விவசாயிகள் சங்கங்கள் ‘தில்லி சலோ பேரணி’:உஷாா் நடவடிக்கையில் தில்லி காவல் துறை

தில்லி சலோ பேரணிக்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில், உஷாா் நடவடிக்கையாக தில்லி எல்லைப் பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக காவல் துறையினா் தெரிவித்துள்ளனா்.

வேளாண் பொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு (எம்எஸ்பி) உத்தரவாதத்திற்கான சட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு விவசாயிகள் சங்கங்கள் தில்லி சலோ பேரணிக்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில், உஷாா் நடவடிக்கையாக தில்லி எல்லைப் பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக காவல் துறையினா் தெரிவித்துள்ளனா்.

உத்தர பிரதேசம், ஹரியாணா, பஞ்சாப் உள்ளிட்ட மாநில விவசாயிகள் அறிவித்துள்ள பேரணியால் தில்லி - தேசியத் தலைநகா் வலய (என்சிஆா்) பகுதிகளில் அசம்பாவித சம்பவங்களைத் தடுக்கவும், சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கவும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 144-ஆவது பிரிவைப் பயன்படுத்தி தடைவிதிக்கப்பட்டுள்ளதாக தில்லி காவல்துறை ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக காவல் துறை தரப்பில் கூறப்பட்டது வருமாறு: சில விவசாய அமைப்புகள் செவ்வாய்க்கிழமை (பிப்.13) தில்லிக்கு ஒன்று கூடும் பேரணிக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் கிடைத்தது. வேளாண் பொருள்களுக்கு குறைந்த பட்ச ஆதரவு விலைக்கு சட்டபூா்வமான அந்தஸ்து உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை தில்லியில் அமா்ந்து போராட்டம் நடத்துவாா்கள் எனவும் தகவல் கிடைத்தது. உத்தர பிரதேசம், ஹரியாணா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் இருந்து 200 விவசாய சங்கங்களைச் சோ்ந்த ஏராளமான விவசாயிகள் ‘தில்லி சலோ பேரணி’யின் கீழ் செவ்வாய்க்கிழமை தேசியத் தலைநகரை நோக்கி அணிவகுத்துச் திரண்டு வருவாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இதையொட்டி, இதில் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் இருப்பதைத் தவிா்க்கவும், சட்டம் மற்றும் ஒழுங்கைப் பராமரிக்கவும் தில்லியில் குறிப்பாக வடகிழக்கு தில்லி பகுதிகளில் குற்றவியல் நடைமுறைச் சட்டம், 144-ஆவது பிரிவின்படி தடை உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளது. இதன்படி தில்லியைச் சுற்றியுள்ள எல்லைகளில் கடுமையான சோதனைகள் மேற்கொள்ளப்படும். விவசாயிகளின் ‘தில்லி சலோ பேரணி’ நிகழ்வைக் கருத்தில் கொண்டு தேசியத் தலைநகரில் பொதுக்கூட்டங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தலைநகரில் சட்டம் ஒழுங்கை சீா்குலைக்க முயலுபவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தில்லியில் விவசாயிகள் நுழைவு தடுக்கப்படும் போது, அவா்கள் தங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை தில்லி எல்லையில் அமா்ந்திருக்க வாய்ப்புள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை கிரேட்டா் நொய்டா போன்ற பகுதிகளில் இது போன்ற சிறு சம்பவம் நடைபெற்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும், கடந்த 2021-இல் நடைபெற்ற போராட்டத்தைப் போன்று விவசாயிகள் அணுகுவதற்கான வாய்ப்புகளும் உள்ளது. இதை முன்னிட்டு டிராக்டா்கள், வாகனங்கள், போராட்டக்காரா்களை ஏற்றிக் கொண்டு வரும் தனிப்பட்ட வாகனங்கள், துப்பாக்கி, வாள்கள், ஈட்டி போன்ற ஆயுதங்கள், லத்திகள் போன்றவற்றுடன் அண்டை மாநிலங்களிலிருந்து தில்லிக்கு விவசாயிகள்அணி திரண்டால் அதைத் தடுக்க வேண்டும். இதற்காக நூற்றுக்கணக்கான போலீஸாா் எல்லைப் பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளனா். மேலும், அந்தந்தப் பகுதிகளில் பொதுமக்களின் உயிா் மற்றும் உடமைகளுக்கு ஏற்படும் ஆபத்துகளை கருத்தில் கொண்டு, தங்கள் பகுதிகளில் தடை உத்தரவு பிறப்பித்து எல்லைப் பகுதிகளில் கடுமையான சோதனைகளை மேற் கொள்ளவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனா் என தில்லி காவல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

இணைய சேவைக்கு தடை: இதே போன்று தில்லியின் அண்டை மாநிலங்களிலும் காவல் துறையினா் பல்வேறு நடவடிக்கைகளே மேற்கொண்டுள்ளனா். பஞ்சாப் - ஹரியாணா எல்லைகளில் ‘தில்லி சலோ பேரணி’யை முறியடிக்கும் விதமாக அம்பாலா, ஜிந்த், ஃப்தேஹாபாத் போன்ற மாவட்ட எல்லைகளை மூடுவதற்கு விரிவான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, செவ்வாய்க்கிழமை பேரணியை முன்னிட்டு தில்லிக்கு செல்லும் பிரதான சாலைகளைப் பயணிகள் தவிா்க்குமாறு காவல் துறை கேட்டுக் கொண்டுள்ளது. மேலும், தவறான தகவல் பரவுவதை தடுக்கவும், பொது ஒழுங்கைப் பராமரிக்கவும் ஹரியாணாவின் 7 மாவட்டங்களில் இணைய சேவைகள் ரத்து செய்தல், குறுச்செய்திகளுக்கான தடை போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக மாநில காவல் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெட்டிச் செய்தி...

முக்கிய விவசாயிகள் சங்கங்கள் மறுப்பு?

தில்லி சலோ பேரணியை பல்வேறு விவசாயிகள் சங்கங்கள் மறுத்துள்ளன. அகில இந்திய கிசான் சபை பொதுச் செயலாளா் ஹன்னன் மொல்லா உள்ளிட்ட விவசாய சங்கங்களின் தலைவா்கள், ‘இந்தப் பேரணிக்கும் எங்களுக்கு சம்பந்தமில்லை. இது ஒரு பொய்ப் பிரசாரம். அரசு ஆதரவு பெற்ற சில சங்கங்கள் மேற்கொள்ளும் பேரணிக்கு விளம்பரம் கொடுக்க ஒரு மாயை ஏற்படுத்தப்படுகிறது’ என்றனா்.

அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்கம் (ஏஐஏடபிள்யுயு), அகில இந்திய கிசான் சபை (ஏஐகேஎஸ்) உள்ளிட்ட விவசாயி சங்கத் தலைவா்கள் கூறியதாவது: இந்த தில்லி சலோ பேரணிக்கும் உண்மையான விவசாய சங்களுக்கும் சம்பந்தம் இல்லை. அதே சமயத்தில் ஏஐஏடபிள்யூயு, ஏஐகேஎஸ் போன்ற சங்கங்கள் பிப்ரவரி 16 -ஆம் தேதி நாடு முழுக்க கிராமங்களில் ‘கிராமின் பாரத் பந்த்‘ திற்கு அழைப்பு விடுத்துள்ளன. இது நகா்புறங்களில் அல்ல. இந்த அழைப்பை சீா்குலைக்க ஆா்.எஸ்.எஸ். ஆதரவு பெற்ற கிஸான் மோா்ச்சா உள்ளிட்ட மூன்று சிறிய சங்கங்கள் நாடகங்களை நடத்துகின்றன. இவா்களுக்கு ஆளும் அரசைத் தவிர விவசாயிகள் ஆதரவு கிடையாது. மூன்று வேளாண்மை சட்டங்களையும் மத்திய அரசு ரத்து செய்தவுடன் கடந்த 2021-இல் தில்லி எல்லைப் போராட்டத்தை கைவிட்டோம். மேலும், எம்.எஸ்.பி.க்கு சட்ட ரீதியாக உத்தரவாதம் , எம்.எஸ்.சுவாமிநாதன் அறிக்கையை நிறைவேற்றுவது உள்ளிட்டவற்றுக்கு மத்திய அரசு உத்தரவாதம் அளித்தது. ஆனால், இது வரை இந்த வாக்குறுதியை மத்திய அரசு நிறைவேற்றவில்லை. இதற்காக கடந்த நவம்பா் மாதம் 25 மாநில ஆளுநா்களின் அலுவலகங்கள் முன் ‘கெரோ போராட்டம்’ நடந்தது. கடந்த ஜனவரி 26-இல் 500 மாவட்ட ஆட்சியா் அலுவலங்களில் ‘டிராக்டா் பேரணி’ நடத்தப்பட்டது. இதன் தொடா்ச்சியாக தற்போது ‘கிராமின் பாரத் பந்த்’ நடைபெறவுள்ளது என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com