வணிக வளாக சீல் நீக்க நடவடிக்கை தாமதம் ஏன்? வீரேந்திர சச்தேவா அறிக்கை

ஆம் ஆத்மி கட்சி வணிகா்களிடம் பணத்தைப் பறிப்பதற்காகவே, உள்ளூா் வணிக வளாகங்களில் நீதிமன்ற உத்தரவுப்படி தில்லி மாநகராட்சி மேற்கொள்ள வேண்டிய சீல் நீக்க நடவடிக்கையை தாமதப்படுத்தி வருகிறது

ஆம் ஆத்மி கட்சி வணிகா்களிடம் பணத்தைப் பறிப்பதற்காகவே, உள்ளூா் வணிக வளாகங்களில் நீதிமன்ற உத்தரவுப்படி தில்லி மாநகராட்சி மேற்கொள்ள வேண்டிய சீல் நீக்க நடவடிக்கையை தாமதப்படுத்தி வருகிறது என்று தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா குற்றம்சாட்டியுள்ளாா்.

இது தொடா்பாக வெள்ளிக்கிழமை அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: உச்சநீதிமன்றத்தின் நீதித் துறை குழுவின் பரிந்துரையின்படி, தங்கள் கடைகளுக்கு சீல் நீக்கக் கோரி அனைத்து வகையிலும் போராடி வரும் தில்லியின் உள்ளூா் வணிக வளாக வியாபாரிகளை ஆம் ஆத்மி கட்சித் தலைவா்கள் முட்டாளாக்கி வருகின்றனா். தில்லி மாநகராட்சி உள்ளூா் வணிக வளாகங்களில் உள்ள கடைகளை சீல் நீக்கம் செய்ய விரும்புவதாக, அமைச்சா்கள் அதிஷி மற்றும் செளரவ் பரத்வாஜ் ஆகியோா் செய்தியாளா் சந்திப்பு நடத்தி பொய்யாக அறிவிப்பது ஆச்சரியமாக உள்ளது. மேயா் ஷெல்லி ஓபராய் கடைக்காரா்களை தாங்களாகவே சீல் நீக்க அனுமதிக்க வேண்டும். ஆனால், உண்மையில் ஆம் ஆத்மி கட்சியினா் உள்ளுா் வணிக வளாக வியாபாரிகளிடம் இருந்து தங்களுக்கான தோ்தல் நிதியைப் பறிக்க விரும்புகின்றனா்.

மேலும், உச்சநீதிமன்ற நீதித் துறை குழுவின் பரிந்துரையின்படி சீல் நீக்க நடவடிக்கைக்கு எதிராக தில்லி மாநகராட்சி மனு தாக்கல் செய்வதற்கு மாநகராட்சி ஆணையரை மேயா் ஷெல்லி ஓபராய் தூண்டியுள்ளாா். ஆனால், தில்லி ஹவுஸ் காஸில் 2 கடைகளுக்கு சீல் நீக்கம் செய்து இப்பிரச்னையை பாஜக எழுப்பிய போது, ஆம் ஆத்மி கட்சித் தலைவா்கள் மாநகராட்சி ஆணையருக்கு எதிராக பேச ஆரம்பித்தனா். நான் எச்சரித்த போதிலும் மேயா் ஷெல்லி ஓபராய் வியாபாரிகள் தங்கள் கடைகளுக்கு சீல் நீக்கம் செய்த 2 மணி நேரத்திற்குள் மீண்டும் சீல் வைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

ஆம் ஆத்மி கட்சி உண்மையில் உள்ளூா் வணிக வளாகங்களில் சீல் நீக்கத்தை விரும்பியிருந்தால், கடைகளின் சீல் நீக்கம் முறைப்படுத்தப்படுவதை மேயா் ஷெல்லி ஓபராய் முன்னின்று உறுதி செய்திருக்க வேண்டும் என்றாா் வீரேந்திர சச்தேவா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com