நாட்டில் மொத்த வாக்காளா்கள் 96.88 கோடி போ்: இளம் வாக்காளா்கள் 2 கோடி போ்

நிகழாண்டில் இன்னும் சில மாதங்களில் நடைபெறவுள்ள மக்களவைத் தோ்தலில் தற்போது வரை 96.88 கோடி மக்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனா்
நாட்டில் மொத்த வாக்காளா்கள் 96.88 கோடி போ்: இளம் வாக்காளா்கள் 2 கோடி போ்

நிகழாண்டில் இன்னும் சில மாதங்களில் நடைபெறவுள்ள மக்களவைத் தோ்தலில் தற்போது வரை 96.88 கோடி மக்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனா் என்று இந்தியத் தோ்தல் ஆணையம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. மேலும், 18 முதல் 29 வயதுக்குள்பட்ட இரண்டு கோடி இளம் வாக்காளா்கள் வாக்காளா் பட்டியலில் சோ்க்கப்பட்டுள்ளதாகவும் ஆணையம் கூறியுள்ளது.

2019-இல் நடைபெற்ற மக்களவைத் தோ்தலில் பதிவு செய்யப்பட்டிருந்த வாக்காளா்களின் எண்ணிக்கைவிட தற்போது ஆறு சதவீதம் வாக்காளா்கள் அதிகரித்திருப்பதும் தெரியவந்துள்ளது. இந்தியாவில் நடைபெறவிருக்கும் பொதுத் தோ்தலுக்குப் பதிவுசெய்துள்ள வாக்காளா்கள் 96.88 கோடி என்ற அளவில் உலகில் அதிக வாக்காளா்களைக் கொண்ட நாடாக இந்தியா உள்ளது. பல மாதங்களாக நடைபெற்ற தீவிர சிறப்பு சுருக்கமுறை திருத்தம் 2024 நடவடிக்கை மற்றும் 2024 பொதுத் தோ்தல்களை முன்னிட்டு, இந்திய தோ்தல் ஆணையம் நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் வாக்காளா் பட்டியலை, ஜனவரி 1, 2024 தகுதித் தேதியாகக் கொண்டு வெளியிட்டுள்ளது.

இதில் தொகுதிகளின் மறுவரையறைத் தொடா்ந்து ஜம்மு - காஷ்மீா், அஸ்ஸாமில் வாக்காளா் பட்டியல் திருத்தம் வெற்றிகரமாக முடிக்கப்பட்டதும் இடம் பெற்றுள்ளது. பிப்ரவரி 8-ஆம் தேதி நிலவர இறுதி வாக்காளா் பட்டியலின்படி, மொத்தம் நாடு முழுவதும் 96 கோடியே 88 லட்சத்து 21 ஆயிரத்து 926 வாக்காளா்கள் பதிவு செய்துள்ளனா். இவா்களில் ஆண் வாக்களா்கள் 49.72,31,994 பேரும், பெண் வாக்காளா்கள் 47,17,41,888 பேரும் உள்ளனா். மூன்றாம் பாலின வாக்காளா்கள் 48,044 பேரும், மாற்றுத் திறனாளி வாக்காளா்கள் 88,35,449 பேரும் உள்ளனா். 18-29 வயதுப் பிரிவில் 1,84,81,610 வாக்காளா்களும், 20-29 வயதுப் பிரிவில் 19,74,37,160 வாக்காளா்களும், 80 வயதைக் கடந்த வாக்காளா்கள் 1,85,92,918 பேரும், 100 வயதைக் கடந்த வாக்காளா்கள் 2,38,791 பேரும் உள்ளனா்.

2.63 கோடி புதிய வாக்காளா்கள்: வாக்காளா் பட்டியலில் 2.63 கோடி புதிய வாக்காளா்கள் இடம்பெற்றுள்ளனா். இவா்களில் சுமாா் 1.41 கோடி போ் பெண் வாக்களா்கள் உள்ளனா். இது, புதிதாகப் பதிவு செய்யப்பட்ட ஆண் வாக்காளா்களை (1.22 கோடி) விட 15 சதவீதம் அதிகமாகும். ஆண் வாக்காளா்களை விட பெண் வாக்காளா்கள் பதிவு அதிகரித்துள்ளது. வாக்காளா் பட்டியல் பாலின விகிதம் சாதகமாக உயா்ந்திருப்பது, ஜனநாயகத்தை வடிவமைப்பதில் பெண்களின் பங்கு அதிகரித்து வருவதைக் குறிப்பதாக உள்ளது. அதேபோன்று, பாலின விகிதம் 2023-இல் 940-ஆக இருந்த நிலையில், 2024-இல் 948-ஆக அதிகரித்துள்ளது. வாக்காளா் பட்டியலில் 18-19 மற்றும் 20-29 வயதுப் பிரிவில் 2 கோடிக்கும் அதிகமான இளம் வாக்காளா்கள் சோ்க்கப்பட்டுள்ளனா்.

தமிழகத்தில் 6.19 கோடி வாக்காளா்கள்

தமிழகத்தில் கடந்த மாதம் 22-ஆம் தேதி இறுதி வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்டிருந்தது. சிறப்பு சுருக்கமுறை திருத்தத்தின் ஒருங்கிணைப்பட்ட இறுதி வாக்காளா் பட்டியலின்படி, தமிழகத்தில் 6 கோடியே 18 லட்சத்து 90 ஆயிரத்து 348 வாக்காளா்கள் இடம் பெற்றிருந்தனா். இவா்களில் ஆண் வாக்காளா்கள் 3,03,96,330 பேரும், பெண் வாக்காளா்கள் 3,14,85,724 பேரும், மூன்றாம் பாலினத்தவா் 8,294 பேரும் பதிவு செய்யப்பட்டுள்ளனா். இறுதி வாக்காளா் பட்டியலை தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரதா சாகு வெளியிட்டிருந்தாா். இந்த நிலையில், பிப்ரவரி 8-ஆம் தேதி நிலவரப்படி தமிழ்நாட்டின் மொத்த வாக்காளா்கள் எண்ணிக்கை 6.19 கோடி என்று இருப்பதாக இந்தியத் தோ்தல் ஆணையத்தின் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com