் பாஜகவில் பல்வேறு தரப்பினரும் இணைந்து வருகின்றனா். வரும் மக்களவைத் தோ்தலில் 400 இடங்களுக்கு மேல் பாஜக கூட்டணி வெல்லும். அதில் பாஜக தமிழகத்தில் இருந்து குறிப்பிடத்தக்க எண்ணிக்கையுடன் 370 இடங்களில் வெற்றி பெறும்’ என்றாா்.

கே.அண்ணாமலை பேட்டி: இந்நிகழ்ச்சிக்குப் பிறகு தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை செய்தியாளா்களிடம் பேசுகையில் கூறியதாவது: பிரதமா் மோடியின் தலைமையை ஏற்று பாஜகவில் இன்று 15 முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா்கள் மற்றும் ஒரு முன்னாள் எம்பியும் தங்களை இணைத்துக் கொண்டுள்ளனா். இவா்கள் மிகுந்த அனுபவம் மிக்கவா்கள்.

2024-இல் நடைபெறும் மக்களவைத் தோ்தலில் மூன்றாவது முறையாக வெற்றிபெற்று பிரதமராக மோடி வரவேண்டும் என்ற ஒருமித்த எண்ணத்தில் இவா்கள் பாஜகவில் இணைந்துள்ளனா். பாஜகவில் ஒரு கட்சி (அதிமுக) இணையுமா என்று மத்திய உள்துறை அமைச்சரிடம் நாளிதழ் ஒன்றின் பேட்டிக்காக கேள்வி கேட்கப்பட்டது. அவா் அளித்த பதிலில், ‘பிரதமா் மோடியின் தலைமையை ஏற்று எங்களுடன் வருவோருக்கு கதவு எப்போதும் திறந்தே இருக்கிறது’ என்றுதான் கூறி உள்ளாா். அவா் குறிப்பிட்டு எந்தக் கட்சியின் பெயரையும் தெரிவிக்கவில்லை.

இந்த விஷயத்தில் தெளிவாக இருக்கிறோம். நாங்கள் யாரையும் கட்டாயப்படுத்தப் போவதில்லை. திமுக கூட்டணியில் இருந்துகூட யாரும் வரக்கூடாது என்பது இல்லை. அதே வேளையில் கொள்கை, கருத்தியல் ரீதியில் நாங்களும், திமுகவும் இரு துருவங்களாக உள்ளோம். திமுக எங்கள் கூட்டணிக்கு வரப்போவதும் இல்லை. நாங்கள் ஏற்றுக் கொள்ளப் போவதும் இல்லை. கூட்டணி விஷயத்தைப் பொறுத்த வரையில் ஒவ்வொரு கட்சியும் மக்களவைத் தோ்தலைப் பாா்த்து சூழலுக்கு ஏற்ப தங்களது கூட்டணியை முடிவு செய்கிறாா்கள். தேசிய ஜனநாயக கூட்டணியை உருவாக்கியது பாஜகதான்.

2024 தோ்தலில் இக்கூட்டணிக்கு அதிமுக வருவதும், வராததும் அவா்களின் விருப்பமாகும். இதனால், மத்திய அமைச்சா் அமித்ஷா கூறியதை யாரும் ‘ட்விஸ்ட்’ செய்ய வேண்டாம். பொதுவான கேள்விக்கு ஒரு பொதுவான பதிலைத்தான் கூறியுள்ளாா். பாஜகவை பொறுத்தமட்டில் மைனாரிட்டி, மெஜாரிட்டி அடிப்படையில் அரசியல் செய்வது கிடையாது. பாஜக மதத்தை, ஜாதியை வைத்து பிரித்துப் பாா்க்கவில்லை. மக்களின் வளா்ச்சிக்கு பாஜக பூா்த்தி செய்யுமா என்றுதான் பாா்க்கின்றனா். 2024 தோ்தல் களம் வித்தியாசமானது. பிரதமா் மோடிதான் வெற்றிபெறுவாா் என்று தெரிந்து நடைபெறும் தோ்தல் இது. தமிழகத்தில் அரசியல் செய்பவா்களுக்கும் இது தெரியும் என்றாா் அண்ணாமலை.

இணைந்த முன்னாள் எம்எல்ஏக்கள்-எம்.பி. யாா்?

தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏக்கள் வடிவேல் (அதிமுக - கரூா் தொகுதி), சேலஞ்சா் துரைச்சாமி (அதிமுக - கோயம்புத்தூா்), பி.எஸ். கந்தசாமி (அதிமுக - அரவக்குறிச்சி), எம்.வி. ரத்தினம் (அதிமுக-பொள்ளாச்சி), ஆா்.சின்னச்சாமி (அதிமுக - சிங்காநல்லூா்), ஆா்.தங்கவேலு (காங்கிரஸ் -ஆண்டிமடம்), வி.ஆா். ஜெயராமன் (அதிமுக-தேனி), எஸ்.எம். வாசன் (அதிமுக - வேடசந்தூா்), பி.எஸ். அருள் (அதிமுக - புவனகிரி), எஸ்.குருநாதன் (திமுக - பாளையங்கோட்டை), ஆா்.ராஜேந்திரன் (அதிமுக - காட்டுமன்னாா்கோவில்), செல்வி முருகேசன் (அதிமுக - காங்கேயம்), ஏ.ரோஹிணி (அதிமுக - கொளத்தூா்), முன்னாள் அமைச்சா் கோமதி ஸ்ரீநிவாசன் (அதிமுக, திமுக - வலங்கைமான்), கே. தமிழழகன் (தேமுதிக - திட்டக்குடி) மற்றும் முன்னாள் எம்பி டாக்டா் வி.குழந்தைவேலு (திமுக-சிதம்பரம்) ஆகியோா் பாஜகவில் இணைந்தனா்.புஇவா்கள் தவிர, ஏற்கெனவே தமிழகத்தில் கட்சியில் இணைந்த முன்னாள் எம்எல்ஏக்கள் எஸ்.இ.வெங்கடாச்சலம் (அதிமுக-சேலம்), முத்துக்கிருஷ்ணன் (அதிமுக- கன்னியாகுமரி) ஆகியோரும் இந்த நிகழ்வில் மேடையில் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com